2009-04-13 14:04:24

''தோற்குமா நம்பிக்கை''?


ஏப்ரல்13,2009. ''வாழ்க்கையில் நல்லவர்கள்கூடப் பல சமயங்களில் தோற்றுப்போய் விடுகிறார்கள். ஆனால், நம்பிக்கை உடையவர்கள் என்றைக்கும் தோற்பதில்லை''! இயேசுவின் இந்த உயிர்ப்புக்காலம் நம் நெஞ்சில் ஆழப்பதித்துள்ள அருமையான சிந்தனை. இந்த ஒரு சிந்தனையில் தமிழ் வார இதழ்களை வாசித்துக் கொண்டிருந்த போது இரண்டு சாதனை சகோதரிகள் பற்றிய செய்தி ஒன்று நம் மனத்தை ஆழமாகத் தொட்டது. சேலம் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியில் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகள் டி.டி.பி மையம் ஒன்றை வீட்டிலேயே நடத்தி வருகின்றனர் என்பதே அச்செய்தி. வீட்டிலேயே சொந்தமாக தொழில் நடத்துவது என்பது அவ்வளவு பெரிய சாதனையா என்று அன்பு நண்பர்களே நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தச் சகோதரிகளை நேரில் பார்க்காதவரை அது பெரிய சாதனையாக இருக்காதுதான். ஆனால் நேரில் பார்த்துவிட்டால் கடவுளே, என் எதிரிக்குக்கூட இப்படியொரு நிலை வரக்கூடாது என்று செபிக்க வைக்கும்.

இந்த இரண்டு சகோதரிகளும் 'மஸ்குலர் டிஸ்ட்ராபி' என்ற அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள். இதனால் இவர்களது விரல்களைத் தவிர உடலில் வேறு எந்த உறுப்பும் அசையாது. கைகளையோ கால்களையோ ஒரு மில்லி மீட்டருக்கு அசைப்பதாக இருந்தால்கூட மரண வலி எடுக்கும். இந்த நோய் ஏன் வருகிறது என்பதையும், இதற்கான மருந்தையும் மருத்துவ உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. இந்நோய் தாக்கியவர்களின் உடல் மெலிந்து உறுப்புகள் தேய்ந்து பத்தோ பதினைந்தோ ஆண்டுகளில் அவர்கள் இறந்து போவார்களாம். இந்த போடிநாயக்கன்பட்டி சகோதரிகளில் மூத்தவரான மாதேவி, பத்தாவது படிக்கும் போது இந்நோய் பாதித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காது என்று அறிந்து ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கிய நேரத்தில் இளையவள் இயல்இசைக்கும் இதே பாதிப்பு இருக்கின்றது என்ற மற்றுமோர் இடி அங்கு விழுந்திருக்கிறது. அச்சகோதரிகளோ, தாங்கள் இன்னும் உயிரோடு இருக்கப் போகிற இந்த மூன்று நான்கு வருடங்களும் சாப்பிடவும் உடை உடுத்தவும் மட்டுமல்லாமல், இயற்கை உபாதைகளுக்குக் கூட அம்மாவை எதிர்பார்த்து அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்க வேண்டுமே? இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்று நினைத்து பல நாள் அழுதிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை தீபமாக உருவெடுத்திருக்கிறார் அவர்களது அத்தை அருள்மொழி. குறைந்த கால வாழ்க்கையேயானாலும் அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும், அடுத்தவர்களைச் சார்ந்து நாம் இருக்கக் கூடாது என்று புரிய வைத்திருக்கிறார். அருள்மொழியும் சின்ன வயதிலேயே போலியோ நோய் பாதித்து கால்களை இழந்தவர்தான். ஆயினும் புடவை வியாபாரம், எஸ்.டி.டி பூத்னு அருள்மொழி தன்னால் முடிந்த தொழில்களை செய்து கொண்டே இருக்கிறவர். இந்தச் சகோதரிகள் பிறகு என்ன செய்தார்கள்?

