2009-05-16 15:31:13

திருத்தந்தையின் மத்திய கிழக்குப் பகுதிக்கானத் திருப்பயணம், நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது, இந்திய பல்சமயத் தலைவர்கள்.


மே16,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மத்திய கிழக்குப் பகுதிக்கானத் திருப்பயணம், துன்புற்றுள்ள அப்பகுதிக்கு மட்டுமல்ல, மதங்களுக்கு இடையேயான உறவுகளுக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது என்று கூறி அவரின் இத்திருப்பயணத்தை வரவேற்றுள்ளனர் இந்தியாவின் பல்சமயத் தலைவர்கள்.

திருத்தந்தையின் ஈடுபாடு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்க்கு இடையேயான பிரச்சனையைத் தீர்க்க உதவ முடியும் மற்றும் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று புதுடெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் இசுலாமியத்துறைத் தலைவர் அக்தாருல் வாசுய் தெரிவித்தார்.

திருத்தந்தையின் இத்திருப்பயணம் குறித்துப் பேசிய புதுடெல்லியிலுள்ள யூதமதக்குரு ராபி எசக்கியேல் ஐசக் மெலேக்கார், இஸ்ரேலிலுள்ள தேசிய யூதப்படுகொலை நினைவாலயத்திற்குத் திருத்தந்தை சென்று அங்கு புதைக்கப்பட்டுள்ள யூதர்களுக்கு மரியாதை செலுத்தியது இந்தியாவிலுள்ள யூதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றார்.

இன்னும், திருத்தந்தை பல்சமய உரையாடலுக்கு அழைப்புவிடுத்ததை அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள உலகளாவிய இந்து கழகத் தலைவரான ராஜன் ஜெட் வரவேற்றுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.