2009-04-25 12:26:50

உயிர்ப்பு விழாவுக்குப் பின் 3 ஆம் ஞாயிறு மறையுரை. 250409.


நற்செய்தி தூய லூக்கா 24 , 36-53 .



இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர் தம் சீடர்களுக்குத் தோன்றியது நான்கு நற்செய்தியிலும் தரப்பட்டு்ள்ளன . இயேசுவின் பக்தர்களை இயேசுவுக்குச் சான்றுபகரும் வாழ்க்கையை வாழ தூண்டுவதற்காகவே அவை எழுதப்பட்டன . நாம் இன்று பார்த்த தூய லூக்காவின் நற்செய்தியில் உயிர்த்த இயேசு தாம் ஓர் ஆவி அல்ல , சிலுவையில் அறையுண்ட , கைகளில் ஆணிகளால் துளையுண்ட இயேசு தாமே எனச் சீடர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார் .

இந்நாட்களில் போல அந்நாட்களிலும் இயேசு உயிர்த்தாரா , உயிர்த்தவர் சிலுவையில் ஏற்றப்பட்டவர்தானா போன்ற சந்தேகங்கள் மக்கள் மனத்தில் எழ ஆரம்பித்தது . அவர்களது சாதாரண உணர்வுகளுக்குப் புலப்படுத்துமாறு இயேசு தம்முடைய கைகளிலிருந்த காயத்தின் தழும்புகளைக்காட்டியதாகவும் , உண்பதற்கு ஏதாகிலும் உண்டா எனக் கேட்டதாகவும் தூய லூக்கா தம்முடைய நற்செய்தியின் இறுதியில் எழுதியுள்ளார் . இயேசு உயிர்த்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த மக்களுக்கு உயிர்த்த இயேசுவைப் பற்றித் தெளிவுபடுத்த இந்தப்பகுதியில் உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றிய விதத்தை விவரிக்கிறார் . இயேசு உயிர்த்தார் , சீடர்களுக்குத் தோன்றினார் என்பது கனவோ, கற்பனையோ அல்ல . அச்சத்தையும் ஆச்சரியத்தையும் தரக்கூடிய அளவுக்கு இயேசு இறப்புக்குப்பின் தம் உடலோடு உயிர்த்தெழுந்தார் .

தூய லூக்காவின் நற்செய்தி இயேசு விண்ணெழுந்து சென்ற நிகழ்ச்சியோடு முடிவுறுகிறது . சீடர்களின் வாழ்வில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் பிறந்துள்ளதைக் காண்கிறோம் .



கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை 1492 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார் . அதே சமயம் ஜெர்மனி நாட்டில் இரண்டு நண்பர்கள் சிறந்த ஓவியர்களாக வேண்டும் எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள் . அவர்களில் ஒருவர் பெயர் ஆல்பிரட் ட்ரூரர் , மற்றவர் பிரான்ஸ் க்னிக்ஸ்டெயின் . அவர்களிடம் மிகுந்த ஆர்வம் இருந்தது . ஓரளவு ஓவியம் தீட்டத் தெரிந்திருந்தார்கள் . ஆனால் ஓவியப் பள்ளிக்கூடம் சென்று கற்பதற்குத் தேவையான பணவசதியில்லை . அவர்களில் ஒருவர் வேலை செய்து மற்றவர் படிப்பதற்குப் பண உதவி செய்வதென்றும் , அவ்வாறு படித்தவர் மற்றவருக்குப் பிறகு உதவி செய்வதென்றும் உறுதி செய்துகொண்டனர் .

எவர் முதலில் படிக்கச் செல்வது என்பதைக் கண்டறிய அவர்கள் ஒரு காசைப் பூவா , தலையா எனப் போட்டுப் பார்த்து முடிவெடுத்துக் கொண்டனர் . முதலில் ட்ரூரர் முதலில் படிக்கச் சென்றார் . க்னிக்ஸ்டெய்ன் வேலை செய்யச் சென்றார் . ட்யூரர் மிகத் திறமையான ஓவியரானார் . தம் ஓவியங்களை நிறைய விலைக்கு விற்கத் தொடங்கினார் . தம்முடைய ஒப்பந்தப்படி ஊருக்குத் திரும்பி தம் நண்பர் க்னிக்ஸ்டெய்ன் படிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வந்தார் . அப்பொழுதுதான் தம் நண்பர் தமக்காகச் செய்திருந்த தியாகத்தை அவர் உணர்ந்தார் . தம் நண்பரின் கடுமையான உழைப்புக் காரணமாக அவரது விரல்கள் விரைத்துப் போய் மென்மையான ஓவியம் தீட்டுவதற்குத் தகுதியில்லாதவைகளாக இருந்தன . க்னிக்ஸ்டெய்ன் ஓவியராவதற்குக் கொண்டிருந்த கனவுகளை மறந்தாலும் வருத்தப்படவில்லை . தம் நண்பருடைய வெற்றியில் இவரும் பெரு மகிழ்ச்சி கொண்டார் .

