2009-04-01 14:36:27

சீனாவில் 74 வயதாகும் ஆயர் ஜியா கைது


ஏப்ரல்01,2009. சீனத் தலத்திருச்சபையின் வாழ்வு குறித்த 3 நாள் கூட்டம் வத்திக்கானில் நடைபெற்று வரும் வேளை, அந்நாட்டு ஜென்ங்டிங் ஆயர் ஜியா ஜிகுவோவைக் கைது செய்துள்ளது சீன அரசு.

74 வயதாகும் ஆயர் ஜியா இத்திங்கள் பிற்பகலில் 5 காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தெரியாத இடத்திற்குக் கொண்டு போகப்பட்டுள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.

சீனாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வு குறித்த மிக முக்கிய விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2007ம் ஆண்டில் உருவாக்கிய அவை இத்திங்களன்று மூன்று நாட்கள் கூட்டத்தைத் தொடங்கி விவாதங்களை நடத்தி வருகிறது. மேலும், திருத்தந்தை, 2007ம் ஆண்டில் சீனக் கத்தோலிக்கருக்கென வெளியிட்ட சிறப்பு செய்தி, அந்நாட்டிலும் பிற பகுதிகளிலும் எங்ஙனம் வரவேற்பைப் பெற்றது என்பது குறித்து கடந்த ஆண்டு மார்ச் 10 முதல் 12 வரை இந்த அவை தனது முதல் கூட்டத்தை நடத்தியது. இப்போதைய கூட்டத்திலும் அது பற்றி ஆராயப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வேளையில் ஆயர் ஜியா கைது செய்யப்பட்டிருப்பது, சீனாவிலுள்ள திருச்சபையுடனான ஒப்புரவை மேம்படுத்தும் வழிகள் பற்றி ஆராய்ந்து வரும் இவ்வவை மற்றும் திருப்பீடத்தின் முயற்சிகளை ஊக்கமிழக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அச்செய்தி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதற்கு ஆயர் ஜியா மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.