2009-04-27 15:28:54

தொழிலுக்கு வந்தனை செய்வோம்


ஏப்.27,2009. “உன்னையெண்ணிப் பாரு. உழைத்து முன்னேறு. உண்மையைக் கூறு. செம்மை வழி சேரு” என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள். அண்மையில் ஓர் இலங்கை நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது மிகவும் களைத்துச் சோர்ந்து உட்கார்ந்திருந்தார். பிள்ளைகளைக்கூட கொஞ்ச முடியாமல் இருந்தார். என்ன இப்படி இருக்குறீங்க என்று கேட்டதற்கு அவர் சொன்னார்- கடுமையான வேலை. முதுகும் தோள்பட்டையும் ரொம்ப வலிக்குது. காலையிலிருந்து சாயங்காலம் ஆறுமணிவரை கடின வேலை. இப்படி நடப்பது ஒருநாள் இரண்டு நாள் அல்ல. குறிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக வேலை செய்யும் போது அதற்குப் பணம் கிடைத்தாலும் பரவாயில்லை. பணம் கேட்டால் வேலையை விட்டுப் போ என்கிறார் முதலாளி. நான் இந்த வேலையை விட்டால் வேறு வேலையும் கிடைக்காது என்றார். இந்த நண்பர் போல் பலர் பணியிடங்களில் கஷ்டப்படுகிறார்கள். நாடுகளில் முதுகெலும்பு உடைய பல ஆண்டுகள் வேலை செய்தும் போதிய சம்பளமோ, வேலை நிரந்தரமோ இல்லாமல் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். எந்த உரிமையைக் கேட்டாலும் முதலாளிகள் வேலையை விட்டே துரத்தி விடும் அபாயத்தையும் எதிர்நோக்குகின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வேறு பலரும் வேலை இழந்துள்ளனர்

பணியிடங்களில் இந்நிலை என்றால், பணியின் போது பல உயிரிழப்புகளும் இடம் பெறுகின்றன. 1999ம் வருடம், ஜூலை 23ம் தேதி திருநெல்வேலியில் 17 தலித்தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்ததை நம்மால் மறக்க முடியாது. அம்பாசமுத்திரத்திலுள்ள மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு பேரணி நடத்திய போது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலில் நிலைகுலைந்து உயிரைக் காப்பாற்றுவதற்காக பலர் ஆற்றில் குதிக்க, அவர்களில் 17 பேர் வெள்ளத்தில் மூழ்கிப் போனார்கள். சீனாவில் கடந்த டிசம்பர் 27ம் தேதி “ஷாங்காய் சிட்டி” என்ற பெயரிலான அடுக்குமாடி கட்டுமானப் பணியில் லிப்ட் செயலிழந்ததால் அதில் சென்ற 17 தொழிலாளர்கள் இறந்தனர். சில நீர்தேக்கங்கள், சுரங்கங்கள் அருகில், அவை கட்டப்படும் போது உயிரிழந்த உழைப்பாளிகளின் பெயர்களும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவண்ணம் வசனங்களும் கல்லில் எழுதப்பட்டுள்ளன.

இந்தியாவில் பத்து பேரில் ஒன்பது பேருக்கு எவ்வித வேலை உத்தரவாதமோ, சமூக பாதுகாப்போ இல்லை என்று தேசிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அண்மையில் கூறியுள்ளது. ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி, பணியிடங்களில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பணிசார்ந்த நோய்களால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்களும் இறக்கின்றனர், 12 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைகின்றனர், 16 கோடிக்கு மேற்பட்டவர்கள் நோய்களால் தாக்கப்படுகின்றனர். ஆபத்தான பொருட்கள் 4,40,000 தொழிலாளரை மாய்க்கின்றன. அஸ்பெஸ்டாஸ் என்ற கல்நார் கனிப்பொருளால் மட்டுமே சுமார் ஒரு இலட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர். ஆண்டுதோறும் வேலை சார்ந்த ஏறத்தாழ 27 கோடி விபத்துக்களால் தொழிலாளர்கள் துன்புறுகின்றனர். வேலை தொடர்புடைய சுமார் 16 கோடி நிகழ்வுகளுக்குப் பலிகடா ஆகின்றனர். உலகில் ஒவ்வொரு 15 வினாடிகளுக்கு ஒரு தொழிலாளி வீதமும், ஒவ்வொரு நாளும் ஆறாயிரம் தொழிலாளர் வீதமும் உயிரிழக்கின்றனர். போர்களைவிட வேலைகள் அதிகமான மக்களைக் கொல்லுகின்றன.

இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ள உலக தொழில் நிறுவனம், பணியிடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் தொழிலாளர்களிடையே அவற்றிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமென உழைத்து வருகிறது. இவ்வாண்டு ஏப்ரல் 21 முதல் 28 வரை, “சமூக நீதிக்கான 90 ஆண்டுப் பணி” என்ற தலைப்பில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 90ம் ஆண்டும் சுமார் 120 நாடுகளில் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 28, இச்செவ்வாய், "பணியிடப் பாதுகாப்பு மற்றும் நல நாள்" என்ற உலக தினமுமாகும். பணியிடங்களில் பாதுகாப்பையும், பணியாளர்க்கு நலமான வாழ்வையும், தரமான வேலையையும் சர்வதேச அளவில் ஊக்குவிப்பதற்கென இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வேலையின் போது கொல்லப்பட்ட, முடமாக்கப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல்நலம் குன்றி வாழும் தொழிலாளர்கள் இந்நாளில் நினைவுகூரப்படுகின்றனர்.

