2009-05-01 18:04:11

இசை நம் உள்ளத்தை ஆண்டவன் மடியில் கொண்டு சேர்க்கிறது என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .010509


திருத்தந்தையாகப் பணியேற்ற 4 ஆவது ஆண்டு விழா , இசை மழையோடு கொண்டாடப்பட்டது . இசை ஒரு செபமாக , ஆண்டவனிடம் எழுந்து செல்வதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . ஏப்ரல் 30 மாலை அவர் 4 ஆண்டுகள் திருத்தந்தையாகப் பணிபுரிந்த விழா இசைக் கச்சேரியோடு கொண்டாடப்பட்டது. இதனை இத்தாலியின் குடியரசுத்தலைவர் ஜார்ஜியோ நாப்போலித்தானோ ஏற்பாடு செய்திருந்தார் . இசைக் கச்சேரி முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் நடந்தது . ஏப்ரல் 19 ஆம் தேதியோடு திருத்தந்தை 4 ஆண்டுகள் திருத்தந்தையாகப் பணி ஆற்றியிருந்தார் . ஜோசப்பே வெர்தி சிம்பானிக் ஆர்க்கெஸ்ட்ராவும் , மிலான் நகரப் பாடகர்குழுவும் இணைந்து கச்சேரியை வழங்கினர். அவர்கள் ஹேய்டன் , மோசார்ட் , விவால்டி ஆகியோரின் மிகச் சிறந்த இசை அமைப்புக்களை மீ்ட்டிக்காட்டினர் . இசை மழையில் நனைந்து கச்சேரியின் இறுதியில் பேசிய திருத்தந்தை இசையின் இனிமை கடவுளைத் தியானிக்க உதவுவதாகத் தெரிவித்தார் . இசைமழையில் நனையும்போது உள்ளம் ஆண்டவனில் லயித்து நமக்காக தம் உடலைச் சிலுவையில் காணி்க்கையாக்கிய இயேசுவின் தியாகத்தைத் தியானிக்கச் செய்தது எனக்கூறினார் . திருத்தந்தை இத்தாலியின் குடியரசுத்தலைவர் நாப்போலித்தானோவுக்கு தம் நன்றியை நிகழ்ச்சியின் முடிவில் காணிக்கையாக்கினார் . தொடங்கியுள்ள அவரது 5 ஆவது ஆண்டு தொடக்கத்தில் அவர் எந்நாளும் கடவுள் விருப்பத்தை நிறைவேற்ற அவருக்காக மன்றாடுமாறு கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.