2009-04-20 14:40:46

உயிர்த்த கிறிஸ்து அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் பற்றுதியின் ஊற்றாக இருக்கிறார், திருத்தந்தை


ஏப்.20,2009. ஆதிக்கிறிஸ்தவர்கள், உயிர்த்த கிறிஸ்துவைத் தங்களின் உண்மையான மையம் மற்றும் அடித்தளமாகக் கொண்டிருந்ததில் அவர்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஞாயிறன்று கூறினார்.

இஞ்ஞாயிறன்று காஸ்தெல் கண்டோல்போவில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, பாஸ்கா கால இரண்டாம் ஞாயிறு இறைஇரக்கத்தின் ஞாயிறாகக் கடைபிடிக்கப்படுவது பற்றியும் பேசினார்.

புனிதை ப்பவுஸ்தீனா கொவால்ஸ்காவுக்கு நம் ஆண்டவர் வெளிப்படுத்திய ஆன்மீகச் செய்தியை ஏற்று உயிர்த்த கிறிஸ்து அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் பற்றுதியின் ஊற்றாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், பாஸ்கா கால இரண்டாம் ஞாயிறை இறைஇரக்கத்தின் ஞாயிறாக அறிவித்தார் என்றார் அவர்.

உயிர்த்த இயேசு, தம்மைப் பின்செல்லுவோருக்கு, எதனாலும் வெல்லமுடியாத மற்றும் உறுதியான புதிய ஐக்கியத்தை அருளினார், ஏனெனில் இது மனித வளத்தை அல்ல, மாறாக அவரால் அன்பு செய்யப்படுபவர்கள் மற்றும் மன்னிக்கப்படுபவர்கள் என்ற உணர்வை அனைவரிலும் ஏற்படுத்துகின்ற இறைஇரக்கத்தை அடித்தளமாகக் கொண்டது என்றார் திருத்தந்தை.

எனவே கடவுளின் இரக்கமுள்ள அன்பு, இன்று போல் நாளையும் திருச்சபையை உறுதியாக ஒன்றிணைக்கிறது என்ற அவர், நம் பாவங்களை மன்னித்து நம் அகவாழ்வை புதுப்பிக்கும் சிலுவையில் அறையுண்டு உயிர்த்த இயேசுவின் அன்பு மனுக்குலத்தை ஒரு குடும்பமாக அமைக்கின்றது என்று கூறினார்.

மேலும், தான் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு மற்றும் தனது 82வது பிறந்த நாளை முன்னிட்டு பாசமும் ஆன்மீக ஐக்கியமும் நிறைந்த நல்வாழ்த்துக்களை வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார் திருத்தந்தை. RealAudioMP3

திருச்சபைக்கானத் தனது பணிக்காகச் செபிக்குமாறும் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்குத் தமது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். RealAudioMP3

ஏப்ரல் 16ம் தேதி தனது பிறந்த நாளையும், ஏப்ரல் 19ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளையும் சிறப்பிக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.