2009-03-28 15:41:44

இலங்கையில் கடும் சண்டை இடம் பெற்று வரும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் வெளியேறுவதற்கு இராணுவமும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென்ற ஐ.நாவின் கோரிக்கைக்கு அமெரிக்க ஐக்கிய நாடும் பிரிட்டனும் ஆதரவு


மார்ச்28,2009. இலங்கையில் கடும் சண்டை இடம் பெற்று வரும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்கள் வெளியேறுவதற்கு உதவுவதற்கென, இராணுவமும் தமிழ் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென்ற ஐ.நாவின் கோரிக்கைக்கு அமெரிக்க ஐக்கிய நாடும் பிரிட்டனும் ஆதரவு தெரிவித்துள்ளன.

வன்னியில் போர்ப் பகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேற முடியாமல் இருக்கின்றனர் என்று ஐ.நா.முத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், இம்மோதல்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் எதிர் நோக்கி வரும் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதாக ஆம்னெஸ்டி இன்டர்நேனஷல் எனும் சர்வதேச மனித உரிமைகள் கழகம் கவலை தெரிவித்தது.

இதற்கிடையே, அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதற்கும் காயமடைவதற்கும் அரசையும் விடுதலைப் புலிகளையும் குறைகூறியுள்ளன மனித உரிமைகள் மற்றும் உதவி நிறுவனங்கள்.

கடந்த ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,800 அப்பாவி மக்கள் இராணுவத்தினரின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா கூறுகின்றது.

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் உட்பட விடுதலைப்புலிகள் வசம் தற்போது உள்ள 21.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.