2009-05-04 14:57:22

உள்ளத்தில் நல்ல உள்ளம்


மே04,2009. ஓர் ஆசிரம சுவாமிஜி சொல்கிறார் : வாழ்க்கையை அச்சத்துடன் அணுகினால், எல்லாமே அபாயங்களாகத்தான் தோன்றும். அச்சத்தைத் தவிர்த்து வாழக் கற்றுவிட்டால், வாழ்க்கை என்பதை வாய்ப்புகள் நிரம்பியதாகக் காண்பீர்கள். எதை அணுகுவதானாலும் அதற்கான தகுதியை முழுமையாக வளர்த்துக்கொண்டு அணுகுங்கள். அபாயங்கள் விலகி, வெற்றிகள் கிட்டும்! என்று. இவ்வாறு வாழ்க்கையிலும் வரலாற்றிலும் வெற்றி கிட்டியவர்கள், மாமனிதர்கள், மகாத்மாக்கள் என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகிறார்கள். இந்த மாமனிதர்களும், மகாத்மாக்களும் பிறக்கிறார்களா? உருவாகிறார்களா? அல்லது உருவாக்கப்படுகிறார்களா? என்றால் இவர்களில் சிலர் தங்கள் பெற்றோரின் மதிப்பீடுகளை உள்வாங்கியவர்கள், இன்னும் சிலர் நல்ல மனிதனாகத் தங்களையே உருவாக்கிக் கொண்டவர்கள். இப்படி சில. எது எப்படியிருப்பினும் நல்ல நல்ல உள்ளம் கொண்டவர்கள், நல்ல நல்ல மனிதர்கள் சமூகத்திற்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அது 1887ஆம் ஆண்டு ஜூலை மாதம். சுவிட்சர்லாந்து நாட்டில் இயற்கை எழில் சிந்தும் ஹெய்டன் என்ற ஊரில் ஒரு கிழவர் கிழிந்த ஆடைகளுடன் பிச்சைக்காரர் மாதிரியான தோற்றத்துடன் தள்ளாடித் தடுமாறி தெருவோரம் நடந்து கொண்டிருந்தார். தங்குவதற்கு யார் எங்கே இடம் கொடுப்பார்களோ என்ற கவலையில் கண்களை அலையவிட்டபடி நடந்தார். கால் தடுமாறி மயக்கம் போட்டு கீழே விழுந்தும் விட்டார். அந்தப் பக்கம் சென்றவர்கள் அவரை அருகிலிருந்த ஒரு விடுதிக்குத் தூக்கிச் சென்று மருத்துவரையும் அழைத்தனர். அங்கு வந்து அவரைப் பரிசோதித்தார் மருத்துவர். பின்னர் அவரிடம், “பெரியவரே உங்க பேரு என்னன்னு” கேட்டார். ஹென்றி டுனன்ட் (Henry Dunant) என்றார். உடனே மருத்துவர், ஹென்றி டுனன்ட்டா? அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கின அந்த ஹென்றி டுனன்ட்டா நீங்கள்? என்று கேட்டதும், ஆமாம் என்று முனகினார் அந்தப் பெரியவர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த ஹென்றி டுனன்ட், பெரிய பணக்கார வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1859ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போது இத்தாலியில் இருந்த ப்ரெஞ்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியனை, அவரது அல்ஜீரிய வியாபார விடயமாக சந்திக்கச் சென்றார். ஜூன் 24ம் தேதி மாலை சோல்ஃபெரினோ (Solferino) என்ற சிறிய நகரை அவர் அடைந்த போது அங்கே ஆஸ்ட்ரிய-சர்தீனிய போரைப் பார்த்தார். ஒரேநாளில் ஏறத்தாழ நாற்பதாயிரம் படைவீரர்கள் இரண்டு தரப்பிலும் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர். பேரரசரைச் சந்திக்கச் சென்ற நோக்கத்தையே மறந்து போரில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். அந்த ஊர் மக்களையும் அந்த உதவியில் ஈடுபடுத்தினார். பின்னர் ஜெனீவா திரும்பினாலும் அவரது மனம் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. 1862ம் வருடம் தனது சொந்த செலவில் “சோல்ஃபெரினோ நினைவுகள்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதை ஐரோப்பாவில் முக்கியமான அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பினார். காயப்படும் வீரர்களுக்குச் சிகிச்சை தர மருத்துவமனைகள், அவற்றில் பணியாற்ற மருத்துவர்கள், தாதியர், தன்னார்வத் தொண்டர்கள் தேவை. எந்த நாட்டு வீரர்கள் என்றும் பார்க்காமல் காயப்படும் வீரர்கள் எல்லாருக்கும் சேவை செய்யும் தன்னார்வத் தொண்டர்களை யாரும் தாக்கக் கூடாது, மாறாக அவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டியது போரிடும் தரப்புகளின் கடமை. இவ்வாறெல்லாம் அந்நூலில் எழுதியிருந்தார்.