அத்தை கொடுத்த ஊக்கத்தில் ஆர்வமாக +2 முடித்தார்கள். விரலை மட்டும் அசைக்க முடியும் என்பதால் கணணி பயிற்சி எடுத்தார்கள். பின்னர் டி.டி.பி., டி.சி.ஏ என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தகுதியை வளர்த்துக் கொண்டார்கள். வீட்டுக்குள்ளேயே சொந்தமாக ஒரு டி.டி.பி மையம் ஆரம்பித்தார்கள். ஆர்டர்கள் கேட்கப் போன பள்ளிகள், கல்லூரிகளில், 'இப்படி உக்காந்தா எழுந்திரிக்க முடியாம இருக்குறதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. எத்தனை மணி நேரமானாலும் ஒரே இடத்துல உக்காந்து முடிக்க வேண்டிய வேலையை முடிச்சிடலாம் பார்த்தீங்களா!'? என்று சொல்லியிருக்கிறார்கள். தொடக்கத்தில் பரிதாபத்தால் சில பேர் மட்டும் ஆர்டர் கொடுத்துள்ளார்கள். ஆனால் இவர்களது சாமார்த்தியத்தைப் பார்த்து தற்போது அவர்களே திரும்பத் திரும்ப தேடி வருகிற அளவுக்கு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது முப்பது வயதை எட்டியுள்ள இச்சகோதரிகள் இன்னும் உயிரோட இருப்பதே எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது என ஊடகங்கள் சொல்கின்றன.

அன்பு வானொலி நண்பா, ''வாழ்க்கையில் நல்லவர்கள்கூடப் பல சமயங்களில் தோற்றுப்போய் விடுகிறார்கள். ஆனால், தன்னம்பிக்கை உடையவர்கள் என்றைக்கும் தோற்பதில்லை''! என்றுதான் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இந்த உயிர்ப்பு ஞாயிறு செய்தியில், மனிதன் நம்பிக்கையை மீண்டும் கண்டுணரப் போராட வேண்டுமென்று சொன்னார். இத்தாலியின் அப்ருஸ்ஸோ பகுதி நிலநடுக்கம், உலகின் உணவு பற்றாக்குறை, உலகளாவிய நிதி நெருக்கடி, வெப்பநிலை மாற்றம், பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற பேரிடர்கள் மத்தியில் நம்பிக்கைக்கான அடித்தளங்களை கண்டுபிடிப்பதற்கு மனிதன் அமைதிப் போராட்டங்களை நடத்த வேண்டுமென்றார்.

RealAudioMP3 ஏப்ரல் ஆறாம்தேதி அதிகாலை 3.32 மணிக்கு அப்ருஸ்ஸோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு அருள்மொழி அத்தைகள் பலர் நம்பிக்கையூட்டி வாழ்வு கொடுத்து வருகின்றனர். உரோமையில் ஒரு குடும்பம் மட்டும் 17 பேருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இப்படி எத்தனையோ குடும்பங்களும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட இம்மக்களில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வருகிறார்கள்.

இந்த இயற்கைப் பேரிடரில் நினைவுச் சின்னங்களும் சேதமடைந்துள்ளன. இவற்றையும் சீர்செய்ய உதவிக்கரங்கள் நீட்டப்பட்டுள்ளன. இந்தப் பாரம்பரியக் கலாச்சார நினைவுச் சின்னங்கள் என்று சொல்லும் பொழுது, ஏப்ரல் 18, வருகிற சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படவுள்ள உலக மரபு நாளும் நினைவுக்கு வருகின்றது. 1982ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இத்தினம் சமூக கலாச்சார மரபுகளை மதித்து கொண்டாடுஙகள்! என்று அழைப்புவிடுக்கிறது. ஆழ்ந்து யோசித்தால் இந்தச் சின்னங்களுமே ஒருவிதத்தில் நம்மில் நம்பிக்கையை ஊட்டவில்லையா!

''பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மனிதன் மிருகத்தைச் சாப்பிடுகிறான் அல்லது மிருகம் மனிதனை சாப்பிடுகிறது. பூமி தொடர்ந்து சுழலும். வலியது வெல்லும் என்பது இயற்கையின் விதி. அது எப்போதும் மாறுவதில்லை!'' ஆனால் இன்று பல இடங்களில் மனிதன் மனிதனையே வெறித்தனமாக, கொத்து கொத்தாகக் கொன்று போட்டுக் கொண்டிருக்கிறான். இவனை உயிரோடு விட்டுவிட்டால் இவன் என்னை வாழவிட மாட்டான் என்ற அவநம்பிக்கையா இதற்குக் காரணம்? அன்பர்களே, ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு அந்நம்பிக்கையை ஊட்டி வாழ்கிற போதுதான் வாழ்க்கையும் அமைதியாகச் செல்கிறது. அவநம்பிக்கை எழுகிற போது வீண்தொல்லைகள்தான் பெருகுகின்றன. உளவியல் மேதை நார்மன் வின்சென்ட் பீல் ஒருமுறை சொன்னார்-

