2009-05-02 14:24:10

புனித பூமிக்காகச் செபிக்கத் திருத்தந்தை அழைப்பு


மே02,2009. இன்னும் சிறிது நாட்களில் புனித பூமிக்குத் தான் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளவேளை, அப்பகுதிக்காகவும் அப்பகுதி மக்களுக்காகவும் தன்னுடன் சேர்ந்து சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உலகில் துன்புறுவோர் மற்றும் இறைவார்த்தைப்பணிக்கு உதவி வரும் பாப்பிறை அமைப்பின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புனித பூமிக்கு அமைதியின் திருப்பயணியாகச் செல்வதாகக் கூறினார்.

நம் ஆண்டவர் பிறந்து, இறந்து உயிர்த்த மற்றும் ஒரே கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மூன்று மதங்களுக்கானப் புனித இடமாக விளங்கும் புனித பூமி, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறைகளாலும் அநீதிகளாலும் நிறைந்துள்ளது, இது அங்கு நம்பிக்கையின்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் பயத்தையும் கொண்ட பொதுவான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

புனித பூமி மக்கள் ஒப்புரவு, நம்பிக்கை, அமைதி ஆகியக் கொடைகளைப் பெறுவதற்கு அவர்களுக்காகச் செபிக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, போர், பிளவு, வறுமை, ஏமாற்றம் ஆகியவற்றால் நிறைந்துள்ள இன்றைய உலகுக்கு கடவுளின் அமைதியின் அருள் உண்மையிலே மிகவும் தேவைப்படுகிறது என்றார்.

இன்று அகில உலகும் மிகுந்த கவலைதரும் பொருளாதார சூழலோடு போராடி வரும் இவ்வேளையில், கிறிஸ்தவர்கள் நம் ஆண்டவரின் ஆறுதல்தரும் வார்த்தைகள் கேட்கப்படுவதற்குக் கடினமாக உழைக்குமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஒருவருக்கொருவர் உதவுதல், பலப்படுத்துதல், நம்பிக்கை ஆகியவற்றின் புளிக்காரமாகவும் கிறிஸ்தவர்கள் வாழுமாறும் பாப்பிறை அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் புனித பூமிக்கானத் திருப்பயணம் இம்மாதம் 8 முதல் 15 வரை நடைபெறுகிறது.

மேலும், இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் உரோம் மறைமாவட்டத்தின் 19 தியோக்கன்களுக்கு குருத்துவ திருநிலைப்பாட்டு திருப்பலியை நிகழ்த்துவார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.