அதோடு நின்றுவிடாமல் இந்தத் தனது கருத்துக்களைச் செயல்படுத்த ஜெனீவாவில் நான்கு முக்கிய பிரபலக் குடும்பங்களிலிருந்து நான்கு பேரைச் சேர்த்து ஐவர் குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவின் முயற்சியால் 1863ம் ஆண்டு ஜெனீவாவில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தினார். அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் பன்னாட்டுப் பிரதிநிதிகள் கூடி ஹென்றி டுனன்ட்டின் கருத்துக்களை விவாதித்து ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றினார்கள். சண்டையில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் தொண்டர் குழுக்களை ஏற்படுத்துதல், இவர்கள் கையில் ஒரு துணிப்பட்டையை அணிந்து கொண்டு காயமடைந்த வீரர்களுக்குப் பாரபட்சமின்றி உதவி செய்தல், காயமடைந்த வீரர்கள், போர்க் கைதிகள் ஆகியோரை மனிதாபிமானத்தோடு நடத்துதல் உட்பட சில முக்கிய அம்சங்களைக் கொண்டு வந்தார்கள். வெள்ளைத் துணியில் சிவப்பு நிறத்திலுள்ள சிலுவை சின்னமே இவர்கள் அணிந்திருந்தது. 1864ல் டென்மார்க்கில் நடந்த Dybbol யுத்தத்தில் ஆயுதம் தாங்கிய சண்டையில் முதல் முறையாக இச்சின்னம் பயன்படுத்தப்பட்டது.

ஹென்றி டுனன்ட், இந்தத் தன்னலம் கருதாத் தொண்டில் இரவும் பகலும் ஈடுபட்டிருந்ததால் அவரது வியாபாரத்தைக் கவனிக்க ஆள் இல்லாமல் போயிற்று. அல்ஜரீயாவில் அவரது வியாபாரம் நொடித்துப் போனதால் 1867ல் திவாலாகி விட்டார். அவரின் ஐவர் குழுவில் இருந்த குஸ்தாவ் மோய்னியெர் (Gustave Moynier) என்பவருக்கு இவர் மீது தீராப் பகை ஏற்பட்டது. இந்தப் பகையினால் இவர் வியாபாரத்தில் நிறைய மோசடிகள் நடந்துள்ளன என்று குற்றம் சாட்டப்பட்டு இவரைக் கைது செய்ய உத்தரவு போட்டார்கள். இவரே தொடங்கின செஞ்சிலுவை சங்கத்தின் செயலர் பதவியிலிருந்தும் விலக்கினார்கள். அப்போது ஜெனீவாவை விட்டு கட்டாயமாக அவர் வெளியேற வேண்டியிருந்தது. ஆயினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் தேசிய செஞ்சிலுவைச் சங்கம் உருவானது. ஹென்றி டுனன்ட் உருவாக்கிய குழு, 1876ல் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் என்ற பெயரைச் சூடிக் கொண்டது.

