2009-03-28 15:46:44

மார்ச் 30 தவக்காலச் சிந்தனை நற்செய்தி யோவா. 8,1-11


இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.

ஒருமுறை ஒரு தாய் தம் மகனை மகாத்மா காந்தியிடம் அழைத்துச் சென்று, இவன் நிறைய இனிப்புகள் சாப்பிடுகிறான், நீங்கள்தான் திருத்த வேண்டும் என்றாராம். அப்போது அவர் அத்தாயிடம் அடுத்தவாரம் கூட்டி வாருங்கள் என்றாராம். அதேபோல் அழைத்துச் சென்ற போது அவர் அப்பையனிடம், இனிமேல் இனிப்பு சாப்பிடாதே என்றாராம். ஐயா, இதை நீங்கள் கடந்த வாரமே சொல்லியிருக்கலாமே என்று அத்தாய் கேட்டபோது அவர் சொன்னாராம் - அப்போது நானும் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்று. அன்பர்களே, ஒருவர் மற்றவருக்கு அறிவுரை சொல்லு முன்னர், அடுத்தவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடு முன்னர் தன்னையே பரிசோதித்துப் பார்ப்பது மிக்க நல்லது. சொற்கள் நீர்க்குமிழிகள், ஆனால் செயல்கள் தங்கத் தகடுகள்.










All the contents on this site are copyrighted ©.