2009-04-08 13:42:54

இத்தாலியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட திருத்தந்தை விருப்பம்


ஏப்ரல்08,2009. இத்தாலியின் தலைநகர் உரோமைக்கு வடமேற்கே ஏறத்தாழ 100 கிலோ மீட்டரிலிருக்கின்ற லாக்குய்லாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட விருப்பம் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வாறு உரைத்த அவர், லாக்குய்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பொருட்களை இழந்த அனைவருடனான தனது ஒருமைப்பாட்டுணர்வையும் இது குறித்தத் தனது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார்.

இவர்கள் இத்துன்பங்களிலிருந்து வெளிவர நற்பணி செய்து வரும் அனைவரையும் நினைவுகூர்ந்தார். பாதிக்கப்பட்ட இம்மக்களைச் சென்று தான் பார்ப்பதற்கும் விருப்பம் தெரிவித்தார் திருத்தந்தை.

இத்திங்கள் இரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் இதுவரை 230 பேர் வரை இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 3000 முதல் 10 000 வரையிலான கட்டிடங்கள் சேதமாகியுள்ளன. 20,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மீட்புப் பணிகள் இரவு பகலாய் நடந்து வருகின்றன. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த லாக்குய்லா நகரில் சுமார் 70,000 பேர் வாழ்நது வந்தனர்.








All the contents on this site are copyrighted ©.