ஒரு நாள் ஆல்பிரட் ட்ரூரர் தம் நண்பர் காணாத போது அவர் கைகளைக் கும்பிட்டபடி செபித்துக் கொண்டிருந்த காட்சியை ஓவியமாகத் தீட்டினார் . அந்த ஓவியம் விலை மதிப்பில்லாத மிகச் சிறந்த ஓவியமாக மதிக்கப்பட்டது . தமக்காக தம் வாழ்வையும் கைகளின் உழைப்பையும் தானமாகத்தந்த நண்பரின் கும்பிட்ட கைகள் இன்று காலமெல்லாம் மறக்கமுடியாத மிகச் சிறந்த ஓவியமாக உலகெங்கும் போற்றப்படுகிறது .

இன்று ஓவியக் காட்சி சாலைகளில் ட்ரூரரின் பல சிறந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கண்களையும் மனத்தையும் கொள்ளையடிக்கின்றன . ஆனால் எல்லோர் உள்ளத்தையும் கண்டிப்பாகக் கவர்வது கும்பிட்ட கைகள் என்ற அவருடைய நண்பருடைய கரங்களாகும் . அந்த ஓவியம் பல லட்சம் பிரதிகள் உலகெங்கும் பிரதி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது . அந்தக் கைகளின் தியாகத்தை , நிபந்தனையில்லாத பேரன்பை , கடுமையான உழைப்பை , நன்றிப் பெருக்கை நினைவு படுத்துகின்றது .



இயேசுவின் கைகள் இன்னும் மிகப்பெரிய கதையை நமக்குச் சொல்கின்றன . இதோ , என் கைகளைப் பாருங்கள் ....என இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார் . இவ்வாறு கூறிய இயேசு தமது கைகளைத் தம் சீடர்களுக்குக் காண்பிக்கிறார் . சீடர்கள் ஏதோ ஓர் ஆவியைக் காண்பதாக நினைத்தார்கள் . ஆனால் இயேசு தம் கைகளைக்காண்பித்து நிரூபணங்களுக்கெல்லாம் மிகப்பெரிய நிரூபணமாக தாமேதான் சிலுவையில் கொல்லப்பட்ட இயேசு உயிரோடு வந்திருப்பதாகக் காட்டுகிறார் . சீடர்களின் மனதில் இயேசுவின் தழும்புகளும் சிலுவைச் சாவும் அழியாது பதிந்திருந்தன . இயேசு உயிர்த்து வந்துள்ளார் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை . நற்செய்தியாளர் லூக்கா தமது நற்செய்தியின் இறுதி அதிகாரத்தில் நம் நெஞ்சைத் தொடும் இந்தக் காட்சியை நமக்குத் தந்துள்ளார் . இயேசுவில் நமக்கு நல்லதொரு நண்பர் உள்ளார் என்பதை லூக்கா காட்டுகிறார் .



வாழ்க்கையில் மிக முக்கியமான பணியில் இருப்பவர்களுக்கு நாம் வணக்கமும் வாழ்த்தும் கொடுக்கிறோம் . ஆனால் அவர்கள் வெற்றிக்குப் படியாக , ஏணியாக பின்புலத்திலிருந்து உதவிய கரங்களை நாம் மறந்துவிடுகின்றோம் .

நம் வாழ்க்கையில் நாம் முன்னேற தம் கைகளைக் காயப்படுத்தி நமக்கு அன்பைப் பொழிந்து உதவியவர்களை நினைத்துப் பார்க்கிறோமா . ஒருவேளை அந்தக் கரங்கள் இப்பொழுது நம்மைவிட்டுப் பிரிந்து மறுவாழ்வை அடைந்திருக்கலாம் . அந்தக் கரங்களை நாம் பழைய புகைப்படங்களிலே மட்டுமே காணவேண்டியிருக்கலாம் . நாம் நிற்கத் தடுமாறியபோது நம்மைத் தாங்கி நடக்கக் கற்றுத்தந்தை கரங்களை நினைத்து நன்றி கூறுகிறோமா . குழந்தைப்பருவத்திலிருந்து இந்நாள் வரை நமக்கு எத்தனை எத்தனை அன்புள்ளங்கள் வாழ வழிகாட்டி உதவியிருக்கின்றன . நாம் நாமாகவே வளரவில்லை . வளரவும் முடியாது . நம்முடைய வருங்கால வெற்றிகளும் நமக்காக தம் இன்னுயிரைச் சிலுவையில் நீத்து இதோ ஆணிகள் துளைத்த அந்தக் கரங்களைக் காட்டும் ஆண்டவர் இயேசுவின் கரங்களில் உள்ளன .

செபிப்போமா – இறைவா இந்தப் பாஸ்காப் பெருவிழா நிகழ்ச்சிகளால் நாங்களும் மறுவாழ்வில் பங்குபெறும் பேற்றினைப் பெறுவோமாக . நாங்கள் நன்றி மறக்காத மக்களாக எங்களுக்கு உதவியவர்களுக்கு முக்கியமாக எங்களுக்கு வாழ்வளித்து காத்தவர்களுக்கும் எந்நாளும் உமது கரங்களில் எங்களைக் காத்து வழிநடத்தும் உமக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக வாழ அருள்தருவீராக .

 








All the contents on this site are copyrighted ©.