2009-05-23 11:16:45

இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா . மறையுரை .மாற்கு 16,15–20 .24-05.


இன்றைய வழிபாட்டின் முக்கிய விளக்கம் இன்றைய முதல்வாசகத்தில் வருகிறது . இயேசு சீடர்கள் கண்ணெதிரே மேகங்களிடையே அவர்களிடமிருந்து மறைந்தார் .

7 வாரங்களுக்கு முன்னர் இயேசு இறந்தார் . நல்லடக்கம் செய்யப்பட்டார் . பாஸ்காத் திருநாளில் அவர் உயிரோடு எழுப்பப்பட்டார் . இன்று அவர் விண்ணகம் சென்று தம் தந்தையின் வலப்புறம் அமர்கிறார் . அவர் ஒலிவ மலையிலிருந்து விண்ணெழுந்து சென்றார் . அவருடைய விண்ணெழுதல் அவர் பாவத்தின்மீதும் சாவின் மீதும் கொண்ட வெற்றியின் மகிமைக்குச் சான்றாக உள்ளன . அவரை ஆண்டவர் என அழைப்பதற்கு அவர் விண்ணெழுந்த விழா நமக்கு நினைவூட்டுகிறது . நம்மை அடிமைப்படுத்தும் எல்லாத் தளைகளிலிருந்தும் நாமும் ஒருநாள் விடுதலை பெறுவோம் .



விண்ணகம் சென்ற ஆண்டவர் இயேசுவுக்கும் வானதூதர்களுக்கும் நடந்த உரையாடல் பற்றி ஒரு கற்பனைத் துணுக்குச் செய்தி இவ்வாறு போகிறது . இயேசுவின் மனிதர் வாழும் உலகப்பணி எப்படிச் சென்றது என அவர்கள் கேட்டிருக்கிறார்கள் . இயேசு தமது பிறப்பு , பொது வாழ்வு மற்றும் சிலுவைச் சாவு வழியாக வந்த மீட்புப் பற்றிக் கூறியிருக்கிறார் . அப்போது வானதூதர்கள் நீவிர் வானகம் வந்து விட்டதால் இனி உமது பணியை யார் தொடர்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் . உலகில் இருந்தபோது இயேசுவை அன்பு செய்த சீடர்கள் பற்றிக்கூறிய இயேசு அவர்கள் அவரது பணியைத் தொடர்வார்கள் எனக் கூறியிருக்கிறார் . என்ன உம்மைத் தெரியாது எனக்கூறிய பேதுருவும் , உம்மைக் கைது செய்தபோது உம்மைவிட்டு ஓடிவிட்ட சீடர்களுமா உம் பணியைத் தொடரப்போகிறார்கள் என வானதூதர்கள் கேட்டிருக்கிறார்கள் . அதற்கு இயேசு எனக்கு வேறெந்தத் திட்டமும் இல்லை . அவர்களைத்தான் நம்பி இருக்கிறேன் . அவர்கள் என் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் எனக் கூறியிருக்கிறார் . இயேசுவிடம் வேறெந்தத் திட்டமும் இல்லை . உலகம் முடியும் வரை தம் சீடரோடு இருப்பதாகக் கூறிய இயேசு புதிய சக்தியையும் , அருளையும் ஈந்து நாம் அவருடைய சாட்சிகளாக இருக்க வழிகாட்டுவார் . நாம்தாம் அவருடைய போதனைகளுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் . உலகின் கடை எல்லைவரை நாம்தாம் அவருக்குச் சாட்சிகளாக இருக்கவேண்டும் .



