2009-04-01 14:32:23

ஜி-20 நாடுகள் ஏழைகளின் நலனை ஒதுக்கக் கூடாது, திருத்தந்தை


ஏப்ரல்01,2009. குடும்பங்கள் மற்றும் ஏழைகளின் நலனை ஒதுக்கிவிடாமல் உலகளாவிய நிதிச் சந்தையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உலகின் பணக்கார நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இலண்டனில் இவ்வியாழனன்று தொடங்கும் இரண்டு நாள் உச்சி மாநாட்டை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரவுனுக்குக் கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை, தற்போதைய உலகளாவிய பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும், அதேசமயம் தன்னலம் சார்ந்த அல்லது தற்காப்புத் தீர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சரியான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம், குடும்பங்களுக்குப் பாதுகாப்பும் தொழிலாளரின் வேலைக்கு உத்தரவாதமும் வழங்கப்படவும், நிதி உலகில் நன்னெறிக் கூறுகள் நிலைநிறுத்தப்படவும் வழிவகைகள் ஆராயப்படுமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு, பொருளாதார அமைப்புமுறைகளில் ஒழுக்கக்கூறுகள் குறைவுபடுவதே முக்கிய காரணம் எனில், நன்னெறிகள் பொருளாதாரத்திற்கு வெளியே இல்லை, அவை அதற்குள்ளே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதாரத்தில் ஒழுக்கக்கூறுகள் இல்லையெனில் அதனால் திறம்பட செயல்பட முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனது அண்மை காமரூன் மற்றும் அங்கோலா நாடுகளின் திருப்பயணம் பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த உச்சி மாநாட்டில் ஆப்ரிக்கா ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது மற்றும் வளரும் நாடுகளுக்கான நிதியுதவி தடைசெய்யப்பட்டு விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இந்தியா, இந்தோனேசியா, பிரசில், அர்ஜென்டினா, கானடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாட்டு, இன்னும் 20வது அங்கத்தினராக ஐரோப்பிய சமுதாய அவையின் மத்திய வங்கி ஆகியவை ஜி20ல் உள்ளடங்கும்.








All the contents on this site are copyrighted ©.