2009-04-09 13:53:57

ஏப்ரல் 10 புனித வெள்ளி நற்செய்தி யோவா.18,1-19


இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.4 தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, ' யாரைத் தேடுகிறீர்கள்? ' என்று கேட்டார்.5 அவர்கள் மறுமொழியாக, ' நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம் ' என்றார்கள். இயேசு, ' நான்தான் ' என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.6 ' நான்தான் ' என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.7 ' யாரைத் தேடுகிறீர்கள்? ' என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், ' நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம் ' என்றார்கள்.8 இயேசு அவர்களைப் பார்த்து, ' ″ நான்தான் ″ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள் ' என்றார்.9 ' நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை ' என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.11 இயேசு பேதுருவிடம், ' வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ? ' என்றார்.12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.14 இந்தக் கயபாதான், ' மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது ' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.16 பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார்.17 வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், ' நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே? ' என்று கேட்டார். பேதுரு, ' இல்லை ' என்றார்.18 அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.19 தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அவரிடம் கேட்டார்.








All the contents on this site are copyrighted ©.