2009-04-29 14:59:45

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் – எழுத்தாளர் புனித ஜெர்மானுஸ்


ஏப்.29,2009. கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஆதிகாலக் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பற்றிய நம் மறைபோதகத்தில் இன்று ஆயரும் கான்ஸ்டாண்டிநோபிள் பிதாப்பிதாவுமாகிய புனித ஜெர்மானுஸ் குறித்து நோக்குவோம் எனத் தமது உரையை ஆங்கிலத்தில் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 புனித ஜெர்மானுஸின் விழா கிரேக்கத் திருச்சபையில் மே மாதம் 12ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. சாராசென் இராணுவம் 717ம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளை ஆக்ரமித்த போது அன்னைமரியின் திருவுருவம் மற்றும் திருச்சிலுவையின் புனிதப் பொருட்களைத் தாங்கி செப ஊர்வலம் ஒன்றை வழி நடத்திச் சென்றார் புனித ஜெர்மானுஸ். இதனால் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது. புனித ஜெர்மானுசும் மக்களின் பக்தி முயற்சிகளுக்கு இறைவன் வழங்கிய பதிலுரை என அதனை உறுதியாக நம்பினார். ஆனால் சிறிது காலத்திற்குப்பின் பேரரசர் மூன்றாம் லியோ தெய்வங்களின் திருவுருவங்களைக் கொண்டிருப்பது சிலை வழிபாட்டிற்கு ஒப்பாகும் எனக் குற்றம் சாட்டி அவைகளைத் தடை செய்தார். பேரரசரின் இம்முடிவை 730ம் ஆண்டு புனித ஜெர்மானுஸ் எதிர்த்த போது அவர் கட்டாயமாக துறவுமடத்திற்குள்ளேயே தன்னை முடக்கிக் கொள்ள பணிக்கப்பட்டார். அங்கேதான் பின்னர் அவர் இறைவனடி எய்தினார். இப்புனிதர் மறக்கப்பட்டுவிடவில்லை. இரண்டாம் நிசேயா பொதுச்சங்கத்தில் திருவுருவங்கள் மீதான பக்தி வழிபாட்டு முறைகள் மீண்டும் உயிர்பெற்ற போது புனித ஜெர்மானுஸ் சிறப்பான விதத்தில் கௌரவிக்கப்பட்டார். திருச்சபை மீதான ஆழமான அன்பிலும் மாதா பக்தியிலும் ஊறியதாக இருந்த புனித ஜெர்மானுசின் எழுத்துக்கள் கிழக்கிலும் மேற்கிலும் வாழ்ந்த விசுவாசிகளின் பக்தி முயற்சிகளில் பெருமளவில் நல்பாதிப்புக்களைக் கொண்டிருந்தது. அவர் மிகவும் சிறப்பான, அழகிய திருவழிபாட்டு முறையைப் பரப்பினார் மற்றும் மரியியலில் ஆழமான சிறப்புச் சிந்தனைகளைக் கொண்டிருந்தார். அன்னைமரி காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது மற்றும் வானகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது பற்றிய தன் மறையுரைகளில் அவர் அன்னைமரியின் இறைவனுக்கான பணிகளையும் உயர்குண நலன்களையும் எப்போதும் உயர்த்தியே பிடித்தார். அன்னைமரியின் உடல் அழியாதிருந்ததற்கான ஆதாரத்தை அவளின் கன்னிமை தாய்மை அடைந்ததில் காணும் எழுத்துப் படிவம் திருத்தந்தை 12ம் பத்திநாதரால் அவரின் அப்போஸ்தலிக்க ஏடான “Munificentissimus Deus” ல் இணைக்கப்பட்டது. புனித ஜெர்மானுஸின் பரிந்துரையால் நாம் அனைவரும் திருச்சபை மீதான அன்பிலும் அன்னைமரி மீதான பக்தியிலும் புதுப்பிக்கப்படுவோம்.

RealAudioMP3 இவ்வாறு மறைபோதகத்தை நிறைவு செய்து அனைவருக்கு்ம் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.