2009-03-25 14:47:53

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை நியமிக்க அரசு அனுமதிக்க ஐ.நா வேண்டுகோள்


மார்ச் 25,2009. இலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா. அவைத் தலைவர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்த நவநீதம் பிள்ளை, இலங்கை நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கு இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை எனவும் தெரிவித்த நவநீதம் பிள்ளை, அதை மீண்டும் வலியுறுத்தப் போவதாகக் கூறினார்.

இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண முடியாது. அதை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பதே ஐ.நா.வின் கருத்து என்றும் தெரிவித்த, அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், திருகோணமலை பகுதியில் உணவு நஞ்சாக மாறியதன் விளைவாக ஒருவர் பலியானதுடன் நுற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கென திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.