2009-03-28 15:38:58

எய்ட்ஸ் நோய் குறித்த திருத்தந்தையின் கருத்துக்கு மும்பை கர்தினால் ஆதரவு


மார்ச் 28,2009. 64 எய்ட்ஸ் நோயாளர் மையங்களை நடத்தும் இந்திய திருச்சபை தனது அனுபவங்களின் அடிப்படையில் அந்நோய் குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்டின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறினார்.

திருத்தந்தை தனது ஆப்ரிக்கப் பயணத்தைத் தொடங்கிய போது எய்ட்ஸ் நோய் குறித்து தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிராசியாஸ், இந்நோய், நன்னெறி வாழ்க்கை முறைகளின் அடிப்படையில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அனுபவம் உணர்த்துகின்றது என்றார்.

நமது அன்புக்குரிய திருத்தந்தை கத்தோலிக்கப் போதனைகளைத் தெளிவாகச் சொல்லியுள்ளார், இது, திருத்தந்தை ஆறாம் பவுலின் மனித வாழ்வு என்ற அப்போஸ்தலிக்கத் திருமடலிலும் கூறப்பட்டுள்ளது என்ற கர்தினால், இது இந்தியாவுக்கும் பொருந்தும் எனறார்.

இந்திய திருச்சபை, 64க்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளர் மையங்களை நடத்துகின்றது, இந்நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் இங்கிருக்கிறார்கள் என்ற அவர், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை வெறும் மருத்துவத்தை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக வளர்ச்சி குறித்த விவகாரங்களையும் சார்ந்தது என்றார்.

இந்திய திருச்சபையின் 3000 நலவாழ்வு மையங்களில் ஏறத்தாழ 85 விழுக்காடு கிராம மக்களுக்குச் சேவை செய்கின்றது என்பதையும் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.