2009-05-19 17:38:14

நற்செய்தி வாசகம் திருத்தூதர் மத்தேயு 18 , 21- 35 .

மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை .


நற்செய்தி வாசகம் திருத்தூதர் மத்தேயு 18 , 21- 35 .



மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை .

மறக்கமுடியாத முறையில் நாம் காணும் இந்தக் கருத்துக் கதை இப்பகுதிக்கு முன் சென்ற விவிலியப் பகுதியைச் சுருக்கிக் கூறுகிறது . கிறிஸ்துவின் உள்ளக்கிடக்கையை நன்கு உணர்ந்த மத்தேயு மிக அருமையாக இந்தக் கதையை வடித்துத் தந்துள்ளார். இந்த உவமை மற்ற நற்செய்திகளில் தரப்படவில்லை . கடன் வாங்கியவர் வழியாகத்தான் கதையில் கருத்து தெளிவாக்கப்படுகிறது . பெருமளவு கடன்பட்டு மன்னிக்கப்பட்ட ஒருவர் சிறியோராகிய ஒருவரை அன்பு செய்ய மறுக்கிறார் . காணாமல் போன ஆட்டைப் பற்றி அவருக்குக் கவலையில்லை . அவரது கடன் ஏழுமுறை எழுபது முறை மன்னிக்கப்பட்டும் சிறிய கடன் பட்ட ஒருவரைச் சிறையில் தள்ளும் கொடுமையைப் பார்க்கிறோம் . இவ்வாறு இயேசுவின் போதனைகள் யாவும் நாடகப் பாணியில் அடுத்தடுத்துத் தெளிவாக வருவதைக் காண்கிறோம் .தூய மத்தேயு மட்டுமே இந்தக் கதையைத் தந்துள்ளார் . இக்கதையின் எளிமை , உண்மையை விளக்கிக்கூறும் விதம் , இரக்கப்படுமாறு வலியுறுத்தும் திறன் , அது கூறும் உண்மை ஆகியவை இந்தக் கதையை மிகச் சிறப்பு வாய்ந்ததாக ஆக்கியுள்ளன .



உவமை என்பது ஒரு மையக் கருத்தை வலியுறுத்துவது . அதன் ஒவ்வொரு பகுதியையும் கூறுபோட்டு பொருத்திப் பார்க்கக் கூடியது அல்ல . ஆயிரம் தெனாரியம் என்பதற்கு அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை . சிறையாளர் என்பதையும் தோண்டி ஆராயவேண்டிய அவசியம் இல்லை . கதையின் மையக் கருத்து இறுதி வசனத்தில் வருகிறது . “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனதார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” .



அரசனுக்கும் பணியாளனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள் . பணியாளன் கோடிக்கணக்கான பணத்தை மன்னருக்குக் கடன் பட்டிருந்தார் . அந்தப் பணியாளரிடம் ஏழை ஒருவர் மிகக் குறைந்த தொகையையே , கடன்பட்டிருந்தார் . அது ஒரு மிகப்பெரிய வேறுபாடு . அடுத்த வேறுபாடு – காலம் தாழ்த்தித் தருவதாக மட்டுமே அனுமதி கேட்டவருக்கு மன்னன் மிகப்பெரிய தொகையையே மன்னித்திருந்தார் . ஆனால் அந்த அரசனின் பணியாளன் ஏழைக்கு காலம் தாமதித்துக் கூட தர அனுமதி மறுத்துவிட்டார் . உடனடியாகச் சிறையில் தள்ளிவிட்டார் . இந்த மாபெரும் வேறுபாடு பகலுக்கும் இரவுக்கும் உள்ள வேறுபாடு , கடவுளுக்கும் நமக்குமிடையே உள்ள வேறுபாட்டைப் படம் பிடித்துக் காட்டவில்லையா ? . கதை மிகைப் படுத்தி தொகுக்கப்பட்டுள்ளதா . இல்லை , மிகைப்படுத்தப்படவில்லை . நாம் செபிக்கும்போது எங்கள் குற்றங்களை மன்னித்தருளும் எனச் செபிக்கிறோம் . எவ்வளவு பாவங்கள் புரிந்துள்ளோம் . ஒரு நாளில் எவ்வளவு குற்றங்களைப் புரிகிறோம் . நாம் கூறும் பொய்கள் , நம்முடைய தவறான எடுத்துக்காட்டுக்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன .



