2009-05-02 14:34:25

இலங்கையில் சொந்த இடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு ஐ.நா. அகதிகள் அமைப்பு உதவத் தொடங்கியுள்ளது


மே02,2009. இலங்கையில் முன்னாள் போர்ப் பகுதிகளிலுள்ள தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு உதவுவதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அகதிகள் அமைப்பு தனது மனிதாபிமானக் குழுக்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் பலகாலமாக சண்டை நடைபெற்ற மன்னார் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு இவ்வாரத்தில் சுமார் 400 பேர் திரும்பியுள்ளனர், இன்னும் ஏறத்தாழ மூவாயிரம் பேர் 15 கிராமங்களுக்கு வரும் வாரங்களில் திரும்புவதற்குத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு அறிவித்தது.

மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன.

நார்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு அமைப்புகள் வழியாக ஒரு கோடி டாலர் உதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நார்வே உயர் மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருகோணமலை புல்மோட்டையில் தள மருத்துவமனை ஒன்றையும், மருத்துவர்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி உதவியுள்ள இந்தியா, மேலும் நூறு கோடி ரூபாய் பெறுமதியான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி 40 ஆயிரம் குடும்பங்களுக்குரிய உதவிகள் ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 50 ஆயிரம் பொதிகள் விரைவில் வந்தடையவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் உடனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் 40 இலட்சம் அமெரிக்க டாலர் உதவியை வழங்க முன் வந்துள்ளது. அதனை யு.என்.எச்.சி.ஆர், ஐ.சி.ஆர்.சி., யூனிசெப், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் வழியாகவே வழங்கத் தீர்மானித்துள்ளது.

அவசர மனிதாபிமான உதவிகளுக்காக 12 இலட்சத்து முப்பதாயிரம் டாலர் உதவிகளை வழங்க சுவிஸ் முன்வந்துள்ளது. ஐ.சி.ஆர்.சி., உலக உணவுத் திட்டம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர். ஆகியன வழியாகவே இதனை வழங்கப் போவதாக அது அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.