2009-04-27 16:15:12

புனிதர்களின் எடுத்துக்காட்டான வாழ்வை பின்பற்ற வேண்டும், திருத்தந்தை


ஏப்.27,2009. இதயத்தின் ஆழமான புதுப்பித்தலில் இயேசுவின் உயிர்ப்பின் மறையுண்மை செயலாற்றுவதை இஞ்ஞாயிறு புனிதர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து முத்தி பெற்றவர்களின் வாழ்வில் காண்கிறோம் என ஞாயிறு திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகரின் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் முத்தி பெற்றவர்கள் ஆர்க்காஞ்சலோ ததினி, பெர்னார்டோ டொலோமெய், நூனோ தெ சாந்தா மரிய அல்வாரெஸ் பெரைரா, கெர்ட்ரூர்ட் கொமென்சோலி மற்றும் கத்ரீனா வோல்பிசெல்லியை புனிதர்களாக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, இயேசுவின் உயிர்ப்பின் மறையுண்மையே மீட்பு வரலாறு முழுவதையும் வழிநடத்திச் செல்கிறது என்றார்.

திருநற்கருணையில் உண்மையில் பிரசன்னமாயிருக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கி நம் பார்வையைத் திருப்ப இவ்வுயிர்ப்பின் காலம் சிறப்பான விதத்தில் அழைப்புவிடுக்கிறது எனவும் அவர் கூறினார்.

உயிர்த்த இயேசு எம்மாவுஸ் செல்லும் பாதையில் இரு சீடர்களுக்கு காட்சி அளித்து தான் உயிர்த்ததை வெளிப்படுத்தியது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, மறைநூலில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டிய இயேசு, பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என அனைத்து நாடுகளிலும் பறைசாற்றப்பட வேண்டும் என்று கூறியுதையும் எடுத்தியம்பினார்.

நற்கருணை எனும் திருவருட்சாதனத்திலும் செபவாழ்விலும் இந்த ஐந்து புனிதர்களும் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டிலிருந்து தனது மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

அதன்பின் வழங்கிய ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உறையின் போது பல்வேறு மொழிகளில் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.