2009-05-02 12:25:52

நல்லாயன் ஞாயிறு மறையுரை .நற்செய்தி-யோவான் . அதிகாரம் 10 ,11- 18 .


நாம் இன்று வழிபாட்டு ஆண்டில் உயிர்ப்பு விழாவுக்குப்பின் 4 ஆவது ஞாயிற்றைக் கொண்டாடுகிறோம் . இஞ்ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்றும் தேவ அழைத்தல் ஞாயிறு என்றும் கொண்டாடப்படுகிறது .

இன்றைய நற்செய்தியை நமக்கு வழங்குவது



திருத்தூதர் யோவான் . அதிகாரம் 10 , 11- 18 .



இன்றைய நற்செய்தியில் நல்லாயன் நானே என்கிறார் இயேசு . நல்ல ஆயர்கள் யார் என்றும் போலி ஆயர்கள் யார் என்றும் நமக்கு இயேசு இனம் காட்டுகிறார்.

இறைவாக்கினர் எசக்கியேல் 34 ஆவது அதிகாரத்தில் போலி ஆயர்கள்பற்றி விரிவாகக் கூறுகிறார் . இஸ்ராயேல் மக்களை இறைவழியில் நடத்திச் செல்லாத தலைவர் அனைவரும் போலிகளே .இவர்கள் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள் . ஆடுகளை மேய்க்கவில்லை . நலிந்தவை , பிணியுற்றவை , எலும்பு முறிந்தவை , வழிதவறியவை , காணாமல் போனவை , இவைபற்றி இவர்கள் யாதொரு கவலையும் கொள்ளவில்லை . ஆடுகள் சிதறிவிட்டன . கொடிய மிருகங்களுக்குப் பலியாயின .எனினும் இவர்கள் மந்தையை மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொண்டார்கள் . என்னே இவர்களது கடமையுணர்வு !. என்னே இவர்களது பொறுப்பு ! . நம்மில் பலரும் இவர்கள் போன்று போலிகள் இல்லையா? . நம் சூழலில் பொறுப்பையும் , கடமையையும் உணர்ந்து நடவாதபோது நம்மீதும் இஸ்ராயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு என்ற ஆண்டவரின் கூற்று உண்மைப்படாதா? . நாம் கூலிக்கு மேய்ப்பவரகளாக இருக்கிறோமேயன்றி , ஆயர்களாக இல்லை . ஆடுகள் மீது நமக்கு அக்கறையில்லை . ஆடுகள் அழிய நாம் கைகட்டிக்கொண்டு நிற்கிறோம். பெற்றோர்கள் , தலைவர்களுக்கு மட்டுமன்று எல்லோருக்கும் அவரவர் சூழலில் கடமையுணர்வு வேண்டும் என்பதை உணர்வோமா? .

‘நல்ல’ என்ற சொல்லுக்கு பற்றுறுதி , நம்பிக்கை , அன்புப்பிடி முதலிய அர்த்தங்கள் உள்ளன. இயேசு தம் ஆடுகள் மேல் பற்றுறுதி , அன்புப்பிணைப்பு கொண்ட ஆயர் . இந்த அன்புப் பிணைப்பே தம் ஆடுகளுக்காகத் தன் உயிரையே துச்சமாக மதிக்க வைக்கிறது இயேசுவை. ஆடுகள் மீது அக்கறை இருக்கிறது. எனவே தம் ஆடுகளை அவர் அறிகிறார். அறிகிறார் என்பதற்கு அன்பு செய்கிறார் என்பது எபிரேய , கிரேக்க மொழிகளில் பொருளாகும் .



நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்பார் இயேசு . அவர் நமக்கு தம் உயிரையும் நிலை வாழ்வையும் அளிக்கிறார். அவரில் நம்பிக்கை கொள்வோருக்கு அவரின் மதிப்பீடுகளுக்குப் பணிந்து நடப்போருக்கு உண்மையான உயிர் வாழ்வை அளிப்பவர் இயேசு . நம் போலி வாழ்வை விடுத்து உண்மை வாழ்வை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோமா? .



