2009-04-13 14:15:05

இலங்கை அரசு 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறித்து ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு


ஏப்ரல் 13, 2009. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் இலங்கை அரசு 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது குறித்து தனது பாராட்டுதலைத் தெரிவித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

அதேசமயம், இந்த இரண்டு நாள் போர் நிறுத்த அறிவிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமெனவும் பான் கீ மூன், இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த போர் நிறுத்த அறிவிப்பை நிரந்தர சமாதானத்திற்கான ஓர் திறவு கோலாக தான் நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த அறிவிப்பை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தமிழீழ விடுதலைப்புலிகள் முழு ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களைப் பாதுகாக்க எல்லாத் தரப்பினரும் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேற ஒரு வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படும் என்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்து சில மணி நேரத்தில் வன்னியில் அரசுப் படையினர் தாக்குதலில் 37 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 112 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று செய்திகள் கிடைத்துள்ளன.

வன்னியில் சண்டை இடம் பெறும் பகுதியில் 1,50,000 முதல் 1,90,000 அப்பாவி பொது மக்கள் சிக்குண்டுள்ளதாக ஐ.நா.நிறுவனம் கணக்கிட்டுள்ளது. 14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பாதுகாப்பு வலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.