2009-04-04 14:39:59

கத்தோலிக்கருக்கும் புத்தமதத்தினருக்கும் இடையேயான உறவு மேலும் உறுதிப்படும், திருப்பீடம்


ஏப்ரல்04,2009. உலகாயுதப் போக்கும் கட்டுக்கடங்காத நுகர்வுத் தன்மையும் நிறைந்த இன்னறைய உலகில், பொருட்களில் பற்றற்று இருப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை புத்தமதத்தினரின் சாட்சியங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் தூண்டுதல்களைப் பெற முடியும் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியது.

கௌதம புத்தரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூறும் புத்தமதத்தினரின் வேசாக் விழாவை முன்னிட்டு நேற்று செய்தி வெளியிட்ட திருப்பீட பல்சமய உரையாடல் அவை, கிறிஸ்தவரும் புத்தமதத்தினரும் ஏழ்மை மீது கொண்டுள்ள மதிப்பீட்டை குறிப்பிட்டுள்ளது.

இவ்விழா, உலகெங்கும் வாழும் புத்தமதத்தினருக்கு மகிழ்ச்சியையும் அகஅமைதியையும் மீண்டும் ஒருமுறை கொண்டு வரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ள அதேவேளை, கத்தோலிக்கருக்கும் புத்தமதத்தினருக்கும் இடையேயான உறவு மேலும் உறுதிப்பட இது நல்ல வாய்ப்பாக இருப்பதாக அச்செய்தி கூறுகிறது.

இரண்டு வகையான ஏழ்மை உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தி, கடவுளுக்கும் பிறருக்கும் செவிசாய்த்து அவர்களுக்கு மிகுந்த திறந்த மனத்துடன் இருக்கும் பொருட்டுத் தன்னையே வெறுமையாக்கும் ஏழ்மையைத் தேர்ந்தெடுப்பது ஒருவகையானது என்று சுட்டிக் காட்டியுள்ளது.

மற்றொரு வகையானது பொருள் இல்லாமல் இருக்கும் ஏழ்மை, இது மனிதரையும் குடும்பங்களையும் மாண்புடன் வாழத் தடை செய்கின்றது என்றுரைக்கும் அச்செய்தி, கடவுள் இத்தகைய ஏழ்மையை விரும்பவில்லை, இது நீதியையும் சமத்துவத்தையும் பாதித்து அமைதியான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று கூறுகிறது.

எனவே, பொருட்களின் மீது பற்றற்று திருப்தியோடு வாழும் புத்தமத நண்பர்களின் தூண்டுதல்களுக்கு கத்தோலிக்க சமுதாயம் நன்றி தெரிவிக்க விரும்புகின்றது என்றும் திருப்பீட செய்தி கூறுகிறது.

இச்செய்தியில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான், அவ்வவைச் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இவ்வாண்டு இந்த வேசாக் விழாவானது, ஏப்ரல் 8ம் தேதி ஜப்பான் மற்றும் தாய்வானிலும், மே 2ம் தேதி கொரியாவிலும், மே 8ம் தேதி புத்தமத மரபுகளைக் கொண்ட பிற நாடுகளிலும் சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.