2009-04-06 14:55:58

மனம் பண்பட்டுவிட்டால்


ஏப்ரல் 06,2009. இதயத்துள் துளை விரிந்து, வழிகிறது இயலாமையின் பரிதவிப்பு. ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவத்தின் பரிமளிப்பாய் அடக்குகிறது கடன். பூக்களற்ற பெருவெளி போல் வாசமிழக்கிறது மனது. இன்றும் நிலைத்து நிற்கிறது ஒற்றை மரமாய் நட்பு. கடன் கொடுப்பவனோடு கேள்வியின்றி பதிலுமின்றி கோப்புகளற்று அவசர உதவி புரியும் கந்து வட்டிக்காரன் - என் நண்பன் காலந் தவறினால் வங்கி என்ன வாங்கி என்ன? அவசர உதவி கேட்டு இப்படியொரு புதுக்கவிதை. இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதத்தில் “மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை” மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 61 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புதுமாத்தளன் மருத்துவமனை மீது இலங்கை ராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று தினத் தாள்களில் வாசித்தோம். கடந்த வாரத்தில் வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்த இலங்கை அருட்பணியாளர் ஒருவர், அவரது மாமா, அத்தை குடும்பத்தினர் கொத்து வெடி குண்டு தாக்குதல்களில் கூட்டாகக் கொல்லப்பட்ட சோகத்தைப் பகிர்ந்து கொண்டார். போரில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் அப்பாவி பொது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவமனைகளுக்கும் ஆபத்தான சூழல்களில் வேலை செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கும் இன்று பாதுகாப்பு இல்லாத ஒரு நிலையைத்தான் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

“மனித உயிர்களைக் காப்பாற்றுங்கள், அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்குப் பாதுகாப்பு அளியுங்கள்” என்ற சுலோகத்துடன்தான் இச்செவ்வாயன்று உலக நலவாழ்வு நிறுவனமும், சர்வதேச நலவாழ்வு தினத்தை கடைபிடிக்கிறது. இத்தினம், இந்த உலக நலவாழ்வு நிறுவனம் துவங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் நிகழ்வாகும். உலகெங்கும் நலவாழ்வு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக நலவாழ்வு நிறுவனம் செய்து வரும் பணிகளை நினைவுகூரவும் இது கடைபிடிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டு உலக நலவாழ்வு நிறுவனத்தின் முதல் கூட்டம் நடத்தப்பட்டபோது ஏப்ரல் ஏழாம் தேதியை உலக நலவாழ்வு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1950ம் ஆண்டிலிருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நலவாழ்வு மையங்களும் அவற்றில் வேலை செய்வோரும் பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய மூலைக்கற்கள். இந்தக் கற்களைத்தான் அப்பாவி மக்கள் பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள். இந்த உலக தினம் பற்றிப் பேசிய உலக நலவாழ்வு நிறுவனப் பொது இயக்குனர் மார்கிரேட் சான், இன்று உலக அளவில் பேரிடர்களும் அவசரகால உதவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகினறன, பூகம்பங்கள், பெருவெள்ளங்கள், நகர்ப்புறங்களில் பாதுகாப்பற்ற இடங்களில் குடியேறுதல், வெப்பநிலை மாற்றங்கள் எனப் பல பேரிடர்களால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றார்.

2008ஆம் ஆண்டில் மட்டும் 321 இயற்கைப் பேரிடர்களில் 2,35,816 பேர் இறந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் இப்பேரிடர்களில் கொல்லப்பட்டவர்களைவிட நான்கு மடங்கு அதிகம். இதற்கு காரணங்களாக இரண்டு நிகழ்வுகளை முன்வைக்கின்றது ஐ.நா.வின் சர்வதேச பேரிடர் குறைப்பு நிறுவனம். ஒன்று. மியான்மாரில் ஏற்பட்ட நர்கீஸ் கடும் புயல். இதில் 1,38,366 பேர் இறந்தனர் அல்லது காணாமற்போயுள்ளனர். இரண்டாவது, சீனாவின் ஜிகுவான் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம். இதில் 87,476 பேர் கொல்லப்பட்டனர். உலகில் பேரிடர் தொடர்பான அதிக இறப்புகள் இடம்பெற்ற பத்து நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவை.