நல்ல ஆயனாகிய இயேசு அன்பான கடவுள் . வாழ்வளிக்கும் கடவுள். தந்தையாகிய கடவுளும் அவரும் ஒன்றே என்பதை அவர்கொண்டுள்ள இறைக்குணங்களால் காட்டுகிறார் . தந்தை அன்பு செய்பவர் . இயேசுவும் பாவிகளுக்கு , ஏழை எளியோருக்கு நசுக்கப்பட்டோருக்கு ஒடுக்கப்பட்டோருக்கு நோயாளிகளுக்கு அன்பு காட்டியவர் . தந்தை முடிவில்லா வாழ்வு அளிப்பவர். இயேசுவும் என்றும் நிலைக்கும் வாழ்வை அளிப்பவர் . எனவே நானும் தந்தையும் ஒன்றே என்பார் . நானாகவே எதையும் செய்வதில்லை . என் தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பார் இயேசு . நான் தந்தையுள் இருக்கிறேன் . தந்தை என்னுள் இருக்கிறார் என்பார் . தந்தை மகனோடு ஒன்றாயிருப்பது போல நாமும் ஒருவர் ஒருவரோடு இறைவனோடு ஒன்றாகி வாழவேண்டும் . இதுவே இயேசுவின் செபம் . தந்தாய் நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன். இச்செபம் நமக்கு ஓர் அழைப்பு மட்டுமன்று , சவாலாகவும் அமைய வேண்டும் .



ஒரு காலம் வரும் . அப்போது உலகத்து மக்கள் எல்லோரும் ஒன்றே குலம் , ஒருவனே தேவன் என்பதை நாம் ஒன்றுபட்டு அன்புற்று வாழ்வதால் காட்டுவோம் . உலகமனைத்திலும் ஒரே வகையான வழிபாடு இல்லாவிட்டாலும் நல்ல வாழ்க்கை மதிப்பீடுகளை நமதாக்குவோம் . கடவுளுக்கும் நம்மை அடுத்திருப்பவர்களுக்கும் அன்பு கூர்வோம் . மனச் சாட்சிப்படி வாழ்ந்து நேர்மையாக உண்மையாக வாழ்வோம் . பரம்பொருளாகிய கடவுள் பல்வேறு நிறமும் குணமும் கொண்ட ஆடுகளைப் படைத்துள்ளார் . அனைத்தையும் அன்பு செய்கிறார் . அவைகளை நன்கு அறிவார் . எல்லோருக்கும் பசும்புல் நிலத்தில் இடமளிக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய இரக்கமிகு பார்வையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறோம் .





தன் நண்பர்களுக்காக தம் உயிரைக்கொடுத்த இயேசு அதைவிட மேலான அன்பு வேறென்ன எனக் கேட்கிறார் . அன்பின் உச்சிக்கே சென்று தாமே அன்பாகி , நம்மேல் அளவு கடந்த அன்பைப் பொழியும் அன்பருக்கு அவருடைய அழைப்புக்கு அவருடைய படிப்பினைகள் மதிப்பீடுகளுக்கு , அவருடைய கட்டளைகளுக்கு நாம் செவிமடுக்கிறோமா? . என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கும் என்பார் இயேசு . நாம் அவரால் என் ஆடுகள் என்று அழைக்கப்படும் நிலையில் உள்ளோமா? .

நல்ல ஆயன் ஞாயிறைக்கொண்டாடும் நாம் நல்ல ஆயர்களை மறைப்பணியாளர்களை தமக்கென வாழாத தகைமை கொண்டு பிறர்க்கென வாழ்வோரை இயேசு தம் பணிக்கு அழைக்கிறார் . இதையே தேவ அழைத்தல் என்கிறோம் . மேலை நாடுகளில் துறவு வாழ்வை மேற்கொள்வது குறைந்து வருகிறது . நல்ல மேய்ப்பர்களை மக்களுக்காக உழைப்பவர்களை நம் தந்தையாகிய கடவுள் நமக்குத் தருமாறு நாம் மன்றாடுவோம் . வரவிருக்கும் தமிழகத் தேர்தலில் தமக்கென வாழாது மக்களுக்காக வாழும் தலைவர்களைத்தருமாறு மன்றாடுவோம் . சிறப்பாக இலங்கையில் அன்பும் அருளும் மேலோங்கி இன்பநிலை பொங்கிட எல்லாம் வல்ல கடவுள் இன்னருள் பொழிவாராக .








All the contents on this site are copyrighted ©.