2009-04-01 14:56:24

ஆப்ரிக்க மக்கள் தற்போதைய சவால்களைத் தைரியத்துடன் எதிர்கொள்கிறார்கள், திருத்தந்தை


ஏப்ரல் 01,2009. இப்புதன் காலை, வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்குத் தனது மறைபோதகத்தைத் தொடங்கிய திருத்தந்தை, இந்த மார்ச் 17 முதல் 23 வரை அவர் நடத்திய ஆப்ரிக்காவுக்கான தனது முதல் திருப்பயணம் பற்றிய சிந்தனைகளைப் பல மொழிகளில் பகிர்ந்து கொண்டார்.

RealAudioMP3 அன்புச் சகோதர சகோதரிகளே, எனது ஆப்ரிக்காவுக்கான முதல் அப்போஸ்தலிக்கத் திருப்பயணத்தில் பல ஆசீர்களுடன் என்னுடன் பயணித்த எல்லாம்வல்ல இறைவனுக்கு இன்று நன்றி சொல்ல விழைகிறேன். இப்பயணத்தில் எனக்கு இனிய மற்றும் ஆர்வமான வரவேற்பை அளித்த நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஆயர்களுக்கு நான் மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். எனது பயணம் காமரூன் நாட்டில் தொடங்கியது. அங்கு பல்வேறு கத்தோலிக்கக் குழுக்களையும் முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து மகிழ்ந்தேன். அந்நாட்டின் ஆழமான சமய உணர்வும், அந்நாட்டு குடிமக்கள் அமைதியில் வாழவும் ஒன்றிணைந்து பணிசெய்யவும் கொண்டுள்ள ஆர்வமும் என்னை மிகவும் கவர்ந்தன. இந்நாட்டில் பயணத்தை நிறைவு செய்து அங்கோலா சென்றேன். அந்நாடு நீண்ட கால உள்நாட்டுச் சண்டைக்குப் பின்னர் ஒப்புரவுக்காகவும் நாட்டை மீண்டும் கட்டி எழுப்பவும் தொடர்ந்து கடும் முயற்சி செய்து வருகிறது. இப்பணியில் தங்களது பங்கை அளிப்பதற்கு, அனைத்து அங்கோலியர்களையும், சிறப்பாக இளையோரின் மனசாட்சிகளை உருவாக்குவதன் வழியாக இதில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தினேன். அந்நாட்டில் நான் பயணம் மேற்கொண்ட போது, குருத்துவ மாணவர்கள், வேதியர்கள், மகளிர் அமைப்புகள், இளையோர் மற்றும் பலரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை நன்றியோடு நினைக்கிறேன். Instrumentum Laboris என்ற ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கான விவாதத் தொகுப்பு ஏட்டை வெளியிட்டது, இந்த எனது திருப்பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான தருணமாக இருந்தது. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான பணியில் ஆப்ரிக்காவில் திருச்சபை என்ற தலைப்பில் இந்த முக்கியமான கூட்டத்தை நடத்துவதற்குத் திருச்சபை தயாரித்து வரும் இவ்வேளையில், இக்கூட்டம், இந்தப் பெரிய கண்டத்தின் அன்பு மக்கள் மத்தியில் அபரிவிதமான பலன்களைக் கொம்டுவருமாறு என்னோடு சேர்ந்து நீங்கள் அனைவரும் செபிக்குமாறு கேட்கிறேன்.

இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்து வருகிற ஜூன் 19ம் தேதி சர்வதேச குருக்கள் ஆண்டு தொடங்கவிருப்பதைக் குறிப்பிட்டு அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.