2009-04-25 15:47:43

போர் நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களுக்கு இலங்கை வடபகுதி திருச்சபை உதவிகளைச் செய்து வருகின்றது


ஏப்.25,2009. நோயாளிகள், காயமடைந்தவர்கள், களைத்துச் சோர்ந்தவர்கள் என இலங்கையில் போர் நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களுக்கு அந்நாட்டு வடபகுதி கத்தோலிக்கத் தலத்திருச்சபை மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றது.

போர் இடம் பெறும் பகுதியிலிருந்து அரசு கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களுக்கு வருகின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருச்சபை மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார் மன்னார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருள்திரு அந்தோணி விக்டர் மரியசூசை.

ஊடகங்களின் அறிவிப்புப்படி வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் பள்ளிகளிலும் அரசின் 15 முகாம்களிலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியிருக்கின்றனர்.

அரசு சாரா அமைப்பினர் அங்கு நுழையமுடியா நிலையில், ஞாயிறு தினங்களில் மட்டும் குருக்களும் கன்னியரும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனர், திருப்பலிகள் நிகழ்த்தப்பட்டு மக்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றும் அருள்திரு விக்டர் மரியசூசை கூறினார்.

தற்சமயம் எட்டு குருக்கள் எட்டு முகாம்களில் திருப்பலிகள் நிகழ்த்துகின்றனர் மற்றும் சில அருட்சகோதரிகள், சில முகாம்களில் வயதானவர்களுக்கென மருத்துவர்களுக்கு உதவி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, புனித அந்தோணியார் ஆலயத்தில் குண்டு வெடித்ததில் காயமடைந்துள்ள வன்னி காரித்தாஸ் இயக்குனர் 35 வயதாகும் குரு வசந்தசீலனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இவர், புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்தவர். இன்னும், புனித மரியா ஆலயத்தில் குண்டு வெடித்ததில் குரு ஜேம்ஸ் பத்திநாதரும் காயமடைந்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.