இந்தப் பேரிடர்கள் பொருளாதாரத்திலும் கடு்ம் சரிவை ஏற்படுத்துகின்றன. 2008ம் ஆண்டில் 18,100 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. இது, 2000 மாம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை ஆண்டுக்குச் சராசரியாக ஏற்பட்ட இழப்பைவிட இரண்டு மடங்கு அதிகம். சீனாவின் ஜிகுவானில் இடம் பெற்ற பூகம்பத்தில் 8,500 கோடி டாலர் இழப்பும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏறத்தாழ 3,000 கோடி டாலர் இழப்பும் ஏற்பட்டுள்ளன. வளரும் நாடுகளில் இயற்கைப் பேரிடர் ஆபத்தானப் பகுதிகளில் 11 விழுக்காட்டு மக்களே வாழ்ந்தாலும், அவற்றால் ஏற்படும் இறப்புகள் 53 விழுக்காட்டுக்கு அதிகமாக இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இந்த ஒரு சூழலில் மனித உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் சுகாதாரத்தைப் பேணவும் என்ன செய்யலாம்? அன்புள்ளங்களின் ஆலோசனைகள் என்ன? உலக நலவாழ்வு நிறுவனத்தின் கிறிஸ்டோபர் பிளாக் சொல்கிறார் : பாகிஸ்தானில் 2005ம் ஆண்டில் ஏற்பட்ட நிலஅதிர்ச்சியில் படுகாயமடைந்த ஒருவரை அவருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுள்ள இஸ்லாமாபாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அங்கு இடமில்லை. ஏனெனில் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள், அவசர சிகிச்சை பிரிவிலுள்ள நோயாளிகள் என அவர்களுக்கே 24 மணி நேரக் கவனிப்பு தேவைப்படும் போது பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்க்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே நெருக்கடி நேரங்களில் அவசரகால சுகாதார மையங்கள் தேவை என்று.

இத்தகைய ஒரு நிலையில் மருத்துவமனைகளும் சுகாதார மையங்களும் அழிக்கப்பட்டால் அல்லது சேதப்படுத்தப்பட்டால் அவை பாரிய பொருளாதாரச் சுமையை அரசுகளின் முதுகில் சுமத்தும். சில நாடுகளில் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 80 விழுக்காடு வரை மருத்துவமனைகளுக்கும் சுகாதார மையங்களுக்கும் செலவிடப்படுகின்றன என்றும் கிறிஸ்டோபர் பிளாக் சொல்கிறார். ஆதலால் இந்த நலவாழ்வு விடயத்தில் சாதாரணராகிய நம் ஒவ்வொருவராலும் எதாவது செய்ய முடியுமா? முடியும். எப்படி? மருத்துவமனைகள் சேதப்படுத்தப்படாமல் பாதுகாப்பாக இயங்க ஆதரவு வழங்கலாம். மருத்துவமனைகளுக்கும் பிற சுகாதார மையங்களுக்கும் தண்ணீர் விநியோகம் பாதுகாப்பாக இடம்பெற உதவலாம். இன்னும், மருத்துவமனைகள் பேரிடர்களிலிருந்து காப்பாற்றப்படுவதற்கு அரசுகளும் ஆவன செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் தமிழக்ததின் சின்னாளபட்டியில் 2006ம் ஆண்டில் ஒரு மருத்துவமனை உருவான விதம் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

பெங்களூரில் வாழ்ந்து வந்த ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர். இவர்களின் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. பிரபல ஜவுளித் தொழிலதிபரான முருகேசன், நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தார். அச்சமயம் அவருக்குத் திடீரென நெஞ்சுவலி வர, அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அதுவே அவரது இறப்புக்கும் எமனாகிவிட்டது. பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போனது. ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனடியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள். இவர்கள் மதுரை மருத்துவமனைக்குச் சென்ற போது போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதாவின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது. தனது தந்தை அளித்துச் சென்ற கல்வி என்ற அழியாச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராத ஹேமா, இந்த மருத்துவமனை தொடர்பாக அங்கு பலமுறைகள் சென்று அந்தக் கனவை ஏறத்தாழ 12 லட்சம் ரூபாய் செலவில் நனவாக்கியிருக்கிறார். நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும், தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.

அன்பர்களே, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க, ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். வாழ்த்தப்பட வேண்டிய ஒரு செயல். இத்தகைய புனிதப் பணிகள் நாட்டில் பல இடங்களில் சத்தமில்லாமல் நடைபெற்று வருகின்றன. ஏன், உங்களில்கூட சிலர் இதேபோன்ற பிறரன்புப் பணிகளைச் செய்து வருகிறீர்கள். எதெதெற்கோ நாம் செலவிடுகிறோம். ஆனால் இந்தப் புனிதப் பணிகளுக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுக்கலாமே. ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். எனவே தேரிழுக்கத் தயாராகுவோமா! அதன்மூலம் பல உயிர்களைக் காத்திடுவோமா!

சிறுதுளிதானே பெருவெள்ளமாகும். ஒன்று ஒன்றாகச் சேர்த்தால்தானே நூறு ஆகும். பிறரன்புச் சேவைக்கு மில்லியனராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. காணிக்கை பெட்டியில் 2 காசுகள் போட்ட ஏழை விதவையின் மனப்பாங்கே இயேசுவைத் தொட்டது. எனவே செய்யும் உதவியின் அளவு அல்ல, மாறாக அதனைச் செய்யும் நல்ல உள்ளமே போற்றப்படும். கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?








All the contents on this site are copyrighted ©.