2009-05-04 14:49:39

குருக்கள் அதிகமாகவும் நன்றாகவும் செபிக்கத் திருத்தந்தை வலியுறுத்தல்


மே04,2009. குருக்கள் அதிகமாகவும் நன்றாகவும் செபிப்பதன் மூலம் அவர்கள் கிறிஸ்துவோடு மிக நெருக்கமாக ஒன்றித்திருக்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் உரோம் மறைமாவட்டத்திற்கென 19 புதிய குருக்களைத் திருநிலைப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்துவின் பெயரில் மீட்பை அறிவித்து வரலாற்றின் போக்கை மாற்றிய திருத்தூதர்கள் போன்று புதிய குருக்களும் தங்களை முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணித்து வாழுமாறு வலியுறுத்தினார்.

இறைவனாம் தந்தையின் பெயரை அறிவதிலும் அவரின் முகத்தைக் காண்பதிலும் இயேசு அனுபவித்த அதே மகிழ்ச்சியைச் சீடரும், சிறப்பாக திருத்தூதரும் அனுபவிக்கின்றனர் என்ற அவர், கடவுள் காண முடியாதவராய் இருந்தாலும் அவரது அன்பு மாறாதது என்பதை அறிந்து இயேசு அனுபவித்த துன்பத்தையும் அவரது சீடர் பகிர்ந்து கொள்கிறார் என்றார்.

புனித யோவான் தமது முதல் திருமடலில் சொல்லியிருப்பது போல, நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை என்று ஒருபுறம் சொல்கிறோம் என்றார் அவர்.

உண்மைதான், யோவான் குறிப்பிட்டுள்ள உலகம் கிறிஸ்தவர்களைப் புரியாததால் நற்செய்தியின் திருப்பணியாளர்களையும் புரிந்து கொள்ளவில்லை என்ற திருத்தந்தை, ஏனெனில் உலகம் கடவுளை அறியவில்லை, அவரை அறிய விரும்பவுமில்லை என்றார்.

இருந்த போதிலும் உலகம் திருச்சபையின் அங்கத்தினர்களையும், ஏன் திருநிலைப்படுத்தப்பட்ட அதன் திருப்பணியாளர்களையும் கறைப்படுத்தி அதனைக் கண்ணியில் சிக்க வைக்கிறது என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.

இந்த உலகின் மனநிலையும் சிந்திக்கும் போக்கும் திருச்சபையைக் கறைப்படுத்த முடியும், ஏன் கறைப்படுத்துகின்றது, எனவே நாம் தொடர்ந்து விழிப்பாய் இருக்கவும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டியிருக்கின்றது என்றார் அவர்.

நாம் உலகில் இருக்கிறோம், உலகின் போக்குப்படி செல்லும் ஆபத்தையும் எதிர்நோக்குகிறோம், சிலசமயங்களில் அவ்வாறு இருக்கிறோம் என்று புதிய குருக்களிடம் கூறிய திருத்தந்தை, புனிதமடையவும் கடவுளிடம் முழுவதும் சரணடையவும் செபமே சிறந்த வழி, எல்லாவற்றிக்கும் மேலாக அன்றாடத் திருப்பலியில் இந்நிலையை அடைய வழியாக இருக்கின்றது என்று உரைத்தார்.

திருநற்கருணைக் கொண்டாட்டம் மிகப்பெரிய மற்றும் மிக உன்னதச் செபச் செயலாகும், இதிலிருந்து திருப்புகழ்மாலை, திருநற்கருணை ஆராதனை, லெக்சியோ திவினா என்ற இறைவாசிப்பு, செபமாலை, தியானம் ஆகிய பிற செப வடிவங்கள் தங்களது உயிர்சாற்றைப் பெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

அதிகமாகவும் நன்றாகவும் செபிக்கும் குரு தன்னிலிருந்து அதிகம் விடுபட்டு நல்லஆயனாகவும் தன் சகோதரருக்கு ஊழியனாகவும் இருக்கின்ற இயேசுவோடு அதிகம் ஒன்றித்திருக்க முடியும் என்று திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.