2009-05-09 07:25:43

ஜோர்டனில் திருத்தந்தை. – முதலாம் நாள்.


மே 8. 2009. இவ்வெள்ளிக் காலை உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் 1 மணிக்கு ஜோர்டன் மற்றும் இஸ்ராயேலுக்கான தன் திருப்பயணத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஜோர்டனிலும், இஸ்ராயேலிலும், பாலஸ்தீனிய சுயாட்சிப் பகுதிகளிலும் திருத்தந்தை மேற்கொள்ளும் இத்திருப்பயணம் அரபு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், மதங்களிடையேயான புரிந்துகொள்ளுதலை விரிவுப்படுத்துவதற்கும் நல்வாய்ப்பாக இருக்கும் என்கிறார் ஜோர்டன் இளவரசர் எல் ஹாசன் பின் தலால்.

இதற்கிடையே இஸ்ராயேல் அரசோ, இத்திருப்பயணத்தை “அமைதிக்கான பாலம் “ என அழைத்துள்ளது.

திருத்தந்தையின் இத்திருப்பயணம், விவிலியத்தோடு தொடர்புடைய புனிதத் தலங்களைத் தரிசிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் ஜோர்டனில் முக்கியமானவை: மோயீசனோடு தொடர்புடைய நெபோ மலை மற்றும் யேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் நதி.

உரோம் நகரிலிருந்து 2364 கிலோ மீட்டர்கள் தொலை தூரத்தை ஆலித்தாலியா விமானத்தில் 4 மணி நேரம் பயணம் செய்து ஜோர்டன் தலைநகர் அம்மனை திருத்தந்தை வந்தடைந்தபோது உள்ளூர் நேரம் பிற்பகல் 2மணி 30 நிமிடங்கள். இந்திய நேரம் மாலை 5 மணி.

ஏற்த்தாழ 96.6 விழுக்காட்டினர் இஸ்லாமியராக வாழும் ஜோர்டனில் 2 விழுக்காட்டினருக்கும் குறைவானவரே கிறிஸ்தவர்.

விமான நிலையத்தில் திருத்தந்தையை மன்னர் அப்துல்லா பின் அல் ஹுஸைன், அரசி ரானியா, அரசக் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் தலத்திருச்சபையினர் வந்திருந்து வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் திருத்தந்தை அங்கிருந்து 22 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள ரெஜினா பாச்சிஸ் எனப்படும் அமைதியின் அரசியாம் அன்னையின் பெயரால் அழைக்கப்படும் ஊனமுற்றோர் மையத்திற்குச் சென்று மக்களைச் சந்திதார்.

விமான நிலைய வரவேற்பு நிகழ்வும், ஊனமுற்றோர் மைய சந்திப்புமே வெள்ளியன்று திருத்தந்தை கலந்துகொண்ட இரு பொது நிகழ்வுகள்.








All the contents on this site are copyrighted ©.