2009-04-25 15:50:49

இராக்கில் 2005ம் ஆண்டிலிருந்து 87,215 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்


ஏப்.25,2009. இராக்கில் குண்டுவெடிப்புகள், தூக்கிலிடுதல் என இடம் பெறும் இத்தகைய இடர்களில் 2005ம் ஆண்டிலிருந்து இதுவரை 87,215 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இறந்துள்ள 87,215 குடிமக்களில் 59,957 பேர் 2006க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலத்தில் இறந்தவர்கள் என்றும் அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களின் அறிவிப்புப்படி, 2003ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் நடந்த ஆக்ரமிப்புக்குப் பின்னர் இதுவரை 1,10,600 க்கு அதிகமான இராக்கியர்கள் இறந்துள்ளனர் என்று ஏ.பி. செய்தி நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, பாக்தாத்தின் மிக முக்கிய ஷியா தர்காவில் நடந்த ஒரு தாக்குதலில் அறுபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக்கிய காவல்துறையினர் கூறுகின்றனர்.

இமாம் மூஸா அல் கதீம் தர்காவின் நுழைவு வாயிலில் இரண்டு பெண் தற்கொலை குண்டுதாரிகள் தம்மை வெடித்துக்கொள்ளச் செய்திருந்தனர். வெள்ளிக்கிழமையில் தர்காவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.