ஓர் ஊரில் புகழ் பெற்ற பாதிரியார் ஒருவர் இருந்தார். ஒருசமயம் மூன்று பெண்கள் அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களில் ஒருவருக்கு பார்வையில்லை, மற்றொருவருக்கு கால்கள் ஊனம். மூன்றாமவர் கறுப்பாக அவலட்சணமாக இருந்தார். அம்மூவரும் நன்னிலை அடைய வழி கேட்டார்கள். பாதிரியார் அவர்களிடம், புனிதமான யோர்தான் நதியில் மூழ்கி எழுந்தால் உங்களது குறைகள் நீங்கிவிடும் என்றார். உடனே அவர்கள் பாதிரியாருக்கு நன்றி சொல்லிவிட்டு யோர்தான் நதிக்குச் சென்றார்கள். பார்வையற்ற பெண்ணும் கறுப்பாய் அவலட்சணமாக இருந்த பெண்ணும் மனதில் மிகுந்த நம்பிக்கையுடன் நதியில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஊனமுற்ற பெண் தயக்கத்துடன் அதிலேயே அமர்ந்திருந்தாள். அவ்வழி சென்ற வழிபோக்கர் ஒருவர் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்த அப்பெண்ணை அந்த சக்கர நாற்காலியோடு தண்ணீரில் இறக்கினார். மூவரும் தண்ணீரில் மூழ்கி கரையை அடைந்த போது பார்வையற்ற பெண்ணுக்குப் பார்வை கிடைத்திருந்தது. கறுப்பாய் அவலட்சணமாக இருந்த பெண்ணும் சிகப்பாய் அழகாய் மாறியிருந்தாள். ஆனால் ஊனமுற்ற பெண்ணுக்குக் கால்கள் சரியாகவில்லை. ஆனால் அவளது சக்கர நாற்காலியின் சக்கரங்கள் மட்டும் புதிதாக மாறியிருந்தன.

ஆம். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையும் சுயமுயற்சியும் மிகவும் முக்கியம். இந்த இரண்டும் இருப்பதாலேயே பல போடிநாயக்கன்பட்டி சகோதரிகள் இன்னும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மெக்சிகோ நாட்டில் ஓர் அழகிய சிலை உள்ளதாம். அந்தச் சிலைக்கு, “இருப்பினும்கூட” என்று அர்த்தம். அந்தச் சிலையை செதுக்கிக் கொண்டிருந்த போது அந்தச் சிற்பியின் வலது கை துண்டானது. இதனால் தனது இடது கையை மட்டும் வைத்து அதனைச் செதுக்கி முடித்தாராம். அவருக்குப் புகழ் சேர்க்கும் வணணம் இட்ட பெயர்தான் “இருப்பினும்கூட”. ஆம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. ஆனால் முயற்சி எவ்வளவு தீவிரமாகவும் சரியாகவும் அமைகின்றது என்று பார்க்க வேண்டும். உடல் குறைபாடு உள்ளவர்கள் பலர் இயல்பானவர்களைவிட அதிகம் சாதித்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த மெக்சிகோ நாட்டு கலைஞரும் ஒரு சான்று. ஆனால் உடல் ஊனமின்றி வாழும் பலர் மன ஊனத்தோடு காலம் தள்ளுவது பரிதாபமே. எனவே வானொலி அன்பனே, வில்லியம் ஆர்தர்வார்ட் சொல்வது போல, ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு பொறுப்பைக் காண்கிறார் நம்பிக்கைவாதி. ஒவ்வொரு பொறுப்பிலும் ஒரு சிக்கலைக் காண்கிறார் அவநம்பிக்கைவாதி. இந்த நம்பிக்கையாக உயிர்த்த கிறிஸ்து நம்மில் என்றும் வாழ்கிறார்.








All the contents on this site are copyrighted ©.