ஆயினும் அன்று ஜெனீவாவை விட்டுச் சென்ற ஹென்றி டுனன்ட், ஐரோப்பாவில் ஒவ்வோர் இடமாகச் சென்று ஆங்காங்கு மக்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டு கிடைத்த இடத்தில் தூங்கினார். கடைசியாக தனது தாய் நாட்டிற்குள் வந்த சமயத்தில்தான் ஹெய்டனில் மயங்கி விழுந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மூலமாகச் செய்திகள் பரவின. ஓர் இளம் நிருபர் இவரிடம் எடுத்த பேட்டி ஒரு ஜெர்மன் தினத்தாளில் முதல் பக்கத்தில் பிரசுரமானது. ஒரு நல்ல உள்ளத்திற்கு இந்த நிலையா என்பதை உலகம் அறியத் தொடங்கியது. 1901ம் வருடம் அமைதிக்கான நொபெல் விருதும் ஹென்றி டுனன்ட்டுக்குக் கிடைத்தது. இவர் 1910ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனது 82வது வயதில் இறந்தார். இந்த மாமனிதன் ஏற்படுத்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் இன்று ஏறத்தாழ ஒன்பது கோடியே எழுபது இலட்சம் தன்னார்வப் பணியாளர்கள் 186 நாடுகளில் சேவையாற்றி வருகின்றனர். சிலுவை ஒரு மதத்தின் அடையாளம் என்று சொல்லி சில நாடுகள் அதனை ஏற்பதற்குத் தயங்கின. இதனால் இதன் சின்னத்தில் சிவப்புநிற பிறை அடையாளமும் சேர்க்கப்பட்டது. எனவே இன்று இந்தச் சங்கம், செஞ்சிலுவை மற்றும் செம்பிறை கழகங்கங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பாக நற்பணியாற்றி வருகின்றது. போர் நடக்கும் சமயங்களில் மட்டுமல்ல, உலகில் எங்கு இயற்கைப் பேரிடர் இடம் பெற்றாலும் அங்கும் சென்று இவ்வமைப்பினர் பணி செய்யும் அளவுக்கு இன்று இது வளர்ந்துள்ளது. வெள்ளைத் துணியில் சிவப்புநிற சிலுவை சின்னத்துடன் பணிசெய்யும் செஞ்சிலுவைப் பணியாளர்களை இடர்துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நாம் காணத் தவறுவதில்லை.

ஹென்றி டுனன்ட் பிறந்த மே 8ந்தேதியன்று ஆண்டுதோறும் இந்தப் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பின் உலக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா, வருவதை எதிர்கொள்ளடா என்பது போன்று இம்மாமனிதன் வாழ்ந்திருக்கிறார். இவரைப் போன்ற மகாமனிதர்கள் பற்றி அறியும் போது ஏன் நானும் இவர்களில் ஒருவராக உயர முடியாது என்ற கேள்வி நம் ஒவ்வொருவரிலும் உதிக்க வேண்டும். சமயவெறி, இனவெறி என வெறித்தனச் செயல்களால் மனிதனே சகமனிதனைக் கொன்று குவிக்கும் அநியாயங்களைக் கண்டு நமது நெஞ்சங்கள் வேதனையால் துடிக்கின்றன. இவை கொடூரமான மனிதமற்ற செயல் என்பதை வருங்காலத் தலைமுறையாவது உணரச் செய்ய வேண்டும். போர், பேரழிவு, பேரிடர், பெருந்துயர் என்று எங்கு துயர் இடம் பெற்றாலும் உடனடியாக அவ்விடம் சென்று நற்பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்குத் தகுந்த மரியாதை அளிக்கக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

மகாத்மா காந்தி தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த போது ஒருமுறை இரயிலைப் பிடிப்பதற்காக வேகமாக ஓடினார். அவ்வாறு ஓடி இரயிலில் ஏறிய போது அவரது இடதுகால் செருப்பு தவறி கீழே விழுந்து விட்டது. இரயில் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. காந்திஜி சிறிதும் தாமதிக்காமல் தனது வலது கால் செருப்பைக் கழற்றித் தான் தவறவிட்ட செருப்பின் அருகே தூக்கி வீசினார். இச்செயல் அந்தப் பெட்டியில் பயணம் செய்தவர்களுக்கு வியப்பைத் தந்தது. ஒருபயணி மகாத்மாவிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டார். அவர் சொன்னார் - ஐயா, அந்த வழியாக யாராவது வரும் போது என் இரண்டு செருப்புகளும் தென்பட்டால்தானே அவருக்காவது பயனாக இருக்கும் என்று.

அன்பர்களே, கொடுத்து வாழ். கெடுத்து வாழாதே என்பதே நல்ல உள்ளங்களின் செயல்பாடுகள். அன்பு என்பது அதையே கொடுத்துப் பெற வேண்டிய பொருள். அன்பைக் கொடுத்தால் தான் அன்பைப் பெற முடியும். தன்னலமாக இதுவரை வாழ்ந்திருந்தால் அதனை மூட்டை கட்டி வைத்துவிட்டு பிறர் நலம் பேணத் தொடங்குவோம். மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். இயற்கை சொல்லிக் கொடுக்கும். வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்.

 








All the contents on this site are copyrighted ©.