2009-05-06 12:40:15

விதைப்பவர் உவமை மத்தேயு 13 , 1- 9 .


பாலஸ்தீன நாட்டில் விவசாயம் செய்வது பற்றிய உவமை இது . அங்கு விவசாயம் செய்யப்படும் நிலம் பற்றியும் , வரும் பயன் பற்றியும் நாம் அறிகிறோம் . சாலை என்பது இங்கு வயல்வெளிக்குள் செல்லும் நடைபாதை . களைகள் முன்னரே நீக்கப்படுவதில்லை , ஆனால் உழப்படும்போது அவை நீக்கப்படும் . களைகள் வழக்கமாக அங்கு முட்புதர்களாக இருக்கும் . விதைகள் எல்லா இடத்திலும் தூவப்படும் . சில இடங்களில் தரையின் மேற்பகுதியில் கற்களும் பாறைகளும் இருக்கலாம் . இறை அரசு வருகிறது என்பது தான் உவமையின் மையக்கருத்து . தடைகள் இருந்தாலும் இறையரசு வந்துவிடும் . பயிர்கள் விளைவதுபோல இறையாட்சியும் உறுதியாக நிலைபெறும் . நம்பிக்கை இங்கு வலியுறுத்தப்படுகிறது . நாம் நற்செய்தியில் காணும் பரிசேயர்கள் தடையாக நின்றாலும் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் .



சீடர்களும் ஏன் கிறிஸ்துவும் கூட எவ்வளவோ தெளிவாக எடுத்துக்கூறியும் ஏன் மக்களுக்கு இறை அரசின் மீது பக்தி ஏற்படவில்லை என ஆச்சரியப்பட்டனர் . நமக்கும் அதே விதமான வியப்பு உண்டாகிறது . ஏன் மக்கள் மனம்மாறி நல்வாழ்க்கையைத் தேர்ந்து கொள்வதில்லை என்பது நமது காலத்திலும் சரி , எக்காலத்திலும் ஏன் மக்கள் கடவுள் பக்தியை மதித்துத்துப் போற்றுவதில்லை என்பதற்கு இன்றைய உவமை விளக்கம் தர முயல்கிறது . இன்றைய உவமையில் முக்கியமாக சில விதைகள் நல்ல பயன்தருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது . விதைப்பவரைப்பற்றியல்ல ஆனால் விதை எவ்வாறு முளைக்கிறது என்பதே மையமாக விளக்கப்படுகிறது . கதையில் மக்களின் போக்கு விளக்கப்படுகிறது . நான்கு வகையான மக்களைப் பார்க்கிறோம் . சிலர் மந்தமாக , நற்செய்தியைக் கண்டுகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் . சிலர் சூழ்நிலை காரணமாக மனம் கடினப்பட்டு இருக்கலாம் . அவர்கள் மனம் கடினப்பட்ட பாதையாக உள்ளது . வாழ்க்கையின் தேரோட்டம் நடந்தேறுகிறது . திருமணங்கள் , தொழில் , வாணிபம் , பொழுதுபோக்கு போன்றவை நடந்து கொண்டிருக்கின்றன . ஆனால் விதை வீழ்ந்து முளைப்பதற்கோ வழியில்லை . ஒருவேளை கலப்பை நிலத்தை பிளப்பது போன்று வாழ்வில் வரக்கூடிய துயரமான சம்பவங்கள்தான் அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கமுடியும் . அதேபோல மக்களில் பலர் கடினமான மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் . கடவுள் சிந்தனை அவர்களில் அவ்வளவாக தாக்கம் ஏற்படுத்துவதில்லை . சிலர் வாழ்க்கையில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத சாதாரண மனிதர்கள் . சில நாட்களில் பக்தியும் மற்றும் சில நாட்களில் கடவுளை வணங்க நேரமில்லாமலும் இருப்பவர்கள் . சிலுவையில் ஏசு தொங்கியதைக்கண்டும் எத்தனை பேர் மனமாற்றம் பெற்றனர் , அல்லது உயிர்த்ததாக அறிவிக்கப்பட்டும் எத்தனைபேர் நம்பினர் . சிலர் வாழ்க்கையில் கடவுளையும் தவறான போக்கையும் சமன் செய்து கொண்டு போகக்கூடியவர்ககள் . இரண்டுமனம் கொண்டவர்கள் . நல்ல மக்களாக வாழ வாய்ப்பிருந்தும் பல்வேறு உலகக்கவலைகளால் அழுத்தப்பட்டு நல்ல பயன் தரமுடியாதவர்களாக இருக்கிறார்கள் .

ஆனால் இயேசுவின் உவமை நம்பிக்கையோடு முடிவுறுகிறது . நல்ல நிலத்தில் விழுந்து பயன்தரும் விதைகளைப்போல கடவுள் பக்தர்கள் நல்ல மனிதர்களாக வாழ்ந்து பிறரன்பைப் பொழிவதைக் காண்கிறோம் . கடவுள் பக்தியுள்ளவர்கள் வாழ்வாங்கு வாழக் கற்றுக்கொண்டு பிறருக்கும் வாழ வழிகாட்டுகிறார்கள் . நற்செய்தி சிறிய விதையாக விழுந்தாலும் அது நூறு மடங்கு பலனளிப்பதைக் காண்கிறோம் . நற்செய்தியை ஆழமாகப் படிக்கும் போதும் தியானிக்கும்போதும் அது நம்மை தமக்கென வாழாத பிறர்க்கென வாழும் மாமனிதர்களாக மாற்றுகிறது . நிலத்தின் எல்லா விதைகளும் பயன் தராது என்றாலும் விவசாயி விதைப்பதற்குத் தவறுவதில்லை . நாமும் நற்செய்தியை அறிவிப்பதில் முனைப்பாக இருக்கவேண்டும் . எந்நாளும் ஆண்டவனைத் தொழுதேற்றும் பக்தர்கள் உலகுக்கு ஆண்டவன் அருளைப் பெற்றுத் தருகிறார்கள் . நல்லார் ஒருவருக்காக வானம் மழைபொழிகிறது . அதேபோல நல்லவர்கள் நூறு மடங்குப் பலனைப் பெறுகிறார்கள் . பிறருக்கும் தாம் பெற்ற பயனைத் தருகிறார்கள் . நாமும் நல்ல நிலமாக அமைந்து நல் வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வோமா . நூறு மடங்கு பலன் தரும் நிலமாக , மாமனிதர்களாக , நன்மக்களாக வாழ்வோமா .








All the contents on this site are copyrighted ©.