நமக்கு எதிராகச் செய்யப்படும் துரோகங்கள் , அநீதிகள் அனைத்தும் நாம் கடவுளுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களோடு , பிறருக்கு எதிராகப் புரிந்த குற்றங்களோடு ஒப்பிடப்படும்போது இலட்சத்தில் ஒரு பகுதியே , மிக மிகக் குறைவே . நாம் புரிந்த குற்றங்களை நாம் மறந்துவிடுகிறோம் . நாம் பெற வேண்டிய கடல் போன்ற பெருமளவு மன்னிப்பை உணர்ந்தோமென்றால் நாம் பிறரை மன்னியாது இருப்போமா ?



நாம் பெறவேண்டிய மன்னிப்பு கடவுளோடு தொடர்புடையது என்பதை மறந்துவிடக்கூடாது . நாம் கடவுளின் இரக்கத்தைப்பற்றிப் பேசுகிறோம் . ஆனால் மனித நிலைமையை நாம் மறந்துவிடுகிறோம் . கடவுள் நம்மை எப்போதும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார் . ஆனால் பிறரை மன்னியாத உள்ளத்திற்குள் அவரால் நுழைய இயலாது . நமக்கு எதிராக நாமே நம் உள்ளக் கதவை தாளிட்டுள்ளோம் . தம் விருப்பப்படி அவ்வப்போது மாறிக் கொள்பவர் அல்லர் கடவுள் . தாம் ஒன்றைத் தருவதற்கு அவர் நம்மிடம் பிரதி ஒன்றைக் கேட்பதில்லை . அன்பைப் பொறுத்த வரையில் அவரால் யாருக்கும் இல்லை என்று சொல்லமுடியாது . பிறரை மன்னிக்க மறுக்கும் ஒருவர் தமக்கு எதிராகத் தாமே கடவுள் நுழைவதற்குக் கதவை மூடிக்கொள்கிறார் . இயேசு கற்றுக்கொடுத்த செபத்தில் பிறர் குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னித்தருளும எனச் செபிக்கிறோம் . இது வாணிபம் அல்ல . கடவுள் வரவு செலவு குறிப்பேட்டில் குறித்து வைத்து கணக்குப் பார்க்கிறவர் அல்லர் . அவர் நம்முடைய வானகத்தந்தை . அப்படியென்றால் நாம் மன்னிப்பதும் அவர் மன்னிப்பதும் குடும்ப உறவில் நெருக்கமான உறவைப் பிரதிபலிப்பதாகும் . ஒருவர் நான் அடுத்தவரை மன்னிக்கவே முடியாது எனக்கூறினால் அவர் மன்னிப்பும் பெறக்கூடிய நிலையில் இல்லை . மன வருத்தத்தோடு தமது குற்றத்தை உணராது பிறரைப் பழிவாங்கும் நோக்கோடு அவர் இருக்கிறார் . அவர் கடவுளைப்பற்றி நினைக்கவில்லை . தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார் . மன்னிக்க விரும்பாத மனம் தம் உள்ளக்கதவைத் தாளிட்டுக்கொள்கிறது . கடவுளின் அருள் மேகம் அவரைச் சூழ்ந்திருந்தாலும் கதவைப் பூட்டிக்கொள்வதால் கடவுள் தரும் மன்னிப்பு என்னும் அருளை பெறமுடியாது போகிறது . கடவுள் நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார் . ஆனால் நாம் மன்னிப்புப் பெறும் தகுதியை இழந்து நிற்கிறோம் .



கதையின் முடிவில் மன்னர் கோபம் கொள்வதும் , அநீதியான பணியாளர் சிறையில் தள்ளப்படுவதும் கடவுளின் நீதியோடு நடந்து கொள்வதன் அடையாளங்கள் . கடவுள் நம் வானகத்தந்தை , ஆனால் நம்மை எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிடக்கூடியவர் அல்லர் . இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது அநீதியான பணியாளர் தானே தம்மைச் சிறைவைத்துக் கொள்கிறார் . இரக்கத்தோடு நீதி வழங்கும்போது மனிதன் தெய்வமாகிறான் எனக் கவிஞன் பாடுவது உண்மைதான் . கடவுளுடைய இரக்கத்தை உணரவோ அறியவோ முடியவில்லை எனப் பலர் கூறுவதைக் கேட்கிறோம் .. அவர்கள் பிறர் குற்றங்களை மன்னிக்கிறார்களா . தவறுவது மனித இயல்பு . மன்னிப்பதோ தெய்வீகம் .










All the contents on this site are copyrighted ©.