2009-05-04 14:50:46

திருச்சபைக்குப் புனிதத் தம்பதியர் தேவைப்படுகின்றனர், திருத்தந்தை


மே04,2009. குருத்துவத் திருநிலைப்பாட்டுத் திருப்பலிக்குப் பின்னர் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, பிள்ளைகள் தங்கள் சுதந்திரத்தை எப்படி நன்கு பயன்படுத்துவது என்பதைத் தங்களது எடுத்துக்காட்டுகளால் கற்றுக் கொடுக்கும் புனிதத் தம்பதியர் திருச்சபைக்குத் தேவைப்படுகின்றனர் என்றார்.

இறையழைத்தல் ஞாயிறாகிய இந்நாளில் எல்லாவகையான அழைத்தல்களுக்காகவும் செபிக்க விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்த அவர், அழைத்தல்களுக்காகத் தனியாகவும் குழுவாகவும் செபிக்குமாறு வலியுறுத்தினார்.

இவ்வாறு செபிப்பதன் வழியாக கடவுளன்பின் மகிமையும் அழகும் அநேகர் கிறிஸ்துவைப் பின்பற்றவும் குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுப் பாதையில் செல்லவும் உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இன்னும், வருகிற வெள்ளியன்று தான் புனித பூமிக்கு மேற்கொள்ளவுள்ள ஒருவாரத் திருப்பயணம், உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் வழிகளைத் தேடுவதாக இருக்கும் என்று சொல்லி அப்பயணத்திற்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை.

புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளத் திருத்தந்தையர்கள் ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தானும் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்தார் பாப்பிறை.

ஒவ்வொரு நாளும் பல இடர்களை எதிர்நோக்கும் புனித பூமி கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்தவும் பேதுருவின் வழித்தோன்றல் என்ற வகையில் அம்மக்களுடனான அகிலத் திருச்சபையின் ஆதரவையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தவும் விரும்புவதாகக் கூறினார் அவர்.

அனைவருக்கும் தந்தையான ஒரே கடவுளின் பெயரில் அமைதியின் திருப்பயணியாகச் செல்வதாகவும் கூறிய பாப்பிறை, நீதியிலும் ஒருவரையொருவர் மதிப்பதிலும் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு உரையாடல் மற்றும் ஒப்புரவு வழியைப் பின்பற்றுவோருக்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவாக இருக்கின்றது என்பதற்குச் சாட்சியம் வழங்கவிருப்பதாகவும் கூறினார்.

மே 8 முதல் 15 வரை ஜோர்டன், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை. இதில் 29 உரைகளும் மறையுரைகளும் ஆற்றுவார். கிறிஸ்தவ, இசுலாம் மற்றும் யூதமதங்களின் பிரதிநிதிகளையும் சந்திப்பார்.

மேலும், பன்றிக்காய்ச்சலால் துன்பப்படும் மெக்சிகோ மக்களுக்குத் தனது செபத்தையும், ஆன்மீக ரீதியிலான ஒருமைப்பாட்டையும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.