2009-03-22 19:44:37

அங்கோலா நாட்டின் இளைஞர்களைத் திருத்தந்தை சந்திக்கிறார்.220309.


இம்மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை அங்கோலாவில் உள்ளூர் நேரம் மாலை 4.30 , இந்திய நேரம் இரவு 9.00 மணிக்கு திருத்தந்தை இளைஞர்களைச் சந்தித்து உரை நிகழ்த்தினார் .

திருத்தந்தை இளைஞர்களை தோஸ் கோக்கெய்ரோஸ் என்ற பெரிய விளையாட்டு அரங்கத்தில் சந்தித்தார் . கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாது இளைஞர்களும் , குழந்தைகளும் தாய்மார்களும் 30, 000 க்கும் அதிகமானோர் அங்குக் குழுமியிருந்தார்கள் .



இளைஞர்கள் கூடியிருந்த விளையாட்டு அரங்கம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் . அந்த அரங்கம்தான் அங்கோலா நாட்டின் முதல் விளையாட்டு அரங்கம் . தோஸ் கோக்கெய்ரோஸ் என்ற பெயருக்குத் தமிழில் தென்னந்தோப்பு என்பது பொருளாகும் . அது 1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது . அத்திடலில் முக்கியமான விளையாட்டுக்கள் அரங்கேறியிருக்கின்றன .ஒரே சமயத்தில் அந்த அரங்கத்தில் 20,000 பேர் கூடியிருக்க முடியும் . இந்த அரங்கம் சித்தாதே ஆல்டா என்ற இடத்தில் இருக்கிறது . இது குடியரசுத் தலைவரின் மாளிகைக்கு அருகில் இருக்கிறது .





இசையும் , நாட்டியமும் , திருத்தந்தைபற்றிய ஒளி ஒலிக் காட்சியும் இளைஞர் பேரணிக்கு விருந்து படைத்தன . அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே மேள தாள முழக்கத்தோடு , வண்ண ,வண்ண ஆடைகளோடு குழுமியிருந்தார்கள் . இது மஞ்சள் , வெள்ளைக் கூடாரத்துக்குள் இருந்த திருத்தந்தையின் கவனத்தை ஈர்த்தது . பொங்கி வழிந்த மகிழ்ச்சி வெள்ளத்தினிடையே அங்கோலாக் கலாச்சாரத்தின் பல வண்ணத் தோற்றம் எடுப்பாக நாட்டின் பல்வேறுவகையான பாரம்பரியச் சிறப்பை பிரதிபலித்துக் காட்டியது .





திருத்தந்தையின் இளைஞர்களுக்கான உரை 13 .



இளைஞர்கள் தீர்க்கமான முடிவுகளைத் துணிவோடு எடுக்கக் கூடியவர்கள் . வாழ்க்கையில் முக்கியமான உறுதிப்பாடுகளை எடுக்கக் கூடியவர்கள் . அது வாழ்க்கைத் துணவரைத் தேர்ந்து கொள்வதாக இருந்தாலும் சரி , துறவு நிலை பூண்டு ஆண்டவனுக்கே தம் வாழ்வைத் தானமாகக் கொடுப்பதாக இருந்தாலும் சரி, அஞ்சாது சவால்களைச் சந்திக்கும் ஆற்றல் உடையவர்கள் என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இன்பம் எங்கே , இன்பம் எங்கே என்று தேடு எனக்கூறும் ஒருவகைத் தவறான போக்குடைய கலாச்சாரம் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்குத் திட்டமிட்டு தீர்க்கமான முடிவை எடுக்கவிடாமல் அச்சுறுத்தி , தடுப்பதாகத் திருத்தந்தை வருத்தத்தோடு தெரிவித்தார் .



ஆனால் தீர்க்கமான குறிக்கோள்களை நோக்கிப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு ஆண்டவனே துணையாக வருகிறார் . விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு நூலிலிருந்து மேற்கோள் காட்டி - இதோ நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் - என்பதைக்கூறி வாழ்வைக் கடவுள் வசந்தமாக்குவார் என திருத்தந்தை ஊக்கமூட்டினார் .



அரங்கத்தில் கூடியிருந்தவர்களுள் 7 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டில் நடந்த நாடகத்தை ஞாபகப்படுத்த , நடந்து முடிந்த உள்நாட்டுப்பூசலின் விளைவாக அனாதைகளாக விடப்பட்டவர்கள் , உடல் ஊனமுற்றவர்கள் அங்கே இருந்தனர் . போராலும் , கண்ணிவெடிகளாலும் தாக்கப்பட்டு நம்மிடையே பல ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோர் இருப்பதைப் பார்க்கிறேன் . இறந்துபோன உங்கள் உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் நீங்கள் சிந்திய கண்ணீர் என் மனக்கண்களில் நிழலாடுகிறது என்றார் திருத்தந்தை .



வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கும் இளைஞர்களுக்கு திருத்தந்தை ஆறுதல் கூற விழைந்தார் . அவரே கேள்விகளை எழுப்பினார் . உங்கள் மனங்களில் உள்ள ஐயப்பாடுகள் எனக்குத் தெரிகின்றன .- அனைத்தையும் புதியது ஆக்குவதாக இறைவாக்குக் கூறுகிறதே . நாங்கள் இறைவாக்கை நம்புகிறோம் . ஆனால் கடவுள் எப்பொழுது இவற்றையெல்லாம் நிறைவேற்றுவார் . எப்போது புதுப்பிப்பார் .-- இயேசு கூறும் பதில் இதுவே எனக்கூறிய திருத்தந்தை , யோவான் நற்செய்தியில் காணும் பகுதியை மேற்கோள்காட்டினார் .-- நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம் .கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் . என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் . என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன . அப்படி இல்லையெனில் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் என்று சொல்லியிருப்பேனா .-



ஆனால் இளைஞர்களே நீங்கள் இது எப்போது நிகழும் எனக் கேட்கிறீர்கள் . இதே கேள்வியை திருத்தூதர்களும் இயேசுவிடம் கேட்டார்கள் என்றார் திருத்தந்தை . --அதற்கு இயேசு என் தந்தையின் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல . ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்-- என்பதைத் திருத்தந்தை மேற்கோள் காட்டி நல்ல காலம் வரும் எனக் கூறினார் . இயேசு நம் கேள்விகளுக்குப் பதில் தராமல் இல்லை எனக் கூறினார் . இயேசு ஒன்றை உறுதியாகக் கூறுகிறார் . நம் வாழ்வில் மாற்றம் என்பது நம் உள்ளத்திலிருந்து வருகிறது . நாம் மேலிருந்து வல்லமையைப் பெற்றுக் கொள்வோம் . நம் எதிர் வரும் காலத்தை மாற்றும் சக்தி நம்மிடமே உள்ளது எனக் கூறினார் திருத்தந்தை .



நம்பிக்கையால் நிறைந்த , உற்சாகத்தால் நிறைந்த , வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்கும் இளைஞர்களுக்கு , வருங்காலம் என்பது கடவுளே என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .-- கடவுள் நம் கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார் . இனிமேல் சாவு இராது . துயரம் இராது . அழுகை இராது .துன்பம் இராது .முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன-- என்ற யோவானின் திருவெளிப்பாடு நூலிலிருந்து இறைவாக்கைத் திருத்தந்தை மேற்கோள் காட்டினார் . மேலும் விதைகளிலிருக்கும் சக்தியிலிருந்து புதிய வாழ்வு உருவாவதைப் போல , கடவுளின் ஆவியானவர் நம் வாழ்விலும் மாற்றங்களைத் தந்து புதியனவாக மாற்றுவார், வளமாக்குவார் எனத் திருத்தந்தை . ஊக்கமூட்டினார் . இயேசு தேவ நற்கருணையில் தம்மையே நமக்குத் தருகிறார். நாம் நம்மை அன்பைப் இயேசுவின் பொருட்டு பிறர் வாழக் கொடுப்போம் . கடவுளோடும், மற்றும நாம் ஒருவர் ஒருவரோடும் கலந்து பேச வேண்டும் . நம் கடவுள் தந்தையின் விருப்பப்படி நாம் நம்மையே பிறர் வாழக் காணிக்கையாக்குவதற்கு நம்முடைய தற்காலக் கலாச்சாரம் துணை புரியாது .



இளைஞர்களே உங்களுக்குள்ளேயே சக்தி இருக்கிறது .-- நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறார் . என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே . நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார் . ஏன் அவற்றைவிடப் பெரியனவும் செய்வார் . ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ,-- என இயேசு கூறிய மொழிகளை தூய யோவான் நற்செய்தியிலிருந்து திருத்தந்தை மேற்கோள் காட்டி விளக்கினார் . எனவே தாராள இதயம் உள்ள நீங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க அஞ்சவேண்டாம் எனத் திருத்தந்தை இளைஞர்களை ஊக்குவித்தார் . சவால்களைச் சந்திக்க அஞ்சாதீர்கள் என்றார் . வாழ்வுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள் . அப்போது கிறிஸ்தவக் கலாச்சாரம் தீவுகளிலும் .பாலைவனங்களிலும் , நம் நாட்டிலும் மலரும் என்றார் திருத்தந்தை . இதுவே தகுதியுள்ள வாழ்க்கை . நான் இதை உங்கள் முன் வைத்துப் பரிந்துரை செய்கிறேன் என்று திருத்தந்தை தோஸ் கோக்கெய்ரோஸ் அரங்கத்தில் கூடியிருந்த 30 ஆயிரம் இளைஞர்களுக்கு சவாலாக அறைகூவல் விடுத்தார் .



தம் சந்திப்பின் முடிவில் திருத்தந்தை வத்திக்கான் தூதர மாளிகைக்கு உள்ளூர் நேரம் 6 மணிக்கு , இந்திய நேரம் இரவு 10.30 மணிக்குக் காரில் சென்றார் .








All the contents on this site are copyrighted ©.