2009-05-15 14:39:46

இயேசு நடந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வாழ திருத்தந்தை வலியுறுத்தல்


மே15,2009. இறைவார்த்தை மனிதஉரு எடுத்த இவ்விடத்தில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. புனித பெர்னார்டு விளக்குவது போல, உலக வரலாற்றில் புதியதும் திட்டவட்டமானதுமான ஓர் அத்தியாயத்தைத் தொடங்கும் கடவுளுக்கும் மனுக்குலத்திற்கும் இடையேயான முழுநிறைவான திருமண ஐக்கியத்திற்கு மரியா சம்மதம் தெரிவிக்கும் அவரது வார்த்தைக்காக விண்ணகம் முழுவதும் காத்திருந்தது. உமது வார்த்தையின்படியே ஆகட்டும் என்று மரியா சொன்னார். இறைவார்த்தையும் மனிதஉரு எடுத்தது. கடவுளின் இந்த மனிதாவதாரப் பேருண்மையின் வியப்பானது, இறைவனின் புதுப்பிக்கும் சக்தியின், நம்மீதான அவரது அன்பின், நம்மோடு ஒன்றிப்பதற்கான அவரது ஆவலின் வரம்பில்லா வாய்ப்புக்களைப் புரிந்து கொள்வதற்கு நம்மைத் திறப்பதற்குத் தொடர்ந்து அழைப்புவிடுக்கிறது. மேலும், கடவுள் நமது வரலாற்றில் தொடர்ந்து தலையிட்டு தமது படைப்பாற்றல் சக்தியால் செயல்படுவார். இதனால் மனிதனால் இயலாதது என்று எண்ணும் இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார் என்ற திருத்தந்தை, இயேசு வாழ்ந்த இந்த நாசரேத்தில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து இருக்குமாறு வலியுறுத்தினார்.

இஸ்ரேலிலும் பாலஸ்தீனாவிலும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருக்கின்றனர். சிலவேளைகளில் அவர்களின் குரல் அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று உணருகிறார்கள். மிகுந்த பாதுகாப்பு மற்றும் வசதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவர்கள் இவ்விடத்தைவிட்டு வெளியேறியுள்ளனர். எனினும் எஞ்சியுள்ள கிறிஸ்தவர்கள், நாசரேத்தில் மறைந்த வாழ்வு வாழ்ந்த மரியாவின் முன்மாதிரிகையில் சக்தி பெற்று அங்கு தொடர்ந்து வாழுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள், கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து அவரின் பிரசன்னத்தால் புனிதப்படுத்தப்பட்ட இந்த இடத்தில் இருக்கவும் ஊக்கப்படுத்தினார். அதோடு, கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாய் இருப்பது மிகவும் இன்றியமையாதது. அதன்மூலம் புனித பூமியிலுள்ள திருச்சபை கடவுளோடும் முழு மனித சமுதாயத்தோடும் ஒன்றித்திருப்பதற்கான அடையாளமாகவும் கருவியாகவும் தெளிவாக அங்கீகரிக்கப்படும் என்று சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.