2009-04-05 18:04:47

நல்ல சமாரியர் உவமை தூய லூக்கா 10, 29-37 .


உவமை என்பது விவிலியத்தில் எடுத்துக் காட்டுக் கதை என நாம் முன்னரே அறிந்திருக்கிறோம் . நாம் இன்று பார்க்க உள்ள கதையை நமக்குத் தூய லூக்கா தருகிறார் . மிக எளிதானதும் , உவமைகளிலேயே மிக அருமையான கதையுமாக இது இருக்கிறது . அன்புக்கு அளவே கிடையாது என்றும் , அன்பு சாதி மத இன பேதமாகிய நிபந்தனைகள் இல்லாதது என்றும் கதை கூறுகிறது . யாருக்கு நான் உதவி செய்யவேண்டுமோ அவரே என் அயலான் ஆகிறார் . எடுத்துக்காட்டுக் கதைகளை நாம் தூய லூக்காவின் நற்செய்தியில் மட்டுமே அதிகம் காண்கிறோம் . மதியற்ற செல்வந்தன் , செல்வந்தனும் ஏழை லாசரும் , பரிசேயரும் வரி வசூலிப்பவரும் போன்ற வேறு சில எடுத்துக் காட்டுக் கதைகளையும் நாம் தூய லூக்கா நற்செய்தியில் காண்கிறோம் .

தூய லூக்கா சமாரியர்களைப் பற்றி தம் நற்செய்தியில் கூறுகிறார் . யூதர்களும் சமாரியர்களும் எதிரும் புதிருமானவர்கள் . கதையில் என்னுடைய அயலான் யார் என்ற கேள்விக்கு, உன் உதவியை தேவையுறும் எவரும் உன் அயலாரே என்ற பதிலுக்குப் பதிலாக சமாரித்தனின் இரக்கத்தைப் பற்றிக் கதை கூறுகிறது . நான் எப்படி அயலானாக செயல்பட முடியும் யாருக்கு நான் அயலான் என்ற கேள்விகளுக்குப் பதில் தருவது போல கதை தரும் பாடம் இருக்கிறது .

எருசலேத்திலிருந்து எரிக்கோவுக்கு 25 கிலோமீட்டர் தூரமிருக்கும் . 3400 அடி மலைப்பாதையில் செல்லவேண்டும் கீழே செல்ல வேண்டும் . பாதை கரடு முரடானது . அந்த ஒரு பாதைதான் எருசலேம் எரிக்கோவுக்குச் செல்லும் பாதை .

4 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த தூய எரோணிமுஸ் அவ்வழியில் கொள்ளையர்கள் பயம் இருந்ததாதக் கூறியுள்ளார் . சமாரியர் என்பவர் யூத குலச் சமயப் பற்று இல்லாதவர் . எண்ணையும் திராட்சை இரசமும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன .



குருவானவர் எருசலேத்துக்குச் செபிக்கச் சென்றிருக்கலாம் . வழியில் அடிபட்டுக்கிடந்தவரை இறந்துவிட்டதாக எண்ணியிருக்கலாம் . இறந்தவரைத் தொட்டால் அது குருவுக்குத் தீட்டாகக் கருதப்பட்டது . அவர் கோயிலுக்குள் செல்லத் தகுதியை இழந்துவிடுவார் . அதனால் குருவானவர் ஒதுங்கிப் போகிறார் . அவ்வழியே லேவியர் ஒருவரும் வந்திருக்கிறார் . அவரும் ஆலயத்தில் பணிசெய்பவர் , ஆனால் குருவானவர் அல்லர் . ஒருவேளை அவரும் குருவானவரைப் போலவே தீட்டு என ஓரமாகச் சென்றிருக்கலாம் . அல்லது படுத்துக் கிடந்தவர் பாசாங்கு செய்துகொண்டிருப்பதாகக் கூட எண்ணியிருக்கலாம் . திருடர்கள் அவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்வார்கள் . உதவி செய்யப் போனால் தாக்கப்படலாம் . எனவே லேவியரும் விலகிச் செல்கிறார் .

இறுதியாக சமாரியர் வருகிறார் . அவரைக் கதையின் கதா நாயகராக்கியது யூதர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும் . சமாரியர்கள் யூத மதத்தைப் புறக்கணித்தவர்களாக யூதர்கள் நினைத்தார்கள் . சமாரியர்கள் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை . அவர்கள காணிக்கைகளும் செலுத்தமுடியாது . அவர்கள் நீதி மன்றங்களில் வழக்குத் தொடர முடியாது , அவர்கள் சாட்சியம் செல்லாது .

ஆனால் இயேசு ஒரு சமாரியரை கதாநாயகராக்குவது ஏன் என்று தெரிந்திருந்தார் . கதையைக் கேட்டுக் கொண்டிருந்த யூதர்களுக்கு அன்பு நிபந்தனை இல்லாதது எனக் காட்ட விரும்பினார் . யாருக்குத் தேவையுள்ளதோ அவர்களுக்கு அன்பு ஓடிச் சென்று உதவிசெய்யும் . ஓரமாக ஒதுங்கிப்போய்விடாது . நின்று உதவி செய்யும் . உதவி யாருக்குத் தேவைப்பட்டாலும் அன்பு செயலில் இறங்கிவிடும் என்பதை இயேசு கற்பிக்க விரும்பினார் .

பொதுவாக துன்புறுவோருக்கு நம்முடைய ஆறுதலான வார்த்தைகளே மருந்தாக அமையும் . நம்முடைய பணத்தை அல்ல ,நம்முடைய ஆறுதலான வார்த்தைகளையே பெரும்பாலும துன்பப்படுபவர்கள் எதிர்பார்ப்பார்கள் .

இன்றைய கதை பிறரோடு நமக்குள்ள உறவுகளைப் பற்றி எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது . ஒரு சிறு கேள்வியைக் கேட்கச் சொல்கிறது . பிறருக்கு உதவி தேவையுறும்போது நாம் எப்படி நடந்து கொள்கிறோம் . நாம் உதவி செய்கிறோமா . அல்லது அவர்கள் இல்லாதது போலவே பாசாங்கு செய்து கொண்டு ஓடி விடுகின்றோமா . நம்மோடு கூட இருக்கும் குடும்பத்தவருக்கும் இவ்வாறே செய்கிறோமா . வாழ்க்கையில் வருத்தத்துக்கு உரியது என்னவென்றால் நாம் நம் கூட இருப்பவர்களை மறந்துவிட்டு தெரியாதவர்களிடத்தில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்போம் .

இன்றைய கதை நம்மை சவால்களை ஏற்று நம் சிறு உலகை விட்டு வெளியே சென்று வீரர்கலளாகச் செயல்பட அழைக்கிறது . நம்மை மனிதர்களாக நடக்கச் சொல்லி பிறரை மதிக்குமாறு கூறுகிறது . உங்களுக்கு ஏதும் உதவி தேவையா என உதவி செய்ய முன்வருமாறு அழைக்கிறது .



உதவி செய்ய தயாராக இருப்போமா . நல்ல சமாரியர்கள் என்று பெயர் எடுப்போமா .








All the contents on this site are copyrighted ©.