2009-05-11 14:48:40

திருத்தந்தையின் புனித பூமிக்கானத் திருப்பயண விளக்கம்


மே11,2009. கடவுளால் கொடுக்கப்பட்ட பெண்களின் பங்கின் மாண்பு எப்பொழுதுமே போதுமான அளவு புரிந்து கொள்ளப்பட்டு போற்றப்படுவதில்லை என்பது வருந்தத்தக்கது, எனவே பெண்களுக்கான மதிப்பிற்குப் பொதுப்படையாய்ச் சான்று பகர்வதன் மூலம் உண்மையான மனித சமுதாயத்தின் கலாச்சாரம் முன்னோக்கிச் செல்ல புனித பூமியிலுள்ள திருச்சபை சிறப்பாகப் பங்காற்ற முடியும்.

உலக அளவில் அன்னையர் தினம் சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறன்று ஜோர்டனில் இவ்விண்ணப்பத்தை முன்வைத்து சிறுபான்மை கத்தோலிக்கரை உற்சாகப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலிக்கு வெளியே திருத்தந்தை மேற்கொண்டு வரும் இந்த 12வது வெளிநாட்டுத் திருப்பயணத்தில் ஞாயிறு மாலை, பெத்தனி பியாண்ட் த ஜோர்டன் என்ற இடத்திற்குச் சென்றார். வாதி அல் காராட் என்றழைக்கப்படும் ஜோர்டன் நாட்டிலுள்ள இவ்விடத்தில்தான் திருமுழுக்கு யோவான், இயேசுவுக்குத் திருமுழுக்கு அளித்ததாக நம்பப்படுகிறது. துவக்ககாலக் கிறிஸ்தவர்கள் இவ்வாறு நம்பியதாக தொல்பொருள் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. யோர்தான் நதியின் கிழக்குக் கரையிலுள்ள இந்த இடத்துத் தண்ணீர் இன்றும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

இயேசு திருமுழுக்கு பெற்ற இவ்விடத்தில் பல கிறிஸ்தவ சபைகள் ஆலயங்களைக் கட்டி வருகின்றன. இலத்தீன் மற்றும் கிரேக்க மெல்கித்தே கத்தோலிக்க ரீதி திருச்சபைகளுக்கென இரண்டு புதிய ஆலயங்களுக்கான அடிக்கற்களை ஆசீர்வதிப்பதற்காக அங்குச் சென்றார் பாப்பிறை. முதலில் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா திருத்தந்தையை வாழ்த்திப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். அதன் சுருக்கத்திற்குச் செவிமடுப்போம்.

இதற்குப் பின்னர் புதிய ஆலயங்களுக்கான அடிக்கற்களை மந்திரித்தார். ஆண்டவர் இவற்றைப் பாதுகாத்து உறுதிப்படுத்தி இங்கு வந்து கடவுளை வணங்கும் மக்களை அவர் தம் சமாதானத்தால் நிரப்புவாராக என்று அரபு மொழியில் செபித்தார். பின்னர், அங்கிருந்து 50 கிலோ மீட்டரில் இருக்கின்ற அம்மன் திருப்பீட தூதரகத்திற்கு காரில் பயணமானார். அங்கு இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். இத்துடன் ஞாயிறுதின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

இத்திங்கள், திருத்தந்தையின் இந்த ஒருவாரத் திருப்பயணத்தின் நான்காவது நாள். இன்று காலை 6.30 மணியளவில் அம்மன் திருப்பீட தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்திய பின்னர் அங்கிருந்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி அம்மன் அரசி அலியா விமான நிலையத்திற்கு 36 கிலோ மீட்டர் காரில் சென்றார். விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அங்கு நன்றியுரை யாற்றிய ஜோர்டன் அரசர் இரண்டாம் அப்துல்லா, திருத்தந்தையின் வருகை நல்லுறவுகளுக்குப் பாலமாகவும், நீதியுள்ள சமுதாயத்தைச் சமைக்கப் பெரிதும் உதவியாகவும் இருக்கும் என்றார்.

பின்னர் திருத்தந்தையும் ஜோர்டன் நாட்டுக்கானத் தனது இறுதி உரையை நிகழ்த்தினார்.

82 வயதாகும் நமது திருத்தந்தை ஜோர்டனில் பயணம் மேற்கொண்ட மூன்று நாட்களும் இசுலாம் மதத்தின் மீதான தனது நன்மதிப்பை வெளிப்படுத்தினார். மசூதியில் நன்கு வரவேற்கப்பட்டார். உலகில் அரசியல் நோக்கத்திற்காக மதம் பயன்படுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். கிறிஸ்தவம் பிறந்த மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஜோர்டன் மக்களை வாழ்த்தி ஜோர்டன் விமானம் ஏர்பஸ் 321ல் காலை ஒன்பதரை மணிக்கு ஏறி இஸ்ரேலின் தெல் அவிவ் பென் குரியோன் விமான நிலையம் வந்திறங்கிய போது உள்ளூர் நேரம் காலை பத்து மணியாகும். அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2மணி முப்பது நிமிடங்களாகும். தெல் அவிவ், இஸ்ரேலின் பொருளாதார, கலாச்சார நகரமாகும். இந்த முக்கிய நகரத்தில் ஏறத்தாழ 3,60,000 பேர் வாழ்கின்றனர். அமானுக்கும் தெல் அவிவ்க்கும் இடைப்பட்ட தூரம் 103 கிலோ மீட்டராகும். விமான நிலையத்தில் முதலில் சிவப்பு கம்பள இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது

இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பேரஸ், பிரதமர் பெஞ்சமின் நெட்டான்யாஹூ, சில அமைச்சர்கள் எனப் பல பிரமுகர்கள் விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்றனர். அங்கு முதலில் அரசுத் தலைவர் ஷிமோன் பேரஸ் வாழ்த்துரை வழங்கினார். வாழ்க பெனடிக்ட். விசுவாசிகளில் முதல்வராகிய நீர் இன்று புனித பூமியைப் பார்வையிடுகிறீர் என்று முதலில் இலத்தீனில் வாழ்த்தினார்.

ஷாலோம் அதாவது அமைதி என்று எபிரேயத்தில் சொல்லி உரையை நிறைவு செய்தார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். அதன் சுருக்கத்தைக் கேட்போம்.

பின்னர் அங்கிருந்து 60 கிலோ மீட்டரில் இருக்கின்ற எருசலேம் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். எருசலேம் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி இல்லத்தில் மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார். பின்னர் இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பேரஸைச் சந்திப்பதற்காகக் மாலை 3.30 மணிக்கு காரில் புறப்பட்டார். அரசுத் தலைவரைச் சந்திப்பது, எருசலேம் யாத் வாஷெம் நினைவிடத்தைப் பார்வையிடுதல், நோத்ருதாம் மையத்தில் பல்சமய உரையாடல் குழுவினரைச் சந்திப்பது ஆகியவை திங்கள் தினப் பயணத் திட்டத்தில் உள்ளன. செவ்வாயன்று எருசலேம் மசூதியின் பெரிய தலைவர், யூதமதத் தலைமைக் குரு ஆகியோரைச் சந்திப்பார் திருத்தந்தை.

எருசலேம், இசுரேல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்நகரம் உலகில் மிகப்பழைய நகரங்களில் ஒன்றாகும். யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமயங்களில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரில் சில முக்கியமான சமயம் தொடர்பான கட்டிடங்கள் அல் அக்சா மசூதி, மேற்கு சுவர், புனித செபல்க்கர் ஆலயம் ஆகும். தாவீது மன்னர் கி.மு 1004 ஆம் ஆண்டளவில் எபூசியரிடம் இருந்து எருசலேமை கைப்பற்றி அதை இஸ்ரயேலின் தலைநகரம் ஆக்கினார். கி.மு 970 ஆம் ஆண்டளவில் சாலமோன் அரசரால் எருசலேம் ஆலயம் கட்டப்பட்டது. நெபுகத்நேசரால் இவ்வாலயம் அழிக்கப்பட்டது. அதன் பின்பு கிரேக்கர்களினால் அழிக்கப்பட்டது. பின்னர் உரோமையர்கள் எருசலேமை கைப்பற்றினார்கள். ஏரோது எருசலேம் தேவாலயத்தை கட்டினான். அதன்பின்பு உரோமையர்களாலேயே கி.பி 70 ஆண்டில் தேவாலயம் அழிக்கப்பட்டது.

யூதர்களின் புனித நூலில் எருசலேம் என்ற பெயர் 669 முறையும் கிறிஸ்தவர்களின் விவிலியத்தில் 154 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித நகரமாகிய இது கடல் மட்டத்திலிருந்து 770 மீட்டர் உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எருசலேமில் தான் உலக புகழ் பெற்ற எபிரேய பல்கலைக்கழகம் உள்ளது. இயேசு உலக மீட்புக்காக மரித்து உயிர்த்தது இந்நகரில்தான். எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் நகரம் (Heritage of Peace) என்று பொருள். ஆனால் கடந்த 3000 ஆண்டுகளில் 20 முறை முற்றுகையிடப்பட்டும், இடிக்கப்பட்டும், திரும்பவும் கட்டப்பட்டும் இருக்கிறது. எனினும் எருசலேம் தான் இஸ்ரேலிலுள்ள மிகப்பெரிய நகரமாகும். தற்போதைய மக்கள்தொகை ஏறத்தாழ 7,04,900 ஆகும். இவர்களில் 72 விழுக்காட்டினர் யூதர்கள்.

யூதமத விரோதப் போக்கைக் களையவும் மத்திய கிழக்குப் பகுதியின் நீதியான தீர்வு காண இயலக்கூடிய ஒவ்வொரு வழிகளிலும் முயற்சிக்குமாறும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனித பூமியில் அமைதியின் தூதுவராக திருப்பயணம் மேற்கொண்டு வரும் திருத்தந்தையின் இப்பயணம் அப்பகுதி மக்கள் மத்தியில் அமைதி, ஒப்புரவு, புரிந்து கொள்ளுதல் மன்னிப்பு போன்ற விழுமியங்களைக் கொண்டு வரட்டும்.








All the contents on this site are copyrighted ©.