2009-04-25 12:33:27

லூக்கா நற்செய்தி அதிகாரம் 24 , 36 -53 . 26-04-09 .


லூக்கா நற்செய்தி அதிகாரம் 24 , 36 -53 . 26-04-09 .



36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38 அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46 அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49 இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் ' என்றார்.50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.








All the contents on this site are copyrighted ©.