2009-03-30 15:18:32

தேவையில் இருப்போரின் அருகில் கடவுள் இருக்கிறார், திருத்தந்தை


மார்ச்30,2009. கடவுள் கண்ணால் காணக்கூடாதவராய் இருந்த போதிலும் தேவையில் இருப்போரின் அருகில் அவர் இருக்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.

ஏழைக் குடியேற்றதாரர்கள் அதிகமாக வாழும் உரோம், மலியானாவிலுள்ள இயேசுவின் திருமுகப் பங்குக்கு இஞ்ஞாயிறன்று சென்ற திருத்தந்தை, நமது வாழ்க்கையில் துன்பங்களும் கஷ்டங்களும் இருந்தாலும் இறைவனின் நன்மைத்தனம் என்ற சூரியன் அவற்றிற்குப் பின்னால் இருக்கின்றது என்ற உணர்வில் இயேசுவின் உயிர்ப்பை நோக்கிப் பயணம் செய்வோம் என்றார்.

மழையையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறிய ஆலயத்துக்கு வெளியேயும் கூடியிருந்து திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் கலந்து கொண்ட விசுவாசிகளுக்கு மறையுரையாற்றிய அவர், அயலாருக்கு, குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பிரச்சனைகளை எதிர் கொள்வோருக்கு உதவுமாறும் வலியுறுத்தினார்.

ஆஷ்விச் நாத்சி வதைப்போர் முகாமில் தன்னுடன் இருந்த குடும்பத்தவருக்கு வாழ்வு கொடுப்பதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த புனித மாக்ஸ்மிலியன் கோல்ப், பிறரன்புக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றார் திருத்தந்தை.

சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இக்காலத்தில் காரித்தாஸ் மற்றும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்புகள் மூலம் ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் அப்பங்கு ஆற்றி வரும் சேவைகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் கூறினார்.

இயேசுவின் திருமுகம் அப்பங்கு மக்களின் ஒவ்வொரு செயல்களிலும் ஒளிருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.