2009-04-05 17:46:05

குருத்து ஞாயிறு விழா - 05 ஏப்ரல் .


நற்செய்தி மாற்கு 11 , 1 -10 . மற்றும் திருப்பலி நற்செய்தி மாற்கு 14 , 1- 15 ...47 .



இன்றைய வழிபாடு குருத்து ஞாயிறு விழா என அழைக்கப்படுகிறது . காரணம் கிறிஸ்து அரசருக்கு உரிய பாணியில் எருசலேமுக்கு பவனியாக மக்கள் அழைத்துச் செல்கின்றனர் .



இயேசு எருசலேம் சென்று உலக மீட்புக்காக தம்மையே பலியாக அர்ப்பணிப்பதையே வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .ஏனெனில் அங்குத்தான் அவரது இறுதிப்பயணம் நிறைவேறப் போகிறது . அங்குத்தான் மனுமகனைப் பற்றி இறைவாக்கினர் முன் குறித்து இறைவாக்கினர் எழுதியதெல்லாம் நிறைவேறும் . அங்குதான் கடவுளின் அரசும் வெளிப்படும் . எனவே இயேசு வைத்தகண் வாங்காது எருசலேமுக்குச் செல்ல முனைந்து நிற்கிறார் . எருசலேமே இறைவாக்கினரைக் கொன்று உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியவும் எருசலேமே என்று இயேசு வருத்தப்பட்டு முன்னர் கூறியிருந்தாலும் தாம் எருசலேம் செல்வதில் குறிக்கோளாயிருக்கிறார் . கிறிஸ்தவ வாழ்வு ஒரு பயணம் தானே . அதுவும் விண்ணரசு எருசலேம் நோக்கிய பயணம் தானே . எனினும் வழியில் இடையூறுகள் கண்டு இன்னல்கள் கண்டு தடம்மாறி விடுகிறோமே . கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து நோக்கி ஓடுகிறேன் என்ற பவுலடியாருடைய மாதிரிகையை நாமும் பின்பற்றுவோமா .



அடுத்து நாம் மக்கள் இயேசுவுக்குக் கொடுக்கும் புகழ்ச்சியைப் பார்க்கிறோம் . அங்கு ஒருவருக்குச் சொந்தமான கழுதைக் குட்டி ஆண்டவருக்குத் தேவை என்றதும் உரிமையாளர் தம் கழுதையை இயேசுவின் பணிக்கு அனுப்புகின்றார் . கழுதைலமேல் பவனி வரும் இயேசுவிலே ஆண்டவரை , தம் அரசரைக் கண்டு மக்கள் வாழ்த்தி ஏத்துகின்றனர் . ஆண்டவர் பணிக்கு நம்மை , நம் உடைமைகளை முன்வந்து கொடுக்கின்றோமா . ஆண்டவரின் அற்புதச் செயல்கள் அன்றாடம் நம் வாழ்விலே நடந்தேறுவது கண்டு அவரை வாயாறப்புகழ்கிறோமா . ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொடடோமோ எனத் தமிழ்ப் பாடல் வரிகள் கூறுகின்றன .

இயேசு எருசலேமுக்குள் சென்றபோது மக்கள் குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய் ஓசான்னா ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக .இஸ்ராயேலின் அரசர் போற்றப்பெறுக என்று சொல்லி ஆர்ப்பரித்தனர் . திருத்தூதர் யோவான் இந்நிகழ்ச்சியை வித்தியாசமாக விவரிக்கிறார் . அந்நேரத்தில் இயேசுவின் சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை . அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது .



நாம் கழுதையை கேலி செய்தாலும் விவிலியக் காலத்தில் கழுதையை மதிப்போடு நடத்தி வந்தார்கள் . கழுதை அமைதியின் விலங்காகக் கருதப்பட்டது . குதிரையோ போர்க்களத்திற்கு வீரர்களைக் கொண்டு செல்லும் விலங்காகக் கருத்தப்பட்டது . இறைவாக்கினர் சக்கரியா மீட்பர் எருசலேமுக்குக் கழுதைமேல் ஏறி வருவார் எனக் கூறுகிறார் . தற்பொழுது இயேசு சக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிறார் .

