2009-05-14 13:21:24

திருத்தந்தையின் புனித பூமிக்கானத் திருப்பயண விளக்கம் - பெத்லகேமிலும் நாசரேத்திலும் திருத்தந்தை


மே14,2009. நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்: அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். உலகின் மீட்பராம் இயேசு பிறக்கவிருந்த பெத்லகேமைப் பற்றி விவிலியத்தில் இவ்வாறு நாம் வாசிக்கிறோம். உலகின் மீட்பரை ஈன்றெடுத்த இந்த பெத்லகேமில் இன்று மக்கள் நீதியுடன்கூடிய அமைதியுடன் வாழ முடியவில்லை. எந்நாளும் அழுகையும் பதட்டமுமே சோர்வும் நிலவுகின்றன. மீக்கா இறைவாக்கினர் சொன்னது போல இந்நகர் இன்று சிறியதாகக்கூட இல்லை. அங்கு இடம் பெறும் வன்முறைகளால் பல பெட்டிவடிவ கட்டிடங்களையே காண முடிகின்றது. இவ்வாறு உடலிலும் உள்ளத்திலும் சோர்ந்துள்ள விசுவாசிகளைச் சந்தித்து உங்கள் துயரங்களில் நீங்கள் தனியாக இல்லை, திருச்சபையும் நானும் என்றும் உங்களோடு இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தி வருகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புனிதபூமியில் ஒரு வாரத் திருப்பயணம் மேற்கொண்டு வரும் திருத்தந்தை, இப்புதன்கிழமை வெஸ்ட் பேங்கிலுள்ள பாலஸ்தீனிய பகுதிகளுக்குச் சென்றார். பெத்லகேமில் அவர் ஆற்றிய உரையில் பாலஸ்தீனியர்க்கான தனிநாட்டிற்கு அழைப்புவிடுத்தார். மாலை 4 மணியளவில் பெத்லகேம் எய்டா அகதிகள் முகாமைப் பார்வையிட்ட திருத்தந்தை உரையும் நிகழ்த்தினார்.

பாலஸ்தீனியப் பகுதியிலுள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றான இந்த எய்டா அகதிகள் முகாமில் ஏறத்தாழ 13 இலட்சம் பாலஸ்தீனிய அகதிகள் உள்ளனர். இங்குள்ள மக்கள், 1948ம் ஆண்டில் இஸ்ரேல் தனிநாடு உருவாக்கப்பட்ட போதும் பின்னர் 1967ல் நடைபெற்ற ஆறு நாட்கள் சண்டைக்குப் பின்னரும் அகதிகளானவர்கள். ஐ.நா.வின் கணிப்புப்படி 2008ம் ஆண்டில் சுமார் 46 இலட்சம் பாலஸ்தீனிய அகதிகள் இருந்தனர். இவர்களில் ஜோர்டன், லிபியா, சிரியா, காஸா போன்ற இடங்களிலுள்ள முகாம்களில் வாழ்கின்றனர்.

இந்த எய்டா முகாம் மக்களைத் தேற்றி ஆசீர்வதித்த பின்னர் அங்கிருந்து 3 கிலோ மீட்டரிலுள்ள பெத்லகேம் அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. அங்கு காஸா மற்றும் சிஸ்ஜோர்டன் பகுதி பாலஸ்தீனிய பிரதிநிதி குழுவைச் சந்தித்தார். பின்னர் பிரியாவிடை நிகழ்ச்சியாக முதலில் பாலஸ்தீனியத் தலைவர் மகமுத் அப்பாஸ் திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார்.

பின்னர் திருத்தந்தையும் உரை நிகழ்த்தினார்.

பின்னர் அங்கிருந்து 10 கிலோ மீட்டரிலுள்ள எருசலேமிலுள்ள அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி இல்லத்திற்குக் காரில் பயணமானார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் எல்லைப்புறத்திலுள்ள வழியில் ராக்கேல் கல்லறையின் கதவு எனப்படும் இடத்தை அவரது கார் கடந்து சென்றது. எருசலேம் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி இல்லத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. இத்துடன் அவரது புதன்தின நிகழ்வுகள் முற்றுப் பெற்றன.

இவ்வியாழன் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் ஏழாவது நாள். உள்ளூர் நேரம் காலை 7 மணி 15 நிமிடங்களுக்கு எருசலேம் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி இல்லத்திலிருந்து ஸ்கோபுஸ் மலைக்குக் காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் நசரேத்துக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. இயேசு மரியா வளன் என்ற திருக்குடும்பம் வாழ்ந்த இந்தப் புனித நகரில் பிரேச்சிபிசே மலைக்கருகில் திருப்பலி நிகழ்த்தினார். புனிதபூமியில் கத்தோலிக்கத் திருச்சபை கடைபிடித்த குடும்ப ஆண்டை நிறைவு செய்வதாய் இத்திருப்பலி இருந்தது. இந்நாள் சர்வதேச குடும்ப தினமுமாகும்.

