2009-04-21 15:40:44

ஈரான் அரசுத்தலைவரின் உரைக்கு திருப்பீடப் பேச்சாளரின் கருத்து


ஏப்.21,2009. இனவெறி குறித்த ஐ.நா.கருத்தரங்கில் ஈரான் அரசுத்தலைவர் இஸ்ரயேலுக்கு எதிராகப் பேசிய வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தன என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்திரு பெதரிக்கோ லொம்பார்தி சே.ச. கூறினார்.

இஸ்ரயேலுக்கு எதிரான ஈரான் அரசுத்தலைவர் முகமது அஹ்மத்னெஜாட்டின் வார்த்தைகள் இஸ்ராயேலின் வாழ்வதற்கான உரிமை குறித்தோ, நாத்ஸி படுகொலைகளின் உண்மைத்தன்மை குறித்தோ கேள்வி எழுப்பவில்லையெனினும், அவை சரியான பாதையில் இருந்ததாகக் கூறமுடியாது என்றார் திருப்பீடப் பேச்சாளர்.

ஒருவித தீவிரப் போக்கையும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாட்டையும் ஈரான் அரசுத்தலைவர் வெளிப்படுத்தியதே மனித மாம்பு மதிக்கப்படுதல் மற்றும் இனவெறியும் சகிப்பற்ற தன்மைகளும் நீக்கப்படுதல் போன்றவைகளுக்கான தேவையை சுட்டிக்காட்டி நிற்கிறது என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.

இதற்கிடையே, இனவெறி குறித்து ஐ.நா.கருத்தரங்கில் ஈரான் அரசுத்தலைவர் வெளிப்படுத்திய யூதமத விரோதப்போக்கு வார்த்தைகளுக்குத் தன் எதிர்ப்பை வெளியிட்ட ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகச் சில நாடுகள் வெளிநடப்பு செய்ததையும் குறை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.