விண்ணகம் சென்ற ஆண்டவர் மண்ணகத்தைத் தவிக்கவிட்டு விட்டுவிடவில்லை . அன்று ஒரு குறுகிய வட்டாரத்தைவிட்டு , பாலஸ்தீனத்தைவிட்டுச் சென்றார் . இன்று உலகனைத்தோடும் தொடர்பு கொண்டு வாழ்கிறார் . கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார் என்பதன் பொருள் இறைவனின் திருத்தூயகத்தில் இறைபணி ஆற்றுபவராய் இருக்கிறார் . தம் வழியாகக் கடவுளை அணுகிச் செல்வோரை முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார் . அவர்களுக்காக பரிந்து பேசுவதற்கென என்றுமே வாழ்கிறார் என்பதாகும் . எனவே இயேசு விண்ணகம் சென்றது நமக்காக , நமக்குத் தந்தையிடம் பரிந்து பேசுவதற்காக . பரம தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை நம்மில் இன்றைய விழா எழுப்பவேண்டும் .



விண்ணகத்தில் மட்டுமன்றி மண்ணகத்திலும் இயேசுவின் பணி தொடர்கிறது . எங்கெல்லாம் நற்செய்தி போதிக்கப்படுகிறதோ , நற்செய்தி மதிப்பீடுகள் வாழ்க்கையாகின்றனவோ அங்கெல்லாம் அவரே செயலாற்றி வருகிறார் . அவர் பெயருக்கென்று தனி சக்தி உண்டு .அவர் பெயரை இறைஞ்சி வேண்டுவோர் ,அவர் பெயரிலே நம்பிக்கை வைப்போர் ,தம் பாவங்களிலிருந்து மீட்படைவர் .அருங்குறிகள் பல செய்வர் . வெள்ளியோ பொன்னோ அல்ல . இயேசுவின் பெயரால் முடவர்கள் எழுந்து நடக்க ஆணையிடும் தூய பேதுருவின் செயல் இயேசுவின் சொற்களை உண்மைப்படுத்துகின்றன . இன்றும் நம்மிடையே இயேசுவின் சொற்கள் பொய்த்துவிடவில்லை என்பதற்குச் சாட்சியங்கள் தேட வேண்டியதில்லை . எனவே விண்ணெழுந்த இயேசு மண்ணக மக்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார் என்பதை ஆழ்ந்து விசுவசிப்போம் . அந்த நம்பிக்கை நம்மை வழி நடத்துவதாக .



உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்றார் தலைவர் . தலைவர் இட்ட பணியைத் தலைமேற்கொண்டு செயலாற்றுகின்றனர் சீடர் . சீடர்கள் புறப்பட்டுப்போய் எங்கும் தூது உரைத்தனர் . தூய ஆவியானவரால் தூண்டப்பட்ட திருத்தூதர்கள் துன்ப துயரங்களைத் தூசியெனக் கருதி உயிரையே ஒரு பொருட்டாக எண்ணாது உலகெலாம் சென்று நற்செய்தி போதித்த வரலாறு நாம் அறியாததன்று . அன்று ஆவியாரின் உதவியால் அவர்கள் விதைத்த வித்தின் பலன்தான் நாம் எல்லாம் . முதல் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது . நான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற முறையில் நற்செய்தியின் செல்வத்தை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்கிறோமா . நாம் பெற்ற பெறுதற்கு அரிய பேறாகிய இயேசுவை நாம் பிறர்க்கு அளிக்கவேண்டாமா . நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் நற்செய்திப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ஊக்கமளித்தும் நாமும் இயேசுவின் நற்செய்தித் தூதர்களாக இருப்போம் . உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்பது இயேசுவின் கட்டளை .



பிரியாவிடை தரும் இயேசுவை நாம் ஒருநாள் மறுவாழ்வில் சந்திபோம் . அதுவரை நம்முடைய பற்று உறுதியாலும் செபத்தாலும் அவரோடு தொடர்பு கொள்வோம் . அவரது நற்செய்தியை நாளும் படித்து அதை வாழ்வாக்குவோம் . நம்மோடு வாழும் சகோதர , சகோதரிகளுக்கு நம்முடைய பிறரன்புச் சேவையால் நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வோம் .








All the contents on this site are copyrighted ©.