இதனால் இயேசு தாம் மீட்பர் என்பதைக் காட்டுகிறார் . அடுத்து அவருடைய மீட்புப்பணி என்ன என்பதைக் காட்டுகிறார் . இயேசு வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு மீட்பரின் பணி என்ன என்ற சரியான கருத்துத் தெளிவில்லாது இருந்தது . அவர்கள் மீட்பரை ஒரு பெரிய அரசராக எண்ணினர் . உரோமைய சாம்ராஜ்யத்தை வீழ்த்த வந்தவர் என எதிர்பார்த்தனர் . எருசலேத்தில் இயேசு அமைதியின் சின்னமாகிய கழுதையின்மேல் ஏறிச் செல்வது மீட்பர் போரை விரும்புவரல்லர் என்பதைக் காட்டுகிறது .

இயேசு அரியணையில் அமர்ந்து கொண்டு வெல்லப்பட்ட நாடுகளின் மக்களால் சேவை செய்யப்படுவதை விரும்பியவரல்லர் . அவர் முழந்தாளில் அமர்ந்து தம் சீடர்களின் பாதங்களைக் கழுவ வந்திருக்கிறார் . இயேசு போர்முரசு கொட்ட வரவில்லை . வறுமை , தாகம் , வெறுப்பு , எல்லா வகையான அநீதி ஆகியவற்றுக்கு எதிராக போர்தொடுக்க வந்துள்ளார் . இயேசு மக்களுக்குத் தீர்ப்பிட வரவில்லை . மக்களுக்கு மன்னிப்பு வழங்கவே வந்துள்ளார் . இயேசு மக்களின் கனவுகளை அழிக்கவல்ல அவற்றை அற்புதமான முறையில் நிறைவேற்றவே வந்தார் . இயேசு மக்களைக் கட்டாயப்படுத்தித் தம்மைப் பின்பற்றுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை . அவர்கள் மக்களை பாசத்தோடு தம்மிடம் வருமாறு அழைப்பு விடுக்கிறார் .



இந்த இயேசுவையே நாம் இன்று வரவேற்று வாழ்த்துக் கூறுகிறோம் . இவர் இந்தப் புனித வாரத்தில் நம் உள்ளங்களில் சிறப்பான முறையில் எழுந்தருளிவர விரும்புகிறார் . இவரே எப்போதும் நம்மிடையே இருந்து வழிகாட்டுபவர் . எனவே நாமும் மகிழ்ச்சியோடு ஓசான்னா பாட்டுப்பாடி ஆண்டவர் பெயரால் வருபவர் வாழ்க , அமைதியின் மன்னவா வருக என வாழ்த்துவோம் .



இதே நாளில் திடீரென நிலைமை மாறுகிறது . யூதர்களின் அரசராக வந்த இயேசு குற்றவாளியாகக் கருதப்படுகிறார் . வாழ்த்துப்பாக்கள் ஓய்ந்து சாட்டையடியும் , காரி உமிழ்தலும் அவருக்கு வழங்கப்படுகின்றன . அவரைக் கொல்லும் கொல்லும் என்ற சத்தம் கேட்கிறது . அவரது கழுதை மறைந்து விடுகிறது . இயேசுவே சிலுவையைச் சுமந்து சிலுவைச் சாவுக்குச் செல்கிறார் . கூட்டம் கலைந்து செல்கிறது .

இது வாழ்வின் நிலையாமையை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது . நிலைமாறும் உலகம் . இயேசு ஒரே நாள்தான் அரசராக பவனி வந்தார் . கல்வாரி்ச் சாவுக்கு நாம் இப்பொழுது அவரைப் பின் தொடர்கிறோம் . இயேசுவின் நண்பர்களாக வந்த கூட்டம் சிலுவையில் அறையும் எனக்கூறுவது இயேசுவுக்கு வேதனையைத் தந்தது .

நேற்றும் இன்றும் எந்நாளும் மாறாத கடவுளாகிய இயேசு மனிதர்களால் இரண்டு நாளில் வெவ்வேறு விதமாக நடத்தப்படுகிறார் . இப்படிப்பட்ட நாடகப் பாணியினாலான நிலைமை மிக முக்கியமான புனித வாரத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது . இயேசுவின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் இப்புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளில் பங்கு கொண்டு அவரைப் பின் தொடர்வோம் . பாடுகள் என்னும் சொல் இயேசு பட்ட மரண வேதனையைப் பிரதிபலித்துக் காட்டுகிறது . இயேசுவின் பாடுகளுக்கு முன்னால் நம்முடைய துயரங்கள் தூசியாக மறைந்து விடுகின்றன .








All the contents on this site are copyrighted ©.