2009-04-22 15:13:51

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதன் மறைபோதகம் – துறவி புனித ஆவுட்பெர்ட்


ஏப்.22,2009. துறவி புனித ஆவுட்பெர்ட் வாழ்ந்த காலத்தில் இடம் பெற்ற பெருங்குழப்பங்கள் துறவு மடங்களுக்குள்ளும் அவற்றின் வாழ்வை பாதித்தன. அக்காலத்தில் புனித ஆவுட்பெர்ட் எழுதியவை, தன் சகோதரத் துறவிகளின் துறவுமடவாழ்வுக்கான அழைத்தல்களில் ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதாக இருந்தன. அவரின் எழுத்துக்களில் மிகப் பலரால் வாசிக்கப்பட்ட “தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான மோதல்” என்பது அவரின் உடன் துறவிகளின் தினசரி ஆன்மீகப் போராட்டங்களில் அவர்களுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர், ஆன்மாவை அச்சுறுத்தும் 24 தீச்செயல்கள் ஒவ்வொன்றிற்கும் எதிராக மனிதனுக்கு உதவி அவனைச் சோதனைகளிலிருந்து காப்பாற்றும் நற்செயல்கள் 24ஐ சுட்டிக் காட்டினார். அவர் காலத்திய சமூகத்தின் அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பேராசையைக் கண்ணுற்ற புனித ஆவுட்பெர்ட், பேராசையை அனைத்துத் தீமைகளுக்கான மூல காரணம் என்பதை வலியுறுத்தி வாழ்விற்கு இட்டுச் செல்லும் குறுகிய வாயில் வழியே நுழையுமாறு அக்கால மக்களைக் கேட்டுக் கொண்டார். திருவெளிப்பாடு நூல் பற்றிய அவரது விளக்கவுரரையில் இயேசுவின் மறையுடலாம் நம்மில் அதாவது திருச்சபையில் இயேசு தினமும் பிறந்து இறந்து மீண்டும் உயிர்க்க வேண்டும் எனப் போதித்தார். அவ்வாறு பார்க்கும் போது அன்னைமரி திருச்சபைக்கான ஒரு முன்மாதிரிகையாக உள்ளார். ஆவுட்பெர்ட் துறவி, மேற்கத்திய உலகின் மரிஇறையியலாளராக நோக்கப்படுகிறார். அவரும் அன்னைமரி மீதான அளவற்ற அன்புடனேயே தன் போதனைகளை எழுதியுள்ளார். இறைவனைக் குறித்த நம் அறிவுக்கு அன்பே திறவுகோல் என்று ஆவுட்பெர்ட் சொல்கிறார். அறிவுசார்ந்த கல்வி என்பது நமக்குப் பாதையைக் காட்டலாம், ஆனால் நாம் கடவுளை அன்பு செய்யும் போது மட்டுமே நாம் உண்மையில் அவரைக் கண்டு கொள்ள முடியும். இந்தத் துறவி ஆவுட்பெர்ட்ன் எழுத்துக்களைப் பின்பற்றி இறைமீதான நம் அன்பில் தினமும் வளர முயல்வோம்.

இவ்வாறு புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, புனித ஆண்டின் திருச்சிலுவை இளையோர் வசம் ஒப்படைக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் புனித இலாரன்ஸ் சர்வதேச இளையோர் மையத்தின் அங்கத்தினர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜூபிலி ஆண்டின் போது புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய மரச்சிலுவையை அவ்வாண்டின் இறுதியில் பாப்பிறை இரண்டாம் ஜான் பவுல் உலக இளையோரிடம் கொடுத்தார். அச்சிலுவையானது புனித இலாரன்ஸ் சர்வதேச இளையோர் மையத்திலிருந்து உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கானத் தயாரிப்பாக உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றது. வருங்காலத் தலைமுறையினரும் இறைஇரக்கத்தை சுவைக்க உதவும் வண்ணம் இச்சிலுவையை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்வோம் எனச் சொல்லி அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.