2009-03-31 14:56:14

இறையழைத்தல் அதிகரிக்கச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


மார்ச்31,2009. ஒருவர் துறவற அழைப்பை ஏற்பதென்பது, அதற்குத் தான் தகுதியுடையவர் என்ற உணர்வோ அல்லது இறைவனின் தனிச்சலுகை பெற்ற திருப்பணியாளர்களாகவும் சாட்சிகளாகவும் இருப்பதற்கு போதுமான உறுதி கொண்டவர் என்பதோ அல்ல, மாறாக இது தன்னை அழைக்கும் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையினால் ஏற்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வருகிற மே மாதம் 3ம்தேதி சிறப்பிக்கப்படவுள்ள 46வது இறையழைத்தல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில், ஒருவர் தன்னை அழைக்கும் இறைவன் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறார் என்றால் அந்த நம்பிக்கையானது எந்தவித தயக்கமுமின்றி அவிவிறைவனின் அழைப்பை ஏற்க வைக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், இறைச்சேவைக்காக அழைக்கப்படுபவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்றால், அவர் மிகுந்த கவனத்துடனும் விவேகத்துடனும் தேர்ந்து தெளிய வேண்டும், தன்னை இறைவனின் திட்டத்தோடு தாராள மனத்தோடும் மனமுவந்தும் இணைக்க வேண்டும், குருத்துவ மற்றும் துறவற வாழ்வின் உண்மை நிலை பற்றிக் கருத்தூன்றி படிக்க வேண்டும், அதன் மூலம் ஒரு தெளிவான சிந்தையுடனும் பொறுப்புடனும் இவ்வழைப்புக்குப் பதில் சொல்ல அவரால் இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

“இறைவன் எடுத்து வைக்கும் முதல் அடியில் நம்பிக்கை வைப்பதும் மனிதப் பதிலும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இச்செய்தி, தமது மகன் இயேசுவை மிக மிக நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு இறைவன் சிலரை அழைத்து அவர்களை முழுவதும் திருச்சபையின் பணியில் அமர்த்துகிறார் என்றும் கூறுகிறது.

இந்தக் குருத்துவ அழைத்தலைப் பெறத் தன்னைத் தகுதியுடையவர் என்று யார் கருத முடியும்? தனது சொந்த மனித சக்தியை மட்டும் சார்ந்து யாரால் இந்த அர்ப்பணிக்கப்படட் துறவற வாழ்வைத் தழுவ முடியும்? இந்த இறையழைத்தலில் கடவுள் முதலடி எடுத்து வைத்து தமது மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பதை உணரும் பொழுதெல்லாம் தனது தலைவனுக்குப் பயந்து தனது திறமையை சொந்த ஆதாயத்துக்காக நிலத்தில் புதைத்து வைத்த பயனற்ற ஊழியன் போன்று இருக்க மாட்டார்கள். (மத்.25:14-30). அதேசமயம் தூய பேதுருவைப் போல,(லூக்.5:5) ஆம்டவரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து தனது வலையைக் கடலில் வீசுவதற்கான நம் ஆண்டவரின் அழைப்பை ஏற்பதற்குத் தயாராக இருப்பதில் வெளிப்படுத்துவார். பேதுரு இரவு முழுவதும் உழைத்தும் ஒன்றும் பிடிக்காமல் இருந்தாலும் ஆண்டவர் வார்த்தையை நம்பி வலையை வீசினார்.

இன்று கவலையை ஏற்படுத்தக்கூடிய அளவில் உலகின் சில பகுதிகளில் குருக்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது, அதனால் திருச்சபையும் கஷ்டங்களையும் இன்னல்களையும் எதிர்நோக்குகின்றது, எனினும் இறைவனின் பிள்ளைகள் தங்களின் அசைக்க முடியாத விசுவாசத்தில் சக்தியைக் கண்டு கொள்ளலாம். எப்படியெனில் இறைவன் தமது திருச்சபையை இறையாட்சியின் நிறைவை நோக்கி உறுதியுடன் வழிநடத்துகிறார், ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் ஒவ்வொரு காலத்திலிருந்து சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கிறார், அத்துடன் அவரது இரக்கமுள்ள அன்பின் மறைபொருளான திட்டங்களுக்கு ஒத்த வகையில் அவரைப் பின்செல்ல அழைக்கிறார்.

இவ்வாறு கடவுள் சிலரை தமது சிறப்புப் பணிகளுக்கா அழைக்கும் போது அனைத்து கத்தோலிக்கரும் இந்தக் குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்களுக்காகத் தொடர்ந்து செபிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். அறுவடையின் ஆண்டவர் தமது பணிக்கென சிலரை அழைப்பதை ஒருநாளும் நிறுத்த மாட்டார் என்பதில் உறுதிபூண்டு அனைத்துக் கிறிஸ்தவரும் கடவுள் மீதான இந்த நம்பிக்கையில் வளருவதற்கு நாம் செபிக்க வேண்டும்.

இவ்வாறு தமது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.