2009-04-14 15:00:22

திருத்தந்தை நடத்திய புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சி சிந்தனைகளுக்கு இந்து பிரமுகர்கள் பாராட்டு


ஏப்ரல்14,2009.புனித வெள்ளியன்று உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் நடத்திய சிலுவைப்பாதை பக்தி முயற்சி செபப் பகிர்வுகளில் இந்து புனித நூலான உபநிடதத்திலிருந்து சிந்தனைகளைக் கையாண்டது குறித்து இந்து பிரமுகர்கள் தங்கள் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து இந்து தேசியவாதி ராஜன் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவ புனித வெள்ளி தின நிகழ்ச்சியில் இந்து சிந்தனைகள் பயன்படுத்தப்பட்டது வரவேற்கப்பட வேண்டியது என்றும், தத்துவயியலில் மிகவும் வளமை நிறைந்த இந்து புனித நூற்களை திருத்தந்தை படிக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுப்பதாகக் கூறியுள்ளார்.

இரவீந்திரநாதாகூரின் கீதாஞ்சலியிலிருந்தும், மகாத்மா காந்தி குறித்தும் புனித வெள்ளி சடங்குகளில் குறிப்பிடப்பட்டது குறித்து நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

அமைதியும் நீதியும் நிறைந்த ஓர் உலகைக் கட்டி எழுப்புவதில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜெட் வலியுறுத்தினார்.










All the contents on this site are copyrighted ©.