ஏப்ரல் 28ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுவதற்குக் காரணமும் இருக்கின்றது. கானடா நாட்டில் தொழிலாளர் இழப்பீட்டு சட்டம் 1914ம் ஆண்டு இந்நாளில் கொண்டுவரப்பட்டது. 1991ம் ஆண்டு கானடா நாட்டு நாடாளுமன்றம், பணியில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்க்கான தேசிய நினைவு நாளை ஏப்ரல் 28ம்தேதி கடைபிடிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்க ஐக்கிய நாடும் இதே கருத்துக்காக இதே நாளைத் தேர்ந்தெடுத்தது. இந்நாள் உலக தினமாகவும் குறிக்கப்பட்டது. இந்நாளை முன்னிட்டுப் பேசிய, பணியிடப் பாதுகாப்பு அமைப்புக்கான ஐ.நா. இயக்குனர் Sameera Al-Tuwaijri, வேலையின் போது ஏற்படும் இறப்புக்களைத் தடுப்பதற்கு நம்மால் முடியும். வாழ்வின் எல்லா நிலைகளிலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆயினும் பணியிடங்களில் பாதுகாப்பான நடவடிக்கைகளும் வழிமுறைகளும் எடுக்கப்பட்டால் ஒவ்வொரு 15 வினாடிகளுக்கும் ஒரு தொழிலாளி இறப்பதை நிறுத்த முடியும் என்றார். மனித வாழ்வின் மேன்மையும், வாழ்வின் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்றார்.

இந்த உலக நாளையொட்டி உரையாற்றிய, உலக தொழில் நிறுவன இயக்குனர் ஹூவான் சொமாவியாவும், வேலை, மனித மாண்பிற்கு ஆதாரமாக இருக்கவேண்டுமேயொழிய அது வியாபாரச் சரக்காக இருக்கக் கூடாது. உலக அளவில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் சமூக நீதி கிடைப்பதற்காக கடந்த 90 ஆண்டுகளாக இந்நிறுவனம் உழைத்து வருகிறது என்றார். உலகளாவிய அளவில் நிலைத்த அமைதி ஏற்பட வேண்டுமானால் அது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் நல்லதோர் வாழ்வும் தரமான வேலையும் கிடைக்க வேண்டுமென்பதற்கான உலக தொழில் நிறுவனத்தின் முயற்சியில் எல்லாரும் இணையுமாறும் கேட்டுள்ளார்.

அன்பர்களே, விபத்துக்கு உட்படுத்தாத கருவிகளையும், ஆபத்து மிகுந்த பணிகளில் தானியங்கி ரோபோக்களையும், தானியங்கி அறிவிப்பு ஒலிகளையும், சரியான வேலை முறைகளையும், முறையான பயிற்சிகளையும் அமைப்பதன் மூலம் பணியிடங்களில் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்பதே பலரின் கருத்து. விபத்தில்லாத நாட்களுக்கு ஊக்கப் பரிசும், விபத்துகளை தவிர்க்கிறவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவை போன்ற இன்னும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

வருகிற வெள்ளியன்று உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தையும் சிறப்பிக்கின்றோம். இத்தினம், தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்கவும், தங்களுக்குள்ள ஆத்மபலத்தை வளர்த்துக் கொள்ளவும், தங்களது உரிமைகளை அகில உலகுக்கு வெளிப்படுத்தவுமான ஓர் எழுச்சி தினம். இது, மூலதனத்தின் குவிப்பை ஒரு நாள் உழைப்பால் மறுத்து அதைக் குறைத்த நாள். எட்டுமணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோஷத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் நினைவு நாள். கால்களில் விலங்கோடு, கப்பலில் ஏற்றப்பட்டு, கடல்கடந்து கடத்தி விடப்பட்ட குற்றவாளிகளால் ஆஸ்திரேலியா உருவானதாம். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களால் இலங்கையின் பொருளாதாரம் கட்டப்பட்டதாம். ஆனால் இன்று அத்தொழிலாளரின் நிலை எப்படி இருக்கிறது?

மனிதமும் மனித வாழ்வும் மதிக்கப்பட்டு போற்றப்படும் போது, எல்லா உயிரையும் தன்னுயிர் போல் கருதும் நிலை வளரும் போது தொழிலாளரின் உயிர்களை காப்பாற்ற முடியும். அவர்களின் வாழ்வு உயரும். இந்நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல விழைகிறோம்.

'செய்யும் தொழில் உன் தொழிலே காண்', எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக்கூடாது என்கிறார் மகாகவி பாரதி. உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர். ஒருநாள் இரவு நெப்போலியன் இராணுவ அதிகாரியின் உடை அணிந்து தனது படைகளைப் பார்வையிடச் சென்றார். அப்போது ஓரிடத்தில் காவல்காரன் அவரைத் தடுத்து நிறுத்தினாந். நான் ஓர் இராணுவ அதிகாரி. படைகளைப் பார்வையிட வந்துள்ளேன். உள்ளே போகவிடு என்றார். அதற்கு அந்த வீரன், யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்க முடியாது. எனக்கு அப்படித்தான் உத்தரவு தரப்பட்டுள்ளது. மீறி நுழைந்தால் கொன்று விடுவேன் எனத் துப்பாக்கியைத் தூக்கினான். அமைதியாகத் திரும்பிய நெப்போலியன் அடுத்த நாள் அப்படைவீரனின் கடமையுணர்வைப் பாராட்டி அவனுக்குப் பதவி உயர்வு கொடுத்தார்.

உண்மையாக உழைப்பவர்களின் மதிப்பு எப்போதுமே கௌரவிக்கப்படும். எளிதானவற்றைச் செய்பவர் அலுப்புடன் வாழ்கிறார். அரிதானவற்றைச் மனநிறைவோடு செய்பவர் வாழ்கிறார். முடியாததைச் செய்து முடிப்பவர் வரலாற்றில் முத்திரை பதிக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.