2009-05-16 15:32:02

சுவாட் பகுதி கிறிஸ்தவ அகதிகளுக்குப் புகலிடம் அளித்து வருகிறது தலத்திருச்சபை


மே16,2009. சுவாட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாலிபானுக்கு எதிரான பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளினால் அங்கிருந்து வெளியேறும் கிறிஸ்தவ அகதிகளுக்குப் புகலிடம் அளித்து வருகிறது தலத்திருச்சபை.

தாலிபான்களை ஒழிப்பதற்கான அரசின் முழுவீச்சான நடவடிக்கை இம்மாதம் ஏழாம் தேதி தொடங்கியதை முன்னிட்டு தொடர்ந்து இடம் பெறும் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு அஞ்சி கிறிஸ்தவக் குடும்பங்கள் வெளியேறியுள்ளன.

மேலும், கடந்த 11 நாட்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் கடும் மோதலில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் அகதிகளாகியுள்ளனர், இவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் சிறார் என்று என்று ஐ.நா. அகதிகள் அமைப்பின் இயக்குனர் அந்தோணியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

அகதிகளில் 18 விழுக்காட்டினர் 12 முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அப்பகுதியின் நிலவரம் குறித்து அறிவித்த அகதிகள், முகமூடி அணிந்த துப்பாக்கி மனிதர்கள் முக்கிய சந்திகளை நிறைத்துள்ளனர் மற்றும் தாலிபான்கள் அவர்கள் விரும்பும் ஒவ்வொருவரையும் கொல்லுகின்றனர் என்று கூறினர்.

வழக்கமாக பயணச் சீட்டுக்கு ஏறத்தாழ 80 ரூபாய் கட்ட வேண்டிய பேரூந்துக்கு 2000 ரூபாய் செலுத்தி வாந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே பாகிஸ்தான் அரசுத்தலைவர் ஆசிப் ஜர்தாரி, அரசின் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கேட்டு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்








All the contents on this site are copyrighted ©.