2009-05-10 20:39:40

தூய ஜார்ஜ் பேராலயத்தில் மாலை வழிபாடு . 10-05-09 .


திருத்தந்தை ஜோர்டானின் அம்மனில் உள்ள கிரேக்க மெல்கிதே கத்தோலிக்க சபையின் தூய ஜார்ஜ் பேராலயத்தில் சென்ற மே 09 சனிக்கிழமை மாலை வழிபாட்டில் கலந்து கொண்டார் . அங்கு மாலை 5.30 மணி . இந்திய நேரம் இரவு 8.00 மணி .

இந்தப் பேராலயத்தின் பேராயராக யாசர் அய்யாக் பொறுப்பில் இருக்கிறார் . அக்டோபர் 13 , 2007 ல் இந்தப் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது . அதே நாளில் அப்பேராலயத்தில் யாசர் அய்யாக் பேராயராக கீழைத் திருச்சபைகளின் மேதகு பிதாப்பிதா மூன்றாவது கிரகோரி லாகெம் அவர்களால் அபிசேகம் செய்யப்பட்டார . அவ்வாலயத்தில் 1000 பேர் வரை அமரமுடியும் .

ஜோர்டானின் தலைநகர் அம்மனில் நடந்த இந்த முதல் செப வழிபாட்டின்போது



திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கிரேக்க கத்தோலிக்க சபையின் முக்கியத் தலைவர்களுக்கு மறையுரை வழங்கினார். வழிபாட்டின்போது பிதாப்பிதா 3 ஆவது கிரகோரியோலாகெம் , டமாஸ்கசின் கிரேக்க மெல்கிதே பிதாப்பிதா முந்நாள் பேராயர் ஜார்ஜ் எல்மூர் , பேராயர் யாசர் அய்யாக் , மற்றும் மாரநாதா , சிரியன் , அர்மீனியன் , கல்தேய , இலத்தீன் ரீதி திருச்சபையைச் சேர்ந்தவர்கள் மாலை செப வழிபாட்டில் பங்கேற்றனர் . கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் சபையின் பேராயர் பெனதிக்கோஸ் சிக்கோராஸ் அவர்களும் செப வழிபாட்டில் பங்கேற்றார் . மற்றும் குருக்கள் , இருபால் துறவியர் , குருகுல மாணவர்கள் , திருச்சபையின் முக்கிய நிறுவன உறுப்பினர்களும் பங்கேற்றனர் .

தமது மறையுரையின்போது அங்குள்ள கிறிஸ்தவச் சிறுபான்மையினர் பொதுமக்களிடையே தமது குரல் கேட்குமாறு வாழ அறிவுறுத்தினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . ஒழுக்க நெறிகளை வரம்புக்கு மேல் மீறும்போது இஸ்லாமியரோடு இணைந்து கிறிஸ்தவர்களும் அதைத் தடுக்குமாறு வேண்டுகோள் வைத்தார் . கீழைத்திருச்சபை தமது பாரம்பரிய நெறிமுறைகளால் கிறிஸ்துவிடம் மற்றவர்களைக் கொண்டுவர பலவிதப் பாதைகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் . அங்கிருந்த அனைவரோடும் இணைந்து சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட வழிபாட்டில் பங்கேற்கும் வாய்ப்பினுக்கு நன்றி கூறினார் .பல நூறு ஆண்டுகளாக திருப்பயணங்களைக் மேற்கொண்ட திருச்சபை பல்வேறு வரலாற்று முத்திரைகளையும் கலாச்சாரத்தின் பெருமையையும் தன்னிடம் கொண்டுள்ளது எனக் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . சில சமயங்களில் இந்த வரலாற்றில் சமய வேறுபாடு காரணமாக விவாதங்களும் , அடக்குமுறைகளும் கையாளப்பட்டது வருத்தம் தரக்கூடியது என்றார் . ஒப்புரவை வலியுறுத்திய காலங்களும் இருந்திருக்கின்றன . அவை வியத்தகு முறையி்ல் கத்தோலிக்கத் திருச்சபையோடு நல்லுறவை வளர்த்துள்ளன என்றும் , கலாச்சாரா மேம்பாட்டுக்கு கீழைக் கிறிஸ்தவ திருச்சபைகள் வழிவகுத்துள்ளன என்றும் திருத்தந்தை மகிழ்ச்சி தெரிவித்தார் . கத்தோலிக்க சபைக்குள் பல வகைப்பட்ட சபைகள் அகில உலகத் திருச்சபையின் இவ்வுலகத் திருப்பயணத்தில் நல்ல தாக்கத்தைத் தந்துள்ளதாகவும் திருத்தந்தை தெரிவித்தார் . ஆன்மீகத்தில் , வழிபாட்டில் , பாரம்பரியத்தில் கடவுளின் நன்மைத்தனத்தையும் , திருவுளத்தையும் இச்சபைகள் வெளிப்படுத்தியுள்ளன என்றார் திருத்தந்தை . இச்சபைகள் அனைவரையும் கடவுள் பால் கொண்டு செல்வதை நாம் வரலாற்றில் காண்கிறோம் என மேலும் தெரிவித்தார் . கீழைத் திருச்சபை அகில உலகத் திருச்சபைக்கு மெருகூட்டுவதாக , சிறப்பிப்பதாகவும் திருத்தந்தை தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் . புனித ஜார்ஜ் செய்தது போல எல்லோரையும் கிறிஸ்துவை அறியவும் அன்பு செய்யவும் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஆண்டவர் விட்டுச் சென்ற கட்டளைக்கு செவிமடுக்கவேண்டும் என அறைகூவல் விடுத்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

கிரேக்க மெல்கித தூய ஜார்ஜ் பேராலய வழிபாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் தம் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகக் கூறி தமக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டு அன்றைய மாலை வழிபாட்டைத் நிறைவு செய்தார் . அங்கிருந்து திருத்தந்தை அம்மனின் வத்திக்கான் அரசுத் தூதர் மாளிகைக்கு மாலை 7 மணிக்கு , இந்திய நேரம் இரவு 10.30 க்குக் காரில் சென்றடைந்தார் .








All the contents on this site are copyrighted ©.