2009-04-22 15:16:06

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து நாற்பதாயிரத்துக்கு அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர், ஐ.நா.அகதிகள் நிறுவனம்


ஏப்.22,2009. இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து நாற்பதாயிரத்துக்கு அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா.அகதிகள் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வெண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் போர்ப் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனற் என்று அந்நிறுவனத்திற்கான பேச்சாளர் ரான் ரெட்மோண்ட் கூறினார்.

இன்னும், போர் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மை மோதல்களின் போது சுமார் 4500 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு, பொதுமக்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் வகையில் போரில் ஈடுபட்டுள்ள தரப்பினர் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

போரிடும் இரு தரப்பினரும் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டியது அவசியம் என அக்கழகத்தின் இலங்கை ஆய்வாளர் யொல்னா பொஸ்டர் குறிப்பிட்டுள்ளார்

விடுதலைப் புலிகள் அமைப்புடனான இறுதிக் கட்டப் போரராட்டத்தின் போது அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழக்கக் கூடும் எனவும் அக்கழகம் தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.