கலிலேயாவுக்கான கிரேக்க மெல்க்கித்தே ரீதித் தலைவர் பேருட்திரு எலியாஸ் சாக்கூர் முதலில் திருத்தந்தையை வாழ்த்திப் பேசினார். புனித பூமியில் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தையின் நன்னெறி மற்றும் ஆன்மீக ஆதரவு தேவை. இவர்கள் தங்களின் குடியுரிமை மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் வாழ்வதாகவும் கூறினார். இத்திருப்பலியில் பங்கு கொண்ட ஏறத்தாழ 40 ஆயிரம் விசுவாசிகளுக்கு மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை.

இத்திருப்பலியின் இறுதியில் சர்வதேச குடும்ப மையம், திருத்தந்தை 2ம் ஜான் பவுல் நினைவு பூங்கா, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான அடிக்கற்களை மந்திரித்தார் பாப்பிறை. அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி அங்கிருந்து நாசரேத் பிரான்சிஸ்கன் துறவு மடம் சென்று அங்கு மதிய உணவருந்தினார். பிற்பகல் 2.50 மணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெனியமின் நெட்டான்யாஹூவை இத்துறவு மடத்தில் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து மங்களவார்த்தை பசிலிக்காவுக்குச் சென்றார் திருத்தந்தை. இங்கு கெபி இருக்குமிடத்தில்தான் நாசரேத்து மரியாவுக்கு வானதூதர் கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார். இப்புனித இடத்திற்கு வெள்ளி விளக்கு ஒன்றையும் பரிசாக வழங்கினார். 15 செ.மீ. விட்டத்தையும் 57 செ.மீ.உயரத்தையும் கொண்ட இவ்விளக்கு 1170 கிராம் எடையுடையது. மூன்று வானதூதர்கள் சங்கிலிகளைத் தாங்கிப் பிடித்திருப்பது போலும் இதில் உள்ளது. ஆவே மரியா என்றும் மூன்று முறை எழுதப்பட்டுள்ளது.

இந்த பசிலிக்காவில் கலிலேயாவின் சமயத் தலைவர்களைச் சந்தித்தார். அங்கு உரையும் நிகழ்த்தினார்.

இந்த நாசரேத் மங்களவார்த்தை பசிலிக்காவில் ஆயர்கள், குருக்கள் துறவியர் மற்றும் திருச்சபையின் பக்த இயக்கத்தினரோடு சேர்ந்து மாலை திருப்புகழ்மாலை செபிப்பது திருத்தந்தையின் இவ்வியாழன் பயணத் திட்டத்தில் இறுதி நிகழ்ச்சியாகும்.

இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய அரபு நகரமான நாசரேத்தில் சுமார் 40 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். மங்களவார்த்தை பசிலிக்கா பகுதியை 1650ல் கலிலேயா அரசன் பிரான்சிஸ்கன் சபையினருக்குக் கொடையாகக் கொடுத்தான். ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சம் திருப்பயணிகள் நாசரேத்திற்கு வருகின்றனர். இந்தப் பசிலிக்காவில் உலகின் முக்கிய மாதா திருத்தலங்கள் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

இஸ்ரேலில் பாலஸ்தீனியர் நடத்தும் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் 2002ம் ஆண்டு 8 மீட்டர் உயரமுடைய தடுப்புச் சுவரைக் கட்டத் தொடங்கியது. முந்தைய பெர்லின் சுவரின் உயரம் இதில் பாதிதான் என்பது கவனிக்கத்தகக்து. இஸ்ரேலின் இந்தப் பிரிவினைச் சுவர் சட்டத்துக்குப் புறம்பானது என்று சொல்லி 2004ல் சர்வதேச நீதிமன்றம் அதனை இடிக்கக் கட்டளையிட்டது. ஆனால் அது இடிக்கப்படாமல் இன்னும் வளர்ந்து வருகின்றது. இது கிராமத்தினரை மட்டுமல்ல, தண்ணீர், மின்சக்தி விநியோகம், நிலங்கள் ஆகியவற்றையும் பிரிக்கின்றது. ஏறத்தாழ 100 இராணுவ பரிசோதனை மையங்கள், ஒவ்வொருவரையும் பரிசோதிக்க 500க்கும் மேற்பட்ட சாலைத் தடைகள் இருக்கின்றன என்று எமது நிருபர்கள் கூறுகின்றனர்.

திருத்தந்தையின் இத்திருப்பயணம் துன்பங்களை எதிர்கொள்ளும் புனிதபூமி மக்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கட்டும். நாசரேத்து புனித கன்னி மரியா தம் பிள்ளைகளாகிய நம் அனைவரையும் காப்பாராக.

 








All the contents on this site are copyrighted ©.