2009-05-16 15:30:14

திருத்தந்தையின் புனிதபூமிக்கானத் திருப்பயணம், பல்சமயத்தவர் உறவுகளில் புத்துயிரைக் கொணர்ந்துள்ளது, திருச்சபை அதிகாரி


மே16,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புனிதபூமிக்கானத் திருப்பயணம், யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்க்கிடையேயான உறவுகளில் புத்துயிரைக் கொணர்ந்துள்ளது என்று திருச்சபை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

மேய்ப்புப்பணி சுற்றுலா மற்றும் திருப்பயணத் திருப்பணி வழியாக நற்செய்தி அறிவிக்கும் வத்திக்கான் நிறுவனமான ஓப்பேரா ரொமானா பெல்லெகிரிநாஜ்ஜியின் நிர்வாகப் பிரதிநிதி அருள்திரு சேசர் அத்துயிர் இவ்வாறு கூறினார்.

எருசலேமிலுள்ள திருக்கல்லறை இடமானது இயேசு கிறிஸ்து உயிர்த்த இடமாகும், இது மனித வரலாற்றின் புத்துயிரைக் குறித்து நிற்கின்றது என்ற அவர், திருத்தந்தையின் புனித பூமிக்கானத் திருப்பயணம், யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்க்கிடையேயான உறவுகளின் புத்துயிருக்கான தருணமாக இருக்கின்றது என்றார்.

தற்போது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்க்களுக்கும் இடையே நிலவும் நல்லுறவு போன்று இந்த 2000 ஆண்டு வரலாற்றில் இருந்ததில்லை என்று இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பெரெஸ் திருத்தந்தையிடம் இப்பயணத்தில் கூறியது ஓர் எடுத்துக்காட்டு என்றும் அருட்திரு அத்துயிர் சுட்டிக் காட்டினார்.

உலகின் பிற பாகங்களிலிருந்து தனிமையாக உணரும் புனித பூமி கிறிஸ்தவர்கள் மத்தியில் இப்பயணம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.