2009-05-06 15:00:39

நம் வாழ்க்கையில் இயேசுவின் திருவருகைக்காக எந்நேரமும் விழிப்புடன் காத்திருக்க வேண்டும், திருப்பீடச் செயலர்


மே06,2009. நம் வாழ்க்கையில் இயேசுவின் திருவருகை எந்த நேரத்தில் இடம் பெறும் என்பது தெரியாததால், அவ்வருகைகக்கு நாம் எந்நேரமும் விழிப்புடன் காத்திருக்க வேண்டுமென்று கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.

சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களின் விழா இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, விழித்திருக்கும் பணி செய்யும் சுவிஸ் கார்ட்ஸ் தங்கள் இதயங்களில் இயேசுவுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றார்.

திருத்தந்தை மற்றும் அப்போஸ்தலிக்க மாளிகையின் பாதுகாப்பை மிகுந்த அர்ப்பணத்தோடும் விசுவாசத்தோடும் விழிப்போடும் அமைதியாகவும் செய்து வரும் இவர்களது பணிகள் மிகவும் பாராட்டப்படுகின்றன எனவும் கர்தினால் கூறினார்.

இன்றைய நவீன உலகில் இயேசுவின் வருகைகாகக் காத்திருத்தலில் விழிப்பும் செபமும் மிகவும் இன்றியமையாதவை எனவும் கூறினார் அவர்.

பேரரசர் ஐந்தாம் சார்லஸின் படைகள் 1527ம் வருடம் மே ஆறாம் தேதி உரோமையைச் சூறையாடிய போது திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடிய சுவிஸ் வீரர்களில் 147 பேர் இறந்ததன் நினைவாக இந்நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாளில் புதிய சுவிஸ் கார்ட்ஸ் பணியேற்புப் பிரமாணம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது. இப்புதனன்று 32 பேர் புதிதாக அதிகாரப்பூர்வமாகப் பணியேற்புப் பிரமாணம் செய்தனர்.








All the contents on this site are copyrighted ©.