2009-05-13 20:12:58

பெத்லகேமில் இயேசு பிறந்த குடில் வளாகத்தில் திருத்தந்தையின் திருப்பலி மறையுரை .130509 .


இயேசு பிறந்த இந்த இடத்திற்கு நான் வருகைதர அருள்புரிந்த எல்லாம் வல்ல கடவுளுக்கும் , பாலஸ்தீனப் பகுதியில் வாழும் சகோதர , சகோதரிகள் உங்கள் அருகே இருக்கும் வாய்ப்பிற்கும் நன்றி கூறுகிறேன் .

பாசத்தோடு என்னை வரவேற்ற பிதாப்பிதா போட்வாலுக்கும் , சகோதர ஆயர்கள் , குருக்கள் , இறைமக்களுக்கும் வாழ்த்துக்கூறுகிறேன் என்றார். போரால் துயர் உறும் மக்களுக்கும் , குடும்ப உறுப்பினர்களை இழந்து வேதனைப்படுவோர்க்கும் நீங்கள் படும் துன்பங்களுக்காக பெரிதும் வருந்துகிறேன் . விரைவி்ல் மறுவாழ்வுப் பணி தொடங்கும் எனவும் உங்களுக்கு எதிரான தடைகள் யாவும் நீங்கும் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன் .

அஞ்சாதீர்கள் . இதோ நான் உங்களுக்கு மகிழ்ச்சிமிக்க நற்செய்தி ஒன்றை அறிவிக்கிறேன் . இன்று தாவீதின் நகரில் உங்களுக்கு ஓர் மீட்பர் பிறந்துள்ளார் . வானிலிருந்து வந்த குரல் இன்றும் இங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது . அந்நற்செய்தி எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படுகிறது . மீட்பர் உங்களுக்காகவும் எனக்காகவும் பிறந்துள்ளார் . கடவுள் திட்டத்தில் பெத்லகேம் மங்காப் புகழ் பெற்று நிற்கிறது . இங்குதான் பாவத்தையும் சாவையும் அழிப்பதற்காக மீட்பர் பிறந்தார் . நம்பிக்கை இழந்த உலகுக்கு புதிய நிறைவான வாழ்வைத் தர இயேசு மீட்பர் பிறந்தார் .



பெத்லகேம் என்பது மாபெரும் மறுபிறப்பின் நற்செய்தியை , புதுப்பித்தலை , ஒளியை , விடுதலையை உலகெங்கும் வழங்குகிறது . ஆனால் இன்று இங்கு அது இன்னும் கானல் நீராக இருக்கிறது .



பிறப்பிலிருந்தே இயேசுவின் நாமம் எதிர்க்கப்படும் பெயராக இருந்துவந்ததை நாம் காண்கிறோம் . இன்றும் அவ்வாறே உள்ளது . எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும் மீ்ட்பரின் நற்செய்தி முழங்கிக் கொண்டே இருக்கிறது . இங்கு நாம் நினைக்கமுடியாத அளவில் கடவுள் தம்முடைய உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளார் . அவருடைய திருமகனின் பிறப்பிலே அன்பின் அரசாட்சியை நமக்கு அளித்துள்ளார் . மனித உடலில் தோன்றிய மீட்பர் இயேசு பாவத்தின்மீதும் சாவின்மீதும் வெற்றி கொண்டார் . இதுதான் பெத்லகெமின் நற்சய்தி . மனிதர்களை வலுக்குறையச் செய்யும் வெறுப்பு , சுயநலம் , அச்சம் , பகைமை மீது வெற்றி கண்டார் இயேசு .



வரலாற்றாலும் காலத்தின் போக்காலும் அலைக்கழிக்கப்பட்ட பழைய இயேசு பிறந்த இடத்தில் அமைந்த திருக்கோவில் விசுவாசத்திற்குச் சான்றாக , உலகின் மீது வெற்றி கொண்டதற்குச் சான்றாக நிற்கிறது . மனித மனங்களை மாற்ற இறையருள் துணைபுரிய மன்றாடுவோம் . இவ்வாறு இடையர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி நமக்கும் , மனித குலம் அனைத்திற்கும் தொடர்ந்து விண்ணுலகில் கடவுளுக்கு மகிமையும் , மண்ணுலகில் அவர் அன்பு செய்வோருக்கு சமாதானமும் உண்டாகுக என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் , ஆமென் என திருத்தந்தை மறையுரையை நிறைவு செய்தார் .








All the contents on this